Sunday, October 22, 2017

இன்னும் எத்தனை நாட்கள்
என்னை எழுதாமலே கடந்து போகப் போகிறாய்?
எனும் கவிதையின் குரல்
இப்போதும் கேட்கிறது ஈன ஸ்வரத்தில்.
எழுதக் கூடாதென்றில்லை!
வலிந்து வார்த்தைகளை வளைத்துப் போடுவதில்
எனக்கு உடன்பாடில்லை என்கிறேன் வலியுடன்.
காற்றின் பாதையில் கைத்துடுப்புடன்
கடந்து போகும்போதெல்லாம் ஒரு
காட்டாறு எனக்காகக் காத்திருப்பதை,
கடமையென உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது அறிவு!
கவிதைகளைக் காக்க வைப்பதில்
எனக்கு உடன்பாடில்லை!
ஆனாலும்
ஆற்றுப் படுகையை கண்களால் அளந்தவாறு கடந்து போகும்
ஒரு பசியற்ற பரிசல்காரன் போல் காற்றோடு கவிதைகளைக் கரையவிட்டு விட்டு, கடந்து போய்க் கொண்டிருக்கும் மனதிடம் நான் மல்லுக்கட்டவும் தயாராக இல்லை.
மண்டியிடவும் தயாராக இல்லை!
கனவுகளின் இழைகளுக்குள் தோன்றி
கனவுகளுக்குள்ளாகவே நெசவாகி
கனவுகளோடே உறங்கிப் போகும்
கவிதைகளை
யாரால் என்ன செய்ய முடிகிறது?
உள்ளுக்குள் கவிதைகள்
வரி வரியாய்
வாசனை வார்த்தைகளாய்
சரம் சரமாய்
இன்னும் உயிர்ப்புடன்
இடம் வலமாய்
உலவிக் கொண்டுதான் இருக்கின்றன.
கட்டாயம் எழுதுவேன்.
கட்டாயம்!
ஆனால் அதற்காகக் கொஞ்சமோ நிறையவோ
 காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது.
காத்திருக்கிறேன்.
கடிகார முட்களுக்குக் காலத்தின் அளவுகளைக் கற்றுக் கொடுப்பது போல்தான் அது!

Sunday, October 1, 2017

ஏதோ ஒன்றை சொல்லாமல் தான்
இவ்வாறாக தினம் உறங்கப் போகின்றேன்
சில நாட்களாய்!