Sunday, March 31, 2013

பயணங்கள் முடிவதில்லைVII- தனிமை


பசித்த வேளையில் உணவு, அலுப்பு வேளையில் ஓய்வு, கண்கள் கொஞ்ச ஆரம்பிக்கும் வேளையிலேயே உறங்கப் போகும் வாய்ப்பு, நோய் பகிர முடியாவிட்டாலும், அது தரும் பிணி குறைக்க முடியாவிட்டாலும், ஆதுரமாய் ஒரு குரல், அன்பாய் ஒரு கரம், சோர்வு தீர்க்க ஒரு மடி, அழுகை நேரத்தில் ஆறுதலாய் அருகில் குடும்பம் எனக் கொடுப்பினைகள் எத்தனை பேருக்கு வாய்க்கும் எனத் தெரியவில்லை.
சாலையோரத்தில் கோணிப்பைகள் நிறைய குப்பைக் காகிதங்களோடு அழுக்கான ஆடையில் சுருண்டு படுத்திருக்கும் அந்த நடுத்தர வயது மனிதரையும், அவர் மகன் வயதில் அவருடன் சற்றேறக்குறைய சமகால அழுக்குடன் சுற்றிக் கொண்டிருக்கும் சிறுவனையும் பார்க்கையில் இவர்கள் யார் எனும் கேள்வியைத் தாண்டி, தனிமையில் இந்த இருவருக்கும் பேசிப் பகிர்ந்து கொள்ள என்ன இருக்கும் எனும் கேள்வியே அதிகம் தோன்றுவதுண்டு. இவர்களுக்கென குடும்பமும், நண்பர்களும், ஊரும் வீடும் இருக்குமா எனத் தெரிந்து கொள்ள முடியாத துணைக் கேள்விகள் எழுவது தனி. ஒன்றாகச் சுற்றினாலும் உறங்குகையில் தனித்தனியே எழும் இவர்களின் கனவு எதைப் பற்றியதாக எவருடன் இருக்கும்? கேள்விகள் தொடரத் தொடர கடந்து போய்க் கொண்டுதான் இருக்கிறோம் இப்படிப் பட்ட மனிதர்களை.

தலையில் பையுடன் நடையாய் நடந்து கொண்டிருக்கும் அந்த மனநலம் பாதித்த பெண்மணியின் பின்னணி என்னவாக இருக்கும்? அவர் கணவன் பிள்ளைகள் என்னவாகியிருப்பார்கள்? இவரை ஏன் மொழி புரியாத, மக்கள் தெரியாத ஒரு தென் மாநில ரயில் நிலையத்தில் விட்டுப் போயிருப்பார்கள்? அவர் ஏன் நான்கு கிராமங்கள் தாண்டி அந்த கோயில் வாசலை தன் அன்றாட நடை பயணத்தின் எல்லையாக வைத்திருக்கிறார்? அந்த கோயில் வாசலில் தன் தலைச் சுமைப்பையை சற்று இறக்கி வைத்து அமரும் அவர் ஏன் ஒருநாளும் அந்த கோயிலுக்குள் செல்லவே இல்லை? யாருடனும் ஒரு வார்த்தை பகிராத அவர் பசிக்கென்ன செய்வார்? தொடர்நடையில் கடந்து போகும் அந்த பெண்மணியின் தனிமை எப்படிப்பட்டது? தவமா? வரமா? சாபமா? சத்தியமாகப் புரியவில்லை.

வயதான காலத்திலும் காலையில் நான்கு வீட்டில் வாசல் தெளித்து தன் உணவுக்கான சம்பாத்தியத்தை தேடிக்கொண்டு, பிச்சைக் கோலத்தில் சுயமரியாதையுடன், தெருவோர கடை வாசல்களில் படுத்துறங்கும் மூதாட்டிகளின் வாழ்க்கையும், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட காலுடன் சாலையோர மின்கம்பத்தடியில் படுத்துக் கிடக்கும் காவி உடை முதியவரின் வாழ்க்கையும் அவர்களின் முகத்தில் ஓடும் வரிகளை விடவும் அதிக வலியுடையதாகவும், படிப்பினை மிக்கதாகவும் இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை எனப்படுகிறது. அதிலும் தாமதமாக அலுவலகத்திலிருந்து நான் திரும்பிய ஓர் இரவில், கடந்து செல்லும் வாகனங்களின் வெளிச்சம் மற்றும் ஒலிப்பான்களின் அலறலின் நடுவில் பூட்டிய கடையின் வெளியில், காலடியில் ஒரு கொசுவர்த்திச் சுருளைப் பற்ற வைத்து விட்டு, நெற்றிக்குத் திருநீறு பூசிக்கொண்டு மிச்சத்தை கிட்டத்தட்ட ஒரு கை நிறைய வாயில் கொட்டிக் கொண்டு படுக்க ஆயத்தமான அந்த பாட்டியின் முகம் கண்ணிலேயே நிற்கிறது.

