Sunday, September 28, 2014


இந்த இரவுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தானறிந்த சுயம்
யாவருக்கும் அன்று என்று!
சிலருக்கு உறக்கமாகவும்;
சிலருக்கு விழிப்பாகவும்;
சிலருக்கு விருந்தாகவும்;
சிலருக்கு மருந்தாகவும்;
சிலருக்கு தன்மையாகவும்;
சிலருக்கு வெம்மையாகவும்;
சிலருக்கு மென்மையாகவும்;
சிலருக்கு வன்மையாகவும்;
சிலருக்கு இனிமையாகவும்;
சிலருக்கு தனிமையாகவும்;
சிலருக்கு அறையாகவும்;
சிலருக்கு சிறையாகவும்
தான் இருப்பதை
இந்த இரவு
இனம் காண
வாய்ப்பில்லை!
உறங்கும் வரை
கனவு!
புலரும் வரை
இரவு!
உணரும் வரை......!

Saturday, September 27, 2014

மோடி அமெரிக்காவிற்குப் போயிருப்பதை மறந்து விட்டு இந்திய தொலைக்காட்சிகள் அனைத்தும் பெங்களூரின் பரப்பன அக்ரஹாரத்தை நோக்கி திரும்பிவிட்ட நாள் ஒன்றின் மத்தியில் இதை எழுதுகிறேன். ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படும்போது, கட்சித் தொண்டர்கள் உணர்ச்சி வயப்படுவது இயல்பானதே! எனினும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே இங்கு கவலைக்குரிய விக்ஷயமாக இருக்கிறது. நீங்கள் உடைக்கும் உடைமைகளும், எரிக்கும் வாகனங்களும், நாசப்படுத்தும் பொருட்கள் யாவுமே உங்களுடையதும், உங்களைப் போன்ற பொது மக்களுடையதும் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தமிழகம் பற்றி எரிவதைப் பார்க்கப் பார்க்க வயிறு பற்றி எரிகிறது. நீங்கள் நிறுத்திய பேருந்துகளிலிருந்து இறக்கி விடக்கப்பட்ட பயணிகளில் உங்கள் வீட்டுப் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும், கர்ப்பினிகளும், நோயாளிகளும், உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருப்பவர்களும், இன்று தன் குடும்பத்தின் வயிறு நிறைவதற்காக வேலை தேடிச் சென்றவர்களுமாக மிகச் சாதாரண மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மூடிய கடைகளில் உயிர் பிழைக்கும் மருந்துகள் இருக்கும் மருந்துக் கடைகளும், அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் விற்கும் காய்கறிக் கடைகளும், மளிகைக் கடைகளும் இருக்கின்றன என்பதை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அமைதிப் பூங்காவெனப் புகழ்பெற்ற தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கொண்டிருக்கும் நிலையை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தள்ளிவைக்கப் பட்ட தீர்ப்பு. போன வாரம் வரவேண்டியது இந்த வாரம் வழங்கப் பட்டிருக்கிறது. இன்றில்லையென்றால் அடுத்த வாரமோ என்றோ நிகழந்திருக்கும் என்பதை முதல்வர் அறிவார். ஆனால் தன் தலைமையின் கீழ் கட்டிக் காத்த தமிழகம் இப்படி கட்டுக்கடங்காத வன்முறைக்கு இலக்காகிக் கொண்டிருப்பதை அவர் நிச்சயம் விரும்ப மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நல்ல தலைமையின் கீழ் நடை போடும் ஒரு நிறுவனம் ஆகட்டும்; மாநிலம் ஆகட்டும்; தலைவர் இல்லாத நேரத்தில் கூட தலைநிமிர்ந்து தலைவர் பெயரைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது சரியாகும். உங்கள் தலைவர் மீண்டு வருவார் என்று நம்புங்கள். அமைதி காக்கும் சமயம் இது. இதுவும் கடந்து போகும். ஆனால் நீங்கள் நிலை மறந்து கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையால் உங்கள் குடும்பங்கள், உற்றார், உறவினர், சுற்றம், நட்பு யாவும் எதிர் கொள்ளும் இன்றைய சூழலின் பாதிப்பு இன்றோடு போவதல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அமைதி காருங்கள்! இது உங்கள் தேசம்!

