புதுடில்லி: இலங்கைக்கு எதிராக, பார்லிமென்டில் தீர்மானம் தாக்கல் செய்வது குறித்தும், அமெரிக்காவின் தீர்மானத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காகவும், நேற்று இரவு, டில்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெரும்பாலான கட்சிகள், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தன. இப்பிரச்னை, மத்திய அரசுக்கும், தி.மு.க.,விற்கும் உள்ள பிரச்னை என, பெரும்பாலான எதிர்கட்சிகள் தெரிவித்தன. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இருகட்சிகள் மட்டுமே தீர்மானம் கொண்டுவர ஆதரவு தெரிவித்தன.
ரேவதி ராமன் சிங் (சமாஜ்வாதி)
இலங்கை நமக்கு நட்புநாடு, இதற்கு எதிரான தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்றக்கூடாது. 1962ல், சீனா நம்மீது போர் தொடுத்தபோது, நமக்கு இலங்கை உதவியாக இருந்துள்ளது. அப்சல் குரு தொடர்பாக, பாகிஸ்தான் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் நிராகரித்துள்ள நிலையில், நட்புநாடான இலங்கைக்கு எதிராக ஏன் தீர்மானம் கொண்டு வரவேண்டும்? தேசிய நலன் கருதியும், இலங்கையில், தமிழர் நலன் கருதியும்தான் இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
சரத்யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்)
இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்காக, இந்தியா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கைக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
குருதாஸ் தாஸ்குப்தா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) :
இந்த பிரச்னை, மத்திய அரசுக்கும், தி.மு.க.,விற்கும் உள்ள பிரச்னை, இதனை அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.,):
தி.மு.க., மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்னை தொடர்பாக, அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்.
மன்மோகன் ஆலோசனை
முன்னதாக, அமெரிக்காவின் தீர்மானத்தில், இந்தியா என்ன நிலையை மேற்கொள்ள வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள், சிதம்பரம், சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன், வெளியுறவு அமைச்சக செயலர், ரஞ்சன் தேசாய், ஐ.நா.,வுக்கான, இந்திய பிரதிநிதி, திலீப் சின்கா உள்ளிட்டோர், பங்கேற்றனர்.
..................................................................................................................................................................
சென்னை: ""மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும், தி.மு.க., விலகிக் கொள்ளும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று திடீரென அறிவித்தார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று, நிருபர்களை கருணாநிதி சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பு: இலங்கைத் தமிழர் பிரச்னையில், செல்வா காலந்தொட்டு, அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும், தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும், தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும், தி.மு.க., குரலெழுப்பி வந்துள்ளது. இலங்கையில், இனப்படுகொலை நடத்தப்பட்டது, உலக நாடுகளின் விவாதத்திற்கு உரியதாகி விட்டது. இவைகளையெல்லாம் ஐ.நா., சபையிலும், ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதிநெறியோடு ஆராய்ந்து பார்த்து, அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வர் என, எதிர்பார்த்தோம்.
ஆனால், அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்குகே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோத செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை, இன உணர்வுள்ள எந்த தமிழனாலும் ஏற்றுக் கொள்ள இயலாது. எனவே, குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க., முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் மத்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே, இலங்கை தமிழருக்கு எந்த வகையிலும், பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பின் மத்திய ஆட்சியில், தி.மு.க., நீடிப்பது தமிழினத்திற்கு இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும் தி.மு.க., உடனடியாக விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
* இனிமேல் பிரச்னை அடிப்படையில், மத்திய அரசுக்கு ஆதரவு தருவீர்களா?
பொதுவாக பிரச்னை அடிப்படையில் ஆதரிப்பது என்பது, எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கிற முறைதானே!
* அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?
எதுவும் கிடையாது.
* "ஆட்சிக்கு மதவாத சக்திகள் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம்' என, ஏற்கனவே சொல்லியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால், மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?
அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.
* உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பின், மத்திய அரசிலிருந்து உங்களுக்கு எதாவது தகவல் வந்ததா?
பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல்.
* இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? 2009ம் ஆண்டிலேயே நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டதே?
நாங்கள், 2009ம் ஆண்டில் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லை.
* பொதுவாக அப்படியொரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?
"பொது' என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.
* "டெசோ'வின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
"டெசோ' சார்பில் ஏற்கனவே நடந்த செயல்பாடுகள் மேலும் தொடரும்.
* நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களைக் கொண்டு வராத பட்சத்தில், மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?
தற்போது, ஐ.நா., சபையே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன்; மத்திய அரசும் கூட.
* இலங்கை அரசுக்கு, 2009ல் மத்திய அரசு உதவி செய்ததாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக அமையலாம்.
* அப்படிப்பட்ட நிலையில், மத்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?
அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.
* பார்லிமென்டில், நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?
அதற்கு நேரம் அதிகம் இருக்கிறது. இன்று (நேற்று) மாலை வரையில் நேரம் இருக்கிறது; நாளைக்கும் இருக்கிறது. 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் பார்லிமென்டில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம், திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
* தி.மு.க.,வின் மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?
இன்று அல்லது நாளை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.
விலகல் எதிர்பாராதது: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேட்டி: இலங்கை பிரச்னையில், காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் அக்கறை செலுத்தி வருகிறது. இலங்கை வாழ் தமிழர்களுடைய உரிமைகள், மறுகுடியமர்த்தல், பயமற்ற வாழ்க்கை முறை இவைகளுக்கு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஐ.நா., சபையில் அமெரிக்கா கொண்டு வருகிற தீர்மானத்தை, கடந்த முறை இந்தியா ஆதரித்தது. இந்த முறையும் ஆதரிக்கும். இதற்கிடையில் மத்திய அரசிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் விலகுவதாக கருணாநிதி கூறியுள்ளார். இது எங்களுக்கு ஒரு எதிர்பாராத முடிவாக உள்ளது. இலங்கை விவகாரத்தில், மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பொதுமக்களையும், தனிமனிதர்களையும், கட்சி அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்துவது தமிழ் பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் மாறுபட்ட செயல். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
நாடகம் அம்பலமாகும்: இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் பேட்டியில் கூறியதாவது: இலங்கை தமிழர்களுக்கு, துரோகத்துக்கு மேல் துரோகத்தை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில், செய்த பாவத்துக்கு பிராயசித்தமாக, ஐ.மு., கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேறியுள்ளது; இதை வரவேற்கிறோம். இதற்கு, உள்நோக்கம் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றது நாடகமென்றால், அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். ஒருவர் நீண்ட நாளைக்கு ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. இவ்வாறு, தா.பாண்டியன் கூறினார்.
2009ல் செய்திருக்கலாம்: தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: ஐ.நா., சபையில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு, உரிய மாற்றங்கள் செய்ய, மத்திய அரசு முன்வராததால், ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்றுள்ளது. தி.மு.க.,வின் முடிவை, பா.ஜ., வரவேற்கிறது. 2009ம் ஆண்டு, போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, இம்முடிவை எடுத்திருந்தால், ஈழத் தமிழர்கள் உயிரை காப்பாற்றி இருக்கலாம். தமிழகத்தில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தால் தான், மத்திய அரசு பணியும், கடந்த காலங்களை மறந்துவிட்டு, தமிழக கட்சிகள் இதற்காக, இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
...................................................................................................................................................................
No comments:
Post a Comment