சென்ற வாரத்தில் ஓர் நாள். கடன் வசூலுக்காக தொடர்ந்து மூன்று நாட்களாகத் தொடர்பு கொள்ள முயன்றும், ஒரு வாடிக்கையாளரின் கைபேசி அணைத்து வைக்கப் பட்டிருக்க, அறிந்த வேறொருவரைத் தொடர்பு கொண்டு கடனாளியை வரச்சொல்லுமாறு பணித்தேன். அவர் வரமாட்டார் மேடம் என்றார் நண்பர். ஏன் என்றேன். அவருக்கு ஒரு பிரச்சனை மேடம். மனம் வேகமாக கணக்கிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன், கடன் வாங்கியவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர் கடும் விரக்தியில் அதிகம் மனசைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததிலிருந்து, ஏதோ காதல் விவகாரம் என்று புரிந்தது. நல்ல உழைப்பாளியான இளைஞன் என்பதால், தலை குனிந்தவாறு, கண்களில் வெளிவரத் தயாராயிருந்த கண்ணீருடன் நின்றிருந்தவரிடம், இது எல்லாம் கடந்து போகும். நன்றாக உழைத்து முன்னுக்கு வாருங்கள். நல்லதே நடக்கும். கடனை ஒழுங்காக கட்டி, வேலையைப் பாருங்கள் என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தேன். பையன் ஏதேனும் அவசரப்பட்டுவிட்டானோ என்று பதறி என்ன ஆயிற்று என்றேன். எல்லாம் ஆயிற்று மேடம். அவரால் ஊரே இரண்டு பட்டிருக்கிறது. ஊரில் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்றார்.

முதல் நாள் தான், ஒரு தந்தை, என் மகனிடம் கேட்டு விடாதீர்கள். அவனுக்கு திருமணம் முடிந்து நான்கு வாரங்கள் ஆகின்றன. வேறொருவருடனான திருமணத்திற்காக பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து எகிறிக் குதித்து, ஓடி வந்து நின்றவளை ஏமாற்ற மனமில்லாமல் காவல் நிலையம், மிரட்டல்கள் எல்லாம் தாண்டி அவன் திருமணம் முடித்துக் கொண்டிருக்கிறான். தலை நிமிர்ந்து பேசாதவனுக்கு எப்படித்தான் துணிச்சல் வந்ததோ எனப் புலம்பிவிட்டுப் போனார். இப்பொழுது இது வேறு கதை.

அம்மாவும், தம்பியும், தங்கையும் அருகில் உறங்கிக் கொண்டிருக்க, கதவை வெளியில் தாழ்ப்பாளிட்டு விட்டு, தனிமையில் காதலனைத் தேடி ஓடிய இந்த பெண்ணின் உணர்வுகளையும், தனித்துக் காத்திருந்த காதலனின் உணர்வுகளையும், மகனின் செயலுக்காகக் காவல் நிலையத்தில் நான்கு நாட்கள் தனிமையில் கழித்த தந்தையின் உணர்வுகளையும், வீட்டில் தனித்திருந்த தாயின் உணர்வுகளையும், பெண்ணின் நிலைமையை இந்த நிமிடம் வரை அறியாத தாயின் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வுகளையும் எதைக் கொண்டு விளக்குவது அல்லது விளங்கிக் கொள்வது? தலை சுற்றிப் போகிறது.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பல்தரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தாலும், தன் சக ஊழியர்களுடன், தொழில் சார்ந்தவர்களுடன், வாடிக்கையாளர்களுடன் அரவணைத்துப் போக, பேசிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம் இருந்தாலும், அவர்களை சதா சர்வ காலமும் ஒரு தனிமை பின்னி இருப்பதை எவரேனும் அரிய வாய்ப்பில்லை. எல்லோர் பிரச்சனையையும் செவிமடுத்து சரிசெய்ய வேண்டிய கடமையுள்ளவர்கள், அதைச் செவ்வனே செய்து முடிப்பவர்கள், தங்கள் சோகங்களை, சுமைகளை, அழுத்தங்களை, நலமின்மையை எவருடனும் பகிர்வதற்கு நேரமின்றி, உறக்கமற்ற இரவுகள்தோறும் தங்கள் தனிமையுடன் உறக்கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இந்நேரம் தனிமையில் என்ன யோசித்துக் கொண்டிருப்பார் என்று எவருக்குத் தெரியும்? தனிமை சிலருக்கு மட்டுமே வரம் தரும் தவம்.