Friday, September 26, 2014


You call it as passion;
Call it as obsession;
Call it as affection;
Call ta as attraction;
Call it as infatuation;
Call it as inclination;
Call it as desire;
Call it as affair;
Call it as crush;
Call it as a wish;
Call it as companionship;
Call it as in relationsip;
Whatever it is worth
Call it by any name,
At the end of all
Love deserves the Beauty of being Beautiful by whatever name it is called!
Find it as Everything;
Find it as Nothing;
Find it as useless;
Find it as inevitable;
Find it as knife;
Find it as Life;
Whatsoever it is concerned
Find it in any form,
At the end of all
Find that it is worth being in Love and being Loved!
Love Begets Love!

Tuesday, September 23, 2014


பற்றுக் கிளையிலிருந்து
தலை கீழாய்
தண்ணீரில் குதி;

அண்ணாந்து வானம் பார்த்து
மல்லாந்து நீச்சல் அடி;

நீருக்குள் மூழ்கி
மீனோடு விளையாடு;

உதிராத மலர் தழுவி
நதியோடு கதை பேசு;

நீரின் தாகம் எது?
அதன் தாகம்
தணிப்பது எது?
தீராத பேச்சினூடே
நீ அறிய
முயற்சி செய்;

காற்றுக்கும் நீருக்கும்
கவியரங்கம் நடக்குங்கால்
இசை கோர்க்க உன்னால்
இயன்றவரை முற்படு;

உண்டெனச் சொல்!
அன்று என்றும்!
பறக்கப் பார்!
உரக்கச் சிரி!
கொஞ்சம் பேசு!
நெஞ்சம் பாடு!

மரக்கிளையின்
வானம்பாடியாகவோ,
தலைமேலே
வானவில்லாகவோ,
ஏதாவது ஒன்றை
எவ்வாறேனும்
செய்து கொண்டே இரு!

தீராக் காதலொடு
நீரோடு உரையாடு!
நீரோடு கவிபாடு!
நீரோடு நீயும்
நீந்தி விளையாடு!

Sunday, September 21, 2014



நீ  மிதித்துப் போக
நான் அகலிகை
அல்ல!

தீயில் குளிக்க
உன் சீதையும்
அல்ல!

விட்டுப் போன
கண்ணகியும்
அல்ல!

விற்று வாங்கிய
மாதவியும்
அல்ல!

காட்டில் மறந்த
சகுந்தலை
அல்ல!

கரை ஏறி
அறியாத கங்கை
அல்ல!

உன்
ராதை அல்ல;
கோதை அல்ல;
மீரா அல்ல;
ஆண்டாளும் அல்ல!

அம்பை அல்ல;
திரெளபதி அல்ல!
சுபத்திரை அல்ல;
உத்திரை அல்ல;
மணிமேகலை அல்ல;
காயசண்டிகையும் அல்ல!

தமயந்தி அல்ல;
சந்திரமதி அல்ல;
தேவகி அல்ல;
யசோதை அல்ல;
குந்தி அல்ல;
கோசலை அல்ல;
கைகேயி அல்ல;
காந்தாரியும் அல்ல!

யாராக இருந்தாலும்
என்னை என்றும்
ஒரு உயிரென
நீ பார்த்தறியேன்?
குறைந்த பட்சம்
ஒரு பெண்ணென்றாவது
நீ உணர்ந்தறியேன்!

