Saturday, October 25, 2014

போதும் என்ற வரையில்
காயம் பட்டாகிவிட்டது;
மீதம் உள்ளது
எதுவெனத் தெரியவில்லை!

இந்த கண்கள்
இன்னும் வற்றிவிடவில்லை
என்று எண்ணி
என்னை எரிதழல்
ஏற்றுகிறாயா இறைவா!

என் இறைவா!

Saturday, October 18, 2014


அந்த மாயக் குழலோனுக்கு
ஆகாய வண்ணமாம்;
மயில்பீலி ஒன்று நிரந்தரமாய்
மகுடத்தில் உண்டு என்று
சொல்லக் கேட்டதுண்டு!

தட்டி எழுப்ப கோபியராம்;
வெண்ணெய் ஊட்ட
அன்னையர் இருவராம்;
விளையாட்டெல்லாம் வினையென அவன்
வித்தைகள் நிகழ்த்திக் காட்ட
கடவுள் என்றனர் அவனை!

நீ கடவுளா என்றேன்!
நானா என்றான்!

கார்முகில் வண்ணன்
நீல வண்ணன் அல்லன்
என்பது எத்தனை உண்மையோ,
கண்ணன் கடவுள் அல்லன்
என்பதும் அத்தனை உண்மை!

ராதை முதலான
அத்தனை பெண்டிர்க்கும்
கண்ணன் காதலன் அல்லன்
என்பதும் அத்தனை உண்மை!

அன்னையர்க்கு மாதவன்;
தந்தையர்க்கு வாசுதேவன்;
மாநிலத்திற்கு கிருக்ஷ்ணன்
என ஆயிரம் பெயர் இருந்தும்
அன்பு கொண்ட
அத்தனை பேருக்கும்
கண்ணன் என்றும்
நல்ல நண்பன்!
உற்ற தோழன்!
மற்றும் சகா......!
அவ்வளவே! அவ்வளவே! என
அழுத்தமாய் சொல்லிச் சிரித்தான்!
மழை பொழியத் தொடங்கியிருந்தது!

ஊஞ்சலாடும் மழைத்துளி ஒவ்வொன்றிலும்
ஓராயிரம் வானவில்கள்!
உலுக்கிய கிளைகளிலெல்லாம்
உற்சாகமாய் மற்றொரு மழை!
மழைக்கால ஓடைகளில்
மழலைகளின் காகித ஓடங்கள்!
மழலைப் பேச்சைக் கேட்டு
மயங்கிக் கிடக்கிறது மழை!
நனைந்த மொட்டுக்கள்
நாளை மலர்ந்து விடும்!
மழையில் நனையும்
மரப்பாச்சி பொம்மையின்
மணல் வீடு கடற்கரையில்
என்னவாகியிருக்கும்?????

Tuesday, October 14, 2014

நான் ஒரு கதை சொல்வேன்


அந்த மயிலின் அகவல் ஆலாபனை
அகண்ட காடெங்கும் நிறைந்து வழிந்தது!

அன்னங்களற்ற குளத்துச் சகதியில்
அவசரமாய் தாகம் தணித்த களிறொன்று
பிளிரலாய் தன் பதிலை பதிவு செய்தது
புலிகள் பசியாற புள்ளினம் தேவையன்றென்று!

காடடங்கிய நேரத்தில் கண்ணியில் சிக்கிய
வானம்பாடியொன்று கூண்டுக் கம்பிகளுக்குள்
கானம் பாட ஆரம்பித்தது!

சிறு பறவை நானென்று
சிரிக்கும் சிறைக் கம்பிகளே!
நான் கடந்த தூரத்தை 
வான் அறியும்- நான்
வாழ்ந்த காடறியும் மற்றும்
என் சிறகறியும்! 

நகரத்து வீதிகளில்
நான் பறந்த காலங்களில்
நாய்களும் பூனைகளும்
நன்மாடப் புறாக்களும்
தாம் யார் என்பது மறந்து
தம் இயல்பென்பது தான் மறந்து
மனிதர் வீட்டு வாசல்களில்
மருகியிருக்கக் கண்டேன்!

மண்ணுயிர் யாவருக்கும்
தன் சுயம் அறிதல் பெரிதாம்;
உண்ணும் உணவில் இல்லை
எண்ணிய விடுதலை பெறுதல் பெரிதாம்;
இது என் வீடெனில், நற்கூடெனில்
இருந்த காடதற்கு என்ன பெயர்?
சிந்திப்பாய் நல்லுயிரே என
மாயக் குழலோன் ஒருவன்
ஓயாமல் இசைக்கக் கேட்டேன்!

கண்டதும் கேட்டதும்
எண்ணமதில் வட்டமிட
என்னை நான் உணர
வந்ததொரு சிந்தனை!

வலைகளுக்குள் சிக்குங்கால்
அலையடிக்கும் வாழ்க்கையில் என் 
சீழ்க்கை ஒலியை மறந்ததுண்டு!
சிறு கூட்டை மறந்ததுண்டு!
வலி உண்டு, வலி கொன்று
வயிற்றுப்பசி கூட மறந்ததுண்டு!
மறந்தும் மறந்தறியேன் இந்தச்
சிறகுகள் பறப்பதற்கென்று!

