உம்மால் ,
கோயில் கதவுகள்
திறந்தன எமக்கும்!
தன்மானத்தின் அர்த்தம்
புரிந்தது எமக்கும்!
சுயமரியாதையின் முகவரி
தெரிந்தது எமக்கும்!
வர்ணாஸ்ரமம் தாண்டி
வகுப்பறைகள் கிடைத்தன
எமக்கும்!
இருந்தும் என்ன செய்வது?
நமக்கும் என்ற
சொல் மட்டும்
இல்லாமல்தான் இருக்கிறது
இன்றைக்கும்!
வெண்தாடி வள்ளலே!
கருப்புச் சட்டைக்குள்ளிருந்து கொண்டு
எம் விடியலுக்கு
விளக்குப் பிடித்தீர்!
வெட்ட வெளிச்சத்தில்
பட்டவர்த்தனமாய்
வகுப்புவாதம்!
சமத்துவம் வேண்டி
சுயமரியாதைத் திருமணங்கள்
செய்வித்தீர்!
சுயமரியாதை யினின்று
சுயம் ஒழிந்து
சாதீயம் தழைத்து,
மரியாதைத் திருமணங்கள்
மரியாதைக் கொலைகளில்***
முடிந்ததை,
நல்ல வேளை!
நீர்
அறியாமல் போனீர்!
ஒரு புறம்
உம் பெயரில்
சமத்துவபுரங்கள் இருக்க,
மறு புறம்
உத்தப்புரங்களும்,
அதர்மபுரிகளும்,
குருதி கொப்பளிக்கும்
தாமிரபரணிகளும்!
ஐயா!
என்றொரு சொல் உண்டு!
அது உமக்கு
மட்டுமே பொருந்தும் என்று
தன்மானம் உள்ளவர் யாவரும்
தானறிவர் ஐயா!
உயிர்த்தெழுந்து வாரும்
பெரியாரே!
இந்த நாட்டைத் திருத்த
இன்னும் ஒரு முறை
இந்த பிறந்த நாளில்
மீண்டும் நீவீர்
உயிர்த்தெழுந்து வாரும்!
*** கொலைகளுக்கு கெளரவம் கொடுக்க நான் தயாரில்லை! எனவே குறைந்தபட்ச மரியாதையோடு இதை இந்த நாளில் பதிவு செய்கிறேன்!
No comments:
Post a Comment