உனக்குள்ள உலகத்தில்
உனதுரிமை வளையத்தில்
அமிலத்தில் அமிழ்த்தி
எம்மை அணு அணுவாய்
அவித்தெடுத்தாய்!
அச்சப்படுத்தி வைத்தாய்!
அழகுக் கூண்டில்
அடைத்து வைத்தாய்!
ஆண்டாண்டு காலமாய்
அவமானத்திற்கு தின்னக்
கொடுத்தாய்!

இவ்வா றிருக்கையில்
நான் யாராகத்தான்
இருந்தால் என்ன?

யாராகவும் இல்லாமல்
நான் நானாகவே 
இருந்து விட்டுப் போகிறேன்!

நான் தீயின் கங்கு!
தீக்கங்குகள் விழுங்கிய
தீக்கோழி!

நான் கடலின் ஆழம்!
ஆழத்தில் அடங்கியிருக்கும்
ஆழிப்பேரலை!

நான் காற்றின் பேச்சு!
காற்றுக்குள்ளிருக்கும் உன்
உயிர் மூச்சு!

நான் வானம்!
நான் மேகம்!
நான் மழை!
நான் மண்!

நான் பெண்!

Saturday, September 20, 2014



Just Awesome Madhuri ji! Your Charisma is still so amazing as seen in HAHK! What a Lady?

Wednesday, September 17, 2014

ஐயா



உம்மால் ,

கோயில் கதவுகள்
திறந்தன எமக்கும்!

தன்மானத்தின் அர்த்தம்
புரிந்தது எமக்கும்!

சுயமரியாதையின் முகவரி
தெரிந்தது எமக்கும்!

வர்ணாஸ்ரமம் தாண்டி
வகுப்பறைகள் கிடைத்தன
எமக்கும்!

இருந்தும் என்ன செய்வது?
நமக்கும் என்ற
சொல் மட்டும்
இல்லாமல்தான் இருக்கிறது
இன்றைக்கும்!

வெண்தாடி வள்ளலே!
கருப்புச் சட்டைக்குள்ளிருந்து கொண்டு
எம் விடியலுக்கு
விளக்குப் பிடித்தீர்!
வெட்ட வெளிச்சத்தில்
பட்டவர்த்தனமாய்
வகுப்புவாதம்!

சமத்துவம் வேண்டி
சுயமரியாதைத் திருமணங்கள்
செய்வித்தீர்!

சுயமரியாதை யினின்று
சுயம் ஒழிந்து
சாதீயம் தழைத்து,
மரியாதைத் திருமணங்கள்
மரியாதைக் கொலைகளில்***
முடிந்ததை,
நல்ல வேளை!
நீர்
அறியாமல் போனீர்!

ஒரு புறம்
உம் பெயரில்
சமத்துவபுரங்கள் இருக்க,
மறு புறம்
உத்தப்புரங்களும்,
அதர்மபுரிகளும்,
குருதி கொப்பளிக்கும்
தாமிரபரணிகளும்!

ஐயா!
என்றொரு சொல் உண்டு!
அது உமக்கு
மட்டுமே பொருந்தும் என்று
தன்மானம் உள்ளவர் யாவரும்
தானறிவர் ஐயா!

உயிர்த்தெழுந்து வாரும்
பெரியாரே!
இந்த நாட்டைத் திருத்த
இன்னும் ஒரு முறை
இந்த பிறந்த நாளில்
மீண்டும் நீவீர்

உயிர்த்தெழுந்து வாரும்!

*** கொலைகளுக்கு கெளரவம் கொடுக்க நான் தயாரில்லை! எனவே குறைந்தபட்ச மரியாதையோடு இதை இந்த நாளில் பதிவு செய்கிறேன்!

Tuesday, September 9, 2014

ஒரு காதல் கதை

தலைப்பைப் பார்த்துப் பதற வேண்டாம்!

கண்ணாடியில் காதல் பற்றிய பதிவா? ஆச்சர்யம் தான்! ஆனால், அண்மைக்காலத்தின் மிக மிக அழகான காதல் கதையை நேற்றுக் காண வாய்த்தது. அதைப் பற்றி பதிவு செய்யாமல் விட்டால், வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கையில் ஒரு நல்ல தருணத்தைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டோமே என்ற வருத்தம் நாளை எனக்கு ஏற்படக் கூடும். ஆதலால்...., சரி!இனி கதைக்குப் போவோம்!