உணர்ந்த கணம் என்றன்
உயிர்ப்பூக்கள் பூத்தன;
சின்னஞ்சிறு சிறகுகளில்
சில சித்தாந்தங்கள் தோன்றின;
இதுவும் கடந்து போகும்;
எதுவும் நொடியில் மாறும்;
நம்பிக்கை ஒன்றை மட்டும்
நம்பி உன் சிறகை விரி!

உள்ளம் நினைத்ததை
உத்தரவெனக் கொண்டு
சிறகு விரித்த நொடி
சிகரங்கள் காலடியில்!

சொல்லிச் சிரித்தபடி வலையினின்று
மெல்ல விடுபட்ட வானம்பாடி
இது கட்டுக் கதையன்று;
விடுதலை வேர்
விழுதிட்ட கதை!
தன்னம்பிக்கை ஒளிபற்றி
தளராத முயற்சியினால்
வானம்பாடி ஒன்று
வானம் தொட்ட கதை!
எண்ணத்தில் வைத்து முன்னேறு!
என்று சிறகடித்துப் பறந்தது!

கதை கேட்ட எனக்கு
கண நேரத்தில் ஒன்று புரிந்தது!
ஆம்!
சிறகிருக்கும் பறவைகளுக்கு
சிறையென்றும் சாஸ்வதமில்லை!

Monday, October 13, 2014

காரணம் தேவையற்ற தேடுதலுக்கும் தொலைதலுக்கும்
காற்றின் காந்தத்தால் கவிதை இயற்ற முடியுமா?
கை பற்றி நடக்க மறுக்கும் குழந்தை மனதை
மையின்றி வசியப்படுத்த முடியுமா?
பேரிரைச்சலையும் பெருமெளனத்தையும்
இசையால் மொழி பெயர்க்க முடியுமா?
கேள்விகளாய் எழுந்து அடங்கும் எண்ண அலைகளை
கரை அணைத்து அமைதிப்படுத்த இயலுமா?
தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும்
கேள்விக்குறிகள் இரவை நிறைத்துக் கொள்கின்றன.
விடை காண வேண்டாம் என
விடிய வைக்கும் இரவையெல்லாம்
"எதை வேண்டுமானாலும் செய்"
என்ற இந்த இசைச் சாகரம்
தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.
இணங்க மறுக்கும் இமைகளை
இந்த இரவும் இசையும்
தன் அலைக்கரங்களை நீட்டி
அன்பால் அரவணைத்துக் கொள்ள ஆரம்பிக்கின்றன
நனைகிறேன்......
கரைகிறேன்......





யாவர்க்கும் பெய்கிறது மழை;
யாவர்க்கும் நனைகிறது தரை;
யாவர்க்கும் உயிர்க்கிறது விதை;
எனில் இதில் யாவர்க்கும் என்பதில்
எவரெவர் உளர் என்பது மட்டுமே
எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்குமான
எல்லையற்ற கேள்விகளுக்கான  பதிலை
எல்லா யுகங்களிலும் தாங்கி நகர்கிறது
என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஏளனங்களை, ஏமாற்றங்களை,
ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளை,
ஏன் என்று கேள்வி எழுப்ப இயலாத
அடிமைத்தளையை அனுபவித்தவனுக்கு மட்டுமே
அவன் தோள் ஏறாத துண்டின் கனம்,
அவன் கால் அணியாத செருப்பின் கனம்,
அவன் கை தாங்காத தேனீர்க்குவளையின் கனம்
அவன் சுமந்தறியாத புத்தகத்தின் கனம்
தெரியும் என்பதை என்றாவது ஒரு நாள்
இந்த சமூகம் உணரும் என்று
பாரதியும் பெரியாரும் காத்துக் கிடக்கக்கூடும்
இன்னும் இன்னும்!

இந்த புரையோடிய புண்ணின்
ஆறாத காயத்திற்கு மலாலா ஒரு களிம்பு!
அதற்கு சமயச் சாயம் பூசி
சமரசம் பேசாதீர்கள் நோபல் நிறுவனத்தாரே!
அடிமைத்தளையினின்று விடுபடத் தேவை ஆறுதல் அல்ல;
விடுதலை என்னும் ஆக்சிஜன்!

On 
"The Nobel Committee regards it as an important point for a Hindu and a Muslim, an Indian and a Pakistani, to join in a common struggle for education and against extremism," said Thorbjoern Jagland, the head of the Norwegian Nobel Committee.

"It's a great honour for all the Indians, it's an honour for all those children who have been still living in slavery despite of all the advancement in technology, market and economy.
"And I dedicate this award to all those children in the world."
- Mr.Kailash Satyarthi

இந்த அலைகள் கொஞ்சம்
விரைந்தால் என்ன?
கரைகள் கொஞ்சம்
நனைந்தால் என்ன?
என் மேகம் கொஞ்சம்
சிரித்தால் என்ன?
வானம் கொஞ்சம்
நனைத்தால் என்ன?
மின்னலுக்கும் இடிக்கும்
நடுவே பூ ஒன்று
பூத்தால் என்ன?
பூவில் உந்தன்
புன்னகை சேர்த்தால் என்ன?
இந்த புயல் கரையைக்
கடந்தால் என்ன?
இந்த நதி கடலில்
கலந்தால்தான் என்ன?
மழை அடித்தால் என்ன?
மழை குளித்தால் என்ன?
மூங்கில் காட்டில் என்
மூச்சுக் காற்று நுழைந்து
ஏ! கண்ணா!
உந்தன் குழலில்
எந்தன் இசையை
ஒலித்தால் என்ன?