அந்த மனிதரை எனக்கு சில மாதங்களாகத் தெரியும். கழுத்துப் பட்டையுடன், வலி சிந்தும் புன்னகையுடன் ஆனால் அசாத்திய அறிவு பொருந்திய கண்களுடன் எதிரில் வந்தமர்ந்த அவருடன் நிகழ்ந்த முதல் சந்திப்பு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. வங்கி சார்ந்த எங்கள் பேச்சின் இடையில், அவர் ஒரு புற்று நோயாளி என்றறிந்தேன். மாதந்தோறும் தொடரும் புற்றுநோய்க்கான கடுமையான மருத்துவ முறைகளைத் தாண்டி, உண்ண முடியாத உணவுக்குப் பதிலாக சாப்பாட்டுத்தட்டை நிரப்பும் மாத்திரைகளைத் தாண்டி, அவரால் எப்படி இத்தனை நம்பிக்கையுடன் புன்னகைக்க முடிகிறது என்று வியப்பு மேலிட்டது. ஒரு ஆடிட்டராக மிகவும் வெற்றிகரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அவருக்கு கட்டிய மனையாளோ, பெற்ற பிள்ளைகளோ கூடத் தற்பொழுது துணையில்லை. ஒரு தருணத்தில் வலியும், வேதனையும், நோயும், நாம் உயிராகக் கருதுபவர்களிடமிருந்து கூட நம்மைத் தனிமைப் படுத்தி விடுகின்றன. முதுகுத் தண்டின் முக்கிய பகுதிகளை புற்று தின்றுவிட, வெளி உலகத்துக்குத் தன் நம்பிக்கை நிறைந்த புன்னகையை மட்டுமே தந்து கொண்டிருக்கும் அம்மனிதருக்கு, உற்றாரும் துணையில்லாமல், தன்னை ஆட்கொண்ட புற்று நோயுடன், தனிமைப் படுத்தப்பட்ட இரவுகள் எவ்வாறு இருக்கும் என யோசிக்கவே பயமாக இருக்கிறது.
 அந்த நெகிழ்ச்சியான முதல் சந்திப்பின் பிறகு சற்றே நீண்ட இடைவெளிகளில், மூன்று முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். சந்திப்பின் முடிவில் விடைபெறும் ஒவ்வொரு முறையும், இறைவன் அனுமதித்தால் மீண்டும் சந்திப்போம் என்றே அவர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு சந்திப்பின்போதும் கடவுளைக் காண்பது போலத்தான், தங்களைக் காண்பதும் என்றுதான் நான் அவரை வரவேற்கிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது. தன்னம்பிக்கையை, உயிர்த்திருத்தலின் நம்பிக்கையை, வலியைத் தாங்கிக் கொண்டு புன்னகையை வழிய விடும் நம்பிக்கையை கடவுளாகத்தான் காணப் பிடித்திருக்கிறது எனக்கு. அவரை மீண்டும் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையை அவரின் வாழ்வின் மீதான நம்பிக்கையே அழுத்தமாக விதைக்கிறது.
மன அழுத்தம் அதிகமாகி தனிமையில் விழித்துக் கிடக்கும் இரவுகளில் எல்லாம், இந்த மனிதரின் வலி மிகுந்த தனிமை இரவுகள் பற்றிய நினைவே என்னை மீட்டெடுக்கின்றன. அவர் வாழ்க.
சேர்ந்து பயணிப்போம்.
பயணங்கள் முடிவதில்லை!

Thursday, March 21, 2013

What India speaks on a burning Global issue?



புதுடில்லி: இலங்கைக்கு எதிராக, பார்லிமென்டில் தீர்மானம் தாக்கல் செய்வது குறித்தும், அமெரிக்காவின் தீர்மானத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காகவும், நேற்று இரவு, டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரும்பாலான கட்சிகள், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தன. இப்பிரச்னை, மத்திய அரசுக்கும், தி.மு.க.,விற்கும் உள்ள பிரச்னை என, பெரும்பாலான எதிர்கட்சிகள் தெரிவித்தன. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இருகட்சிகள் மட்டுமே தீர்மானம் கொண்டுவர ஆதரவு தெரிவித்தன.