உங்கள் அம்மா அப்பாவுடன் ஒரு காதல் கதையைப் பார்க்க வேண்டுமா? உங்கள் அம்மா அப்பாவின் காதல் கதையைப் பார்க்க வேண்டுமா? 2014லும் ஒரு கதை இருக்கிறது என ஆச்சரியப் படுத்திப் பார்த்திருக்கிறது, பார்க்க வைத்திருக்கிறது ஒரு திரைப்படம். திரைப்படத்தின் பெயர் "பண்ணையாரும் பத்மினியும்" காதல் கதை என்று சொல்லி விட்டு, படத்தின் பெயரைச் சொன்னவுடன் விஜய் சேதுபதியின் காதல் கதை எனக் கருதியிருந்தீர்களானால் அதுவல்ல நிஜம். கீழ்கண்ட பாடலைப் பாருங்கள். 



இது போன்ற காதல் கவிதைகளை, காதல் காட்சிகள் கொண்ட டூயட் பாடல் கொண்ட காதலால் பொங்கி வழியும் காதல் கதைகளை சமீப காலங்களில் திரையில் கண்டிருக்கிறீர்களா? காண்பது மிக மிக அரிதாகத் தானே இருக்கிறது. அதனால் தான் இந்த படத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் உள்ளம் கண்ணா பின்னாவெனப் பொங்கி விட்டது.

மரத்தைச் சுற்றிச் சுற்றி ஆடும், முகத்தை முகர்ந்து முகர்ந்து பார்க்கும் வண்ண மயமான ஆடைகள் உடுத்திய இளைஞனும் யுவதியும் அயல்நாடுகள் சென்று ஆடவில்லை; பாடவில்லை. ஆனால் நமக்கென்ன வயசு திரும்பவா போகுது என்று கேட்டுக் கொண்டே, த ( dha)! இங்க பாரு! நீ எப்ப வண்டி ஓட்டக் கத்துக்கிட்டு, நீயே ஓட்டுவியோ அப்பதான் நான் கார்ல ஏறுவேன் என வெட்கம் வழிய, குறும்பு வழிய, காதல் வழிய, அடேங்கப்பா! "சகலகலாவல்லவன்" படத்தில் பார்த்த "வள்ளி" துளசியா இது! சதா சர்வ காலமும் சமையலறையில் அமுது படைத்துக் கொண்டிருக்கும், சின்னப் பெண் போல் கணவனிடம் முறுக்கிக் கொண்டு திரியும், நான் இல்லன்னா நீ என்ன பண்ணுவ? எனக் கசிந்துருகும், முருகேசா! அய்யாவுக்கு இன்னும் ரெண்டு இட்லி வை என்று கரிசனம் பொழியும், தந்தையைக் குற்றஞ்சாட்டும் மகளிடம் சண்டைக்கு நிற்கும், மற்றதெல்லாம் பரவாயில்லை; காரும் இந்த வீட்ல ஒரு குழந்தை மாதிரி தான இருந்துச்சு; அதை திடீர்னு எடுத்துக்கிட்டு போனதுதான் தாங்கல என மருகும், காரைப் பத்தி பேசாம இருந்தா எப்படி; அவளும் நம்ம பொண்ணு மாதிரிதான, கார் சாவி எங்க? கொடுத்தணுப்புங்க! என நேர்கொண்ட பார்வையுடன் சொல்லும் செல்லம்மாள். Awesome Acting Madam! இவரை தமிழ் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது. இயக்குனரின் பாரதி பாசம், பண்ணையாரின் மனைவிக்கு செல்லம்மாள் என்று பெயர் இட்டதில் தெரிகிறது. தமிழ் படித்தவன் எவனொருவனும் பாரதியால் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்ன? துளசி அவர்கள் செல்லம்மாள் கதாபாத்திரத்திற்கு மிகச் சரியான தேர்வு.

