அந்த மாயக் குழலோனுக்கு
ஆகாய வண்ணமாம்;
மயில்பீலி ஒன்று நிரந்தரமாய்
மகுடத்தில் உண்டு என்று
சொல்லக் கேட்டதுண்டு!
தட்டி எழுப்ப கோபியராம்;
வெண்ணெய் ஊட்ட
அன்னையர் இருவராம்;
விளையாட்டெல்லாம் வினையென அவன்
வித்தைகள் நிகழ்த்திக் காட்ட
கடவுள் என்றனர் அவனை!
நீ கடவுளா என்றேன்!
நானா என்றான்!
கார்முகில் வண்ணன்
நீல வண்ணன் அல்லன்
என்பது எத்தனை உண்மையோ,
கண்ணன் கடவுள் அல்லன்
என்பதும் அத்தனை உண்மை!
ராதை முதலான
அத்தனை பெண்டிர்க்கும்
கண்ணன் காதலன் அல்லன்
என்பதும் அத்தனை உண்மை!
அன்னையர்க்கு மாதவன்;
தந்தையர்க்கு வாசுதேவன்;
மாநிலத்திற்கு கிருக்ஷ்ணன்
என ஆயிரம் பெயர் இருந்தும்
அன்பு கொண்ட
அத்தனை பேருக்கும்
கண்ணன் என்றும்
நல்ல நண்பன்!
உற்ற தோழன்!
மற்றும் சகா......!
அவ்வளவே! அவ்வளவே! என
அழுத்தமாய் சொல்லிச் சிரித்தான்!
மழை பொழியத் தொடங்கியிருந்தது!
No comments:
Post a Comment