ரேவதி ராமன் சிங் (சமாஜ்வாதி) 
இலங்கை நமக்கு நட்புநாடு, இதற்கு எதிரான தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்றக்கூடாது. 1962ல், சீனா நம்மீது போர் தொடுத்தபோது, நமக்கு இலங்கை உதவியாக இருந்துள்ளது. அப்சல் குரு தொடர்பாக, பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் நிராகரித்துள்ள நிலையில், நட்புநாடான இலங்கைக்கு எதிராக ஏன் தீர்மானம் கொண்டு வரவேண்டும்? தேசிய நலன் கருதியும், இலங்கையில், தமிழர் நலன் கருதியும்தான் இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
சரத்யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்)
இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்காக, இந்தியா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கைக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) : 
இந்த பிரச்னை, மத்திய அரசுக்கும், தி.மு.க.,விற்கும் உள்ள பிரச்னை, இதனை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.,): 
தி.மு.க., மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்னை தொடர்பாக, அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்.

மன்மோகன் ஆலோசனை
முன்னதாக, அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா என்ன நிலையை மேற்கொள்ள வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், சிதம்பரம், சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன், வெளியுறவு அமைச்சக செயலர், ரஞ்சன் தேசாய், ஐ.நா.,வுக்கான, இந்திய பிரதிநிதி, திலீப் சின்கா உள்ளிட்டோர், பங்கேற்றனர்.
..................................................................................................................................................................



சென்னை: ""மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும், தி.மு.க., விலகிக் கொள்ளும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று திடீரென அறிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று, நிருபர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு: இலங்கைத் தமிழர் பிரச்னையில், செல்வா காலந்தொட்டு, அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும், தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும், தி.மு.க., குரலெழுப்பி வந்துள்ளது. இலங்கையில், இனப்படுகொலை நடத்தப்பட்டது, உலக நாடுகளின் விவாதத்திற்கு உரியதாகி விட்டது. இவைகளையெல்லாம் ஐ.நா., சபையிலும், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதிநெறியோடு ஆராய்ந்து பார்த்து, அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வர் என, எதிர்பார்த்தோம்.

ஆனால், அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்குகே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோத செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை, இன உணர்வுள்ள எந்த தமிழனாலும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க., முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் மத்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே, இலங்கை தமிழருக்கு எந்த வகையிலும், பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பின் மத்திய ஆட்சியில், தி.மு.க., நீடிப்பது தமிழினத்திற்கு இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும் தி.மு.க., உடனடியாக விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:


* இனிமேல் பிரச்னை அடிப்படையில், மத்திய அரசுக்கு ஆதரவு தருவீர்களா?


பொதுவாக பிரச்னை அடிப்படையில் ஆதரிப்பது என்பது, எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கிற முறைதானே!


* அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?


எதுவும் கிடையாது.


* "ஆட்சிக்கு மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம்' என, ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?


அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.


* உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பின், மத்திய அரசிலிருந்து உங்களுக்கு எதாவது தகவல் வந்ததா?


பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல்.


* இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? 2009ம் ஆண்டிலேயே நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதே?


நாங்கள், 2009ம் ஆண்டில் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.


* பொதுவாக அப்படியொரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?


"பொது' என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.


* "டெசோ'வின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?


"டெசோ' சார்பில் ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.


* நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வராத பட்சத்தில், மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?


தற்போது, ஐ.நா., சபையே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன்; மத்திய அரசும் கூட.


* இலங்கை அரசுக்கு, 2009ல் மத்திய அரசு உதவி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?


அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக அமையலாம்.


* அப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?


அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.


* பார்லிமென்டில், நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?


அதற்கு நேரம் அதிகம் இருக்கிறது. இன்று (நேற்று) மாலை வரையில் நேரம் இருக்கிறது; நாளைக்கும் இருக்கிறது. 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் பார்லிமென்டில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம், திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.


* தி.மு.க.,வின் மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?


இன்று அல்லது நாளை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.