பண்ணையார் ஜெயப்பிரகாக்ஷ் மட்டும் என்ன? பண்ணையார் வீட்டம்மாவிற்கு சற்றும் சளைக்காமல் அற்புதமாக நடித்திருக்கிறார். நண்பரின் காரில் " செல்லம்மாள்" பெயர் எழுத முற்படுவதும், மகளுக்கென்றால் உனக்குத் தானடா எல்லாம் என எதையும் கொடுத்தனுப்புவதும் ஆகட்டும், கார் கேட்கும் மகளைக் கண்டிக்கும் மனைவியை " அடி! செருப்பால" என்று அதட்டுவதும், கடைசியில் காரைப் பற்றி குறை சொல்லி அப்பாவை மகள் திட்ட, கடிந்து பேசும் மகளைக் கண்டிக்கும் அம்மாவைத் திரும்பத் திட்டும் மகளிடம், மனைவியை விட்டுக் கொடுக்காமல், " இனி ஒரு வார்த்தை பேசுன" என அதட்டுவதாகட்டும், எல்லாவற்றுக்கும் மேல் மனைவிக்காக கார் ஓட்டக் கற்றுக் கொள்வதாகட்டும் அருமை ஐயா! ABC இல்ல சார்! Ph.D யே பண்ணிட்டீங்க போங்க! பசங்க வாத்தியார் கதாபாத்திரத்துக்குப் பின், உங்கள் நடிப்புத் திறமைக்கான சரியான தீனி கிடைத்திருக்கிறது. அற்புதமாகப் பயன் படுத்திக் கொண்டு, பின்னி எடுத்து விட்டீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எல்லாப் புகழும் இயக்குனருக்கே! 

மேற்கண்ட பாடல் ஒரு சோறு பதம். காதலின் அழகை இதை விட அழகாகக் காட்ட முடியுமாவெனத் தெரியிவில்லை. படமாக்கப் பட்ட விதம் பிரமாதம்!

கல்யாண நாளுக்குள்ள கார் ஓட்டக் கத்துக்குவ இல்ல எனும் காதல் மனைவியின் கேள்வியும், கல்யாண நாளுக்குள்ள கார் ஓட்டக் கத்துக்குவேன் இல்ல எனும் காதல் கணவனின் கேள்வியும், பாவம்! சின்ன புள்ள மாதிரி ஆசைப்படுது. எப்படியாவது கார் ஓட்டக் கத்துக் கொடுத்துடு என்று இருவரிடம் இருந்தும் வெளிப்படும் பாசத்தின் கெஞ்சலும், கார் ஓட்டுனர் முருகேசனை மட்டும் அசைத்து விட வில்லை. நம்மையும் தான். வயோதிகத்தின் பொறுப்புக்களை, கம்பீரத்தை, பாசத்தை, பெரிய மனிதத்தனத்தை, சின்னச் சின்ன ஆசைகளை மிகக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் S.U. அருண்குமார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக அங்கீகாரம் பெற்ற ஒரு குறு/சிறு நாடகத்தை 152 நிமிடத் திரைப்படமாக உருவாக்கி இருப்பதில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறீர்கள் இயக்குனர் அவர்களே! பாராட்டுக்கள்!

