Wednesday, January 23, 2013


அகண்ட பிரபஞ்சத்தில்
ஆயிரமாயிரம் ஆசைகள்;
அடுத்த நொடியை வாழும்
பிரயாசையில் அலையடிக்கும் ஆசைகள்.

என் கண்களை
இருளாக்கி விட முடியும்-
என் கனவுகளை அல்ல!

இலட்சியங்கள் உள்ளவரை
இலக்குகளுக்கு முடிவேது!
இல்லாத ஒன்றைத் தான்
இன்றியமையாததாக்கி விட்டிருக்கிறது
ஒவ்வொரு கண்டுபிடிப்பும்!
இல்லை என்று ஒன்றுமில்லை;
இருக்கிறது தேடுங்கள் என்ற
மெய் கண்டவன் ஞானி!
மெய்ப்பிப்பவன் விஞ்ஞானி!

ஒளியிழந்த கண்களின் பார்வையை
ஒரு ஜோடி கைகளுக்கும்
கால்களுக்கும், காதுகளுக்கும் கொடுத்துவிட்டு தன்னம்பிக்கையுடன் நடப்பவர்களின்
கைநுனியில் இருக்கிறது வாழ்க்கையின்
நன்னம்பிக்கை முனை!
  
கதகதப்பான வெயிலின் சூட்டில்
கண்ணிழந்தோர்க்கும் கதிர் உண்டெனில்
காண்பதைத்தான் காட்சியென
யார் வந்து வரையறுக்க?

புறக்கண்கள் பொய் சொல்கையிலும்
அகக்கண்கள் மெய் சொல்லும்-
புரிதலில் திறந்த விழிகளில்
புத்தொளியுடன் வாழ்க்கையைத் தொடர்பவரை
குருடர் எனச் சொல்வதற்கு
நீங்கள் யார்?
நான் யார்?
இந்த உலகம் தான் யார்?

இருட்டும் வறட்சியும்
மருட்டும் வறுமையும்
திருட்டும் வன்முறையும்
மிரட்டிப் பார்க்கலாம்!
எம் வாழ்வை வேண்டுமானால்
புரட்டிப் போடலாம்!
எம் நம்பிக்கையை அல்ல!
ஏனெனில்……
என் கண்களை
இருளாக்கி விட முடியும்-
என் கனவுகளை அல்ல!

எத்தனை இடர் கண்டபோதும்
எழுந்து நிற்கும் மானுடம்!!!!!