விலகல் எதிர்பாராதது: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேட்டி: இலங்கை பிரச்னையில், காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கை வாழ் தமிழர்களுடைய உரிமைகள், மறுகுடியமர்த்தல், பயமற்ற வாழ்க்கை முறை இவைகளுக்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, கடந்த முறை இந்தியா ஆதரித்தது. இந்த முறையும் ஆதரிக்கும். இதற்கிடையில் மத்திய அரசிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகுவதாக கருணாநிதி கூறியுள்ளார். இது எங்களுக்கு ஒரு எதிர்பாராத முடிவாக உள்ளது. இலங்கை விவகாரத்தில், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பொதுமக்களையும், தனிமனிதர்களையும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தமிழ் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் மாறுபட்ட செயல். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.


நாடகம் அம்பலமாகும்: இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் பேட்டியில் கூறியதாவது: இலங்கை தமிழர்களுக்கு, துரோகத்துக்கு மேல் துரோகத்தை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில், செய்த பாவத்துக்கு பிராயசித்தமாக, ஐ.மு., கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறியுள்ளது; இதை வரவேற்கிறோம். இதற்கு, உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றது நாடகமென்றால், அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். ஒருவர் நீண்ட நாளைக்கு ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. இவ்வாறு, தா.பாண்டியன் கூறினார்.


2009ல் செய்திருக்கலாம்: தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: ஐ.நா., சபையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு, உரிய மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு முன்வராததால், ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றுள்ளது. தி.மு.க.,வின் முடிவை, பா.ஜ., வரவேற்கிறது. 2009ம் ஆண்டு, போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, இம்முடிவை எடுத்திருந்தால், ஈழத் தமிழர்கள் உயிரை காப்பாற்றி இருக்கலாம். தமிழகத்தில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தால் தான், மத்திய அரசு பணியும், கடந்த காலங்களை மறந்துவிட்டு, தமிழக கட்சிகள் இதற்காக, இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
...................................................................................................................................................................

Friday, March 8, 2013


நான்
அசோகவனத்தில் தவமிருந்தேன்.
அரசனாகவே என்னை
அக்னிக்கு வார்த்தாய்!

அபயம் எனக் கைகூப்பினேன்
அண்ணன் பார்த்துக் கொள்வான் என
தரையில் கிடந்த பகடையுடன்
தலை கவிழ்ந்து நின்றாய்!

அலையடிக்கும் நதியோரம் என்னை
அலைக்கழிய விட்டு விட்டு
அரசக் கட்டில் ஏறியவுடன்
அணிவித்த ஆசை மோதிரத்தையும்
அவசரமாய் மறந்து போனாய்!

அன்பு மகனை என்
அருகினில் தூங்கவிட்டு
அரண்மனையைத் துறந்து
அரசமரத்தடி சேர்ந்தாய்!

அடுப்படியில் நான்
வெந்து கிடந்தேன்
அரை உப்பிற்காய்
அறைந்து விட்டுச் சென்றாய்!

அலுவலகத்தில் நான்
அயராது உழைத்தேன்.
என் ஊதியத்தைக் கூட
எனக்கு எண்ணித்தான்
செலவுக்குக் கொடுத்தாய்!

அடுப்படியிலும் அலுவலகத்திலுமாய் நான்
இடுப்பொடிந்த வேளையிலும் உன்
சந்தேகச் சாக்கடைக்குள் என்னைச்
சதா மூழ்கடித்தாய்!

அமிலத்தால் என்னை
அபிக்ஷேகம் செய்தாய்!
அகால இரவில்
அலங்கோலப் படுத்தினாய்!

அவமானங்களால் எனக்கு
அர்ச்சனை செய்தாய்!
ஆனால் என்
தன்மானத்தைத் தட்டி
எழுப்பி விட்டாய்!

யுகங்கள் கடந்தாலும்
யூகங்களால் என்னை
நீ எரித்தாலும்
யுகங்கள் தாண்டி
கனன்று கொண்டே
இருக்கின்றது எனக்குள்
ஒரு தீப்பொறி!

அசோகவனமோ!
அயோத்தியோ!
அஸ்தினாபுரியோ!
அணையாமல்தான் இருக்கின்றது
இன்னும் அந்த நெருப்பு!

நான் பெண்!
உயிர்களை உருவாக்குபவள்!
நான் சக்தி!
உலகத்தை உய்விப்பவள்!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!

Tuesday, March 5, 2013

Love You Appa n Amma! Many more Happy Returns of the Day. Happy Wedding anniversary!