ஏக் துஜே கேலியே, தேவதாஸ், ஹம் ஆப்கே ஹைன் கோன், தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே என நீளும் திரைப்படங்களின் வரிசை, திரையரங்குகள் நிறைந்த காட்சிகளாகக் கொண்டாடப்பட்ட காதல் கதைகளைக் கொண்டவையாக இருந்த்திருக்கலாம். ஆனால் 2014லும் வயோதிகத்தை ரசிக்க வைத்திருக்கும், வயோதிகக் காதலை ரசிக்க வைத்திருக்கும், இளம் தம்பதிகளாக இருக்கும் நம் சொந்த பந்தங்களும், நண்பர்களும் இதே போன்ற அன்பில் கனிந்த, காலத்தால் அழியாத,  எத்தனை வயதானாலும் குறைந்து விடாத, ஆசிர்வதிக்கப் பட்ட காதலுடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என நம்மையும் ஆசைப்பட வைத்திருக்கும் " பண்ணையாரும் பத்மினியும்" நம் கலாசாரத்தைக் கொண்டாடும், நம் காலத்து காதல் கவிதை/காவியம்! 

சமர்ப்பணம்: நான் பார்த்த மிக அந்நியோன்யமான காதல் ஜோடியான என் தாத்தா பாட்டிக்கும், என் அப்பா அம்மாவிற்கும்!

ஒரு பாடலின் வரிகள் நினைவிற்கு வருகின்றன. சோதனை நேரலாம்; பாசம் என்ன போகுமா? மேகங்கள் போய் விடும்; வானம் என்ன போகுமா?

சத்தியம்!

எல்லாவற்றுக்கும் மேல், கடைசியாக, பண்ணையாரும் பத்மினியும் என்ற பெயரை வைத்து விட்டு ஏடாகூடமான இரண்டாம் தர, மூன்றாம் தர கதைகளைக் கடைவிரிக்காமல், நல்ல தரமான திரைப்படமாக படைத்து விருந்தளித்தமைக்கு இயக்குனருக்கும், திரைப்படக் குழுவினருக்கும், இவர்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

பயணங்கள் முடிவதில்லை!

Monday, September 8, 2014


இருளும் ஒளியும்
இரு வேறன்று;
இருப்பும் இல்லாமையும்!

இருப்பதை உணர
ஒரு விளக்கும்
இரு விழிகளும்
போதுமெனக் கொள்வோமெனில்
பார்வையற்றவர்க்கு
அவையும் தேவையன்றென்று
அவனிக்குத் தெரியாதா என்ன!
அவர்கட்கு
இருளும் ஒளியும்
இரு வேறன்று
இருப்பும் இல்லாமையும்!

அறிவு சொல்வதை
அகிலம் கேட்கிறது;
அன்பு கொள்வதாலேயே
அகிலம் வாழ்கிறது!

என்பு தோல்
போர்த்த உடம்பை
கண்களால் காண்போமெனில்
அன்பையும் அறிவையும்
எங்ஙனம் காண்பது!
காண்பது ஒன்றே
இருப்பினைக் கூறுமெனில்
அகிலத்தை உய்விக்கும்
அன்பையும் அறிவையும்
இருப்பதெனக் கொள்வதா!
இல்லையென்பதா!

சொல்லாத வார்த்தைகள்
மெளனத்திற்குள் இருப்பது போல்,
காணக் கிடைப்பவையும்
காணாதவையும்
இல்லாமல் இருப்பவையும்
இங்கேயே இருக்கின்றன;
இல்லையென ஏதுமில்லை;
இருப்பது இங்கேயே!
இல்லாததும்!

இருளும் ஒளியும்
இரு வேறன்று;
இருப்பும் இல்லாமையும்!

Sunday, September 7, 2014




Happy Birthday Kanchana! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நேற்றிரவு கடிகார முட்கள் மணி பன்னிரண்டைத் தொட, இதை நான் எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தபோது, மற்றுமொரு பயணத்தில் இருந்தேன். காய்ந்திருந்த காஞ்சிபுரத்தை மூன்று நாட்களுக்கேனும் சாரலாய், தூறலாய், மழையாய் சற்றே நனைத்துக் குளிர்வித்து விட்டு, தொடர்வேலைகளினின்று விடைபெற்று இல்லம் நோக்கிய பேருந்துப் பயணம் அது. “சின்ன சின்ன வண்ணக்குயில்…..” இளையராஜா கசிந்து கொண்டிருந்தார் காற்றிலும் காதுகளுக்குள்ளும். பயணங்கள் பழகிவிட்டன. பயணங்கள் வழக்கமாகிவிட்டன. நடுவில் பத்மாசினியின் வாழ்த்துக்கள் மற்றும் பைபிள் வசனங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களாக அலைபேசியில் குறுஞ்செய்திகளாக நிறைந்து கொண்டிருந்தன. ஊர் வந்து இறங்கியபோது தம்பி பேருந்து நிறுத்ததில் காத்திருந்தான். பன்னிரண்டாகி விட்டதா என்று உறுதி செய்து கொண்டு “Happy Birthday Akka” என்றான். Thanks da என வீடு    . சென்றோம். அப்பாவும் அம்மாவும் விழித்திருந்தார்கள் உணவுடன். தொலைக்காட்சியில் மேகாவில் இருந்து “ கள்வனே! கள்வனே! என்ன தான் மாயம் செய்தாய்” ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு, பூஜை அறையில் ஒரு சிறு பிரார்த்தனையுடன் உறங்கப் போனபோது இரவு ,மணி ஒன்று.

தோட்டத்தில் சாமந்திச் செடிகளுடனும் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தம்பியின் வாழ்த்துக்களுடனும் தொடங்கிய நாளை, கானடாவிலிருந்து ஜோதியின் அலைபேசி அழைப்பு மேலும் இனிதாக்கியது. நேற்றிலிருந்து இன்றைக்கு வந்த காலம் கடந்த சிறப்பு வாழ்த்து அது. அதற்குப் பிறகான அண்ணனின் கேக், அம்மாவின் கேசரி, நாங்கள் பகிர்ந்து கொண்ட இனிப்புகள், நேரில், அலைபேசியில், இணையத்தில் வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! சொன்ன வாழ்த்துக்களையும், என்னைத் தொடர்பு கொள்ள இயலாமையால் சொல்ல முயன்றும் சொல்ல இயலாத வாழ்த்துக்களையும், சொல்ல மறந்த வாழ்த்துக்களையும், பணிகளுக்கிடையே நேரம் கிடைக்காததால் நினைக்க மறந்தவர்களின் வாழ்த்துக்களையும் கூட இறைவனுக்கு நன்றியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த பிறந்தநாளுக்கு எனக்குக் கிடைத்த அரிய பெரிய இரண்டு பரிசுகள். ஒன்று, இன்று நான் என் குடும்பத்துடன் வீட்டில் இருந்தது. மற்றொன்று அண்ணன் இந்த நாளைச் சிறப்பாக்க அண்ணன் ரத்த தானம் செய்துவிட்டு வந்தது.
என் வாழ்க்கையின் மிகக் கடினமான ஒரு கால கட்டத்தை கடக்க என் குடும்பம் உடனிருந்தது; உடனிருக்கிறது. பரம்பொருளே! இறைவா! அதற்காக உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள்! எப்பொழுதும் போல் உன்னிடம் ஒன்று மட்டுமே கேட்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, என் நண்பர்கள் (சச்சின் உட்பட), எனக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அனைவரும் நலமாக இருக்க வேண்டும். மாரி அளவாய் பொழியட்டும்; நாடு செழிக்கட்டும்; மக்கள் நலமாய் வாழட்டும்; இன்றும் இனி வரும் எல்லா நாட்களும் நன்றாக இருக்கட்டும். என் சொல்லிலும், செயலிலும் நீயே இருந்து ஆசிர்வதிப்பாயாக! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
இந்த வேண்டுதலுடன் உறங்கப் போகிறேன்! வாராத வாழ்த்துக்கள் சற்று உறுத்தத்தான் செய்கின்றன, எனினும் இன்று என் குடும்பம் என்னை தன் உள்ளங்கையில், உள்ளத்தில், உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்த நாளுக்கு நன்றி இறைவா! இந்த நாள் போல் எல்லா நாளும் என்னுடன் இரு!

எல்லோருக்கும் சேர்த்து நானும் ஒரு முறை வாழ்த்துகிறேன். Happy Birthday Kanchana!

பயணங்கள் முடிவதில்லை!

Friday, September 5, 2014


நிழலெனக் கொள்வதோ!
தழலெனக் கொள்வதோ!

எழுதிக் கிழித்த
எண்ணற்ற கவிதைகளில்
எனக்கெனக் கிறுக்கியது
எதுவென்று நினைவில்லையே!
ஐயய்யோ!
அவை எழுதப்பட்ட
ஏகாந்த தருணங்களை
என்
நிழலெனக் கொள்வதோ!
தழலெனக் கொள்வதோ!

புரட்டும் பக்கங்கள்
யாவிலும் மறைந்திருக்கும்
புத்தகத்து மயிலிறகுகள்
முட்டையிடாமல்,  
குஞ்சு பொறிக்காமல்,
குட்டி போடும்
என நான்
குட்டிக் கரணமிட்டு
சத்தியம் செய்ததுண்டு!
அகவாத மயில்கள்
அழகாக அப்பக்கங்களில்
அடைகாத்து கிடந்ததை
அறிந்திருந்த வயது
அது!

அற்றைப் பொழுதின்
அழுத தருணங்களோ
அவமானத்தின் தடயங்களோ
அட்டத்தில் கூட
அடைந்திருக்கவில்லை!
நினைத்ததை மறந்து
மறந்ததை நினைவுறுத்தி
ஆசைஆசையாய்
வாழ்ந்த பால்யத்தின்
அறியாமை இருந்தவரை,
ஆண்டவனின் ஆசிகள்
ஆழமாய் வேரூன்றி
ஆலமரமாய் தழைத்திருந்த
அற்புத வயது
அது!

எல்லாம் நடந்தது;
எல்லாம் கடந்தது;
நடந்ததைச் செய்தியாய்
கடந்ததை வரலாறாய்
கற்றதை அறிந்ததாய்
கற்பிதம் செய்து கொண்டு
எல்லாம் அறிந்ததாய்
நினைத்துக் கொண்டு
ஏதும் புரியாமல்
நில்லாமல் ஓடும்
இவ் வயதை
யாதெனக் கொள்வது!

நிழலெனக் கொள்வதோ!
தழலெனக் கொள்வதோ!

Thursday, September 4, 2014


Nineteen Years of togetherness; 
This bonding is still getting closer;
This relationship seems growing
taller, longer and deeper;
Fondly Remembering the Day
that transformed me as what I am;
that groomed me to grow up;
that made me strong
to face the world;
that made me soft
to live with the world;
that brought me into
the world of Helichrys!
that gave you all
to me n my life!
Thank You my Alma mater
for offering this companionship
in this journey! N'
Thank you All
for being with me always!
Happy Year Day Friends!
Happy Helichrys Day!
4 September, 2014
Love Always
Kanchana BSA 95034

Wednesday, September 3, 2014


எந்தன் கவலைகள்
நின்தாள் சேர்த்திட்டேன்!
துன்பம் நீக்கி
அன்பெனக் கருள்வாய்!

முந்தைய பிறவியின்
முகாந்திரம் அறியேன்;
பிந்தைய பொழுதுகள்
சிந்தையில் தெளியேன்!
பந்தயப் பாதையில்
விந்தி நிற்கின்றேன்!
எந்தையே! நின்றன்
ஒளியெனக் கீவாய்!

இந்நகை இதழ்களின்
புன்னகை மட்டுமோ!
எந்நிலை யிலேனும்
என் இருதயம்
எட்டுமோ!

நஞ்சுண்டானே!
நறுங்குழல் நாதனே!
உள்ளத்தின் ஒளியே!
உன்னை வணங்கிட்டேன்!
நன்றெனக் கருள்வாய்
நன்னெஞ்சே!