Friday, September 5, 2014


நிழலெனக் கொள்வதோ!
தழலெனக் கொள்வதோ!

எழுதிக் கிழித்த
எண்ணற்ற கவிதைகளில்
எனக்கெனக் கிறுக்கியது
எதுவென்று நினைவில்லையே!
ஐயய்யோ!
அவை எழுதப்பட்ட
ஏகாந்த தருணங்களை
என்
நிழலெனக் கொள்வதோ!
தழலெனக் கொள்வதோ!

புரட்டும் பக்கங்கள்
யாவிலும் மறைந்திருக்கும்
புத்தகத்து மயிலிறகுகள்
முட்டையிடாமல்,  
குஞ்சு பொறிக்காமல்,
குட்டி போடும்
என நான்
குட்டிக் கரணமிட்டு
சத்தியம் செய்ததுண்டு!
அகவாத மயில்கள்
அழகாக அப்பக்கங்களில்
அடைகாத்து கிடந்ததை
அறிந்திருந்த வயது
அது!

அற்றைப் பொழுதின்
அழுத தருணங்களோ
அவமானத்தின் தடயங்களோ
அட்டத்தில் கூட
அடைந்திருக்கவில்லை!
நினைத்ததை மறந்து
மறந்ததை நினைவுறுத்தி
ஆசைஆசையாய்
வாழ்ந்த பால்யத்தின்
அறியாமை இருந்தவரை,
ஆண்டவனின் ஆசிகள்
ஆழமாய் வேரூன்றி
ஆலமரமாய் தழைத்திருந்த
அற்புத வயது
அது!

எல்லாம் நடந்தது;
எல்லாம் கடந்தது;
நடந்ததைச் செய்தியாய்
கடந்ததை வரலாறாய்
கற்றதை அறிந்ததாய்
கற்பிதம் செய்து கொண்டு
எல்லாம் அறிந்ததாய்
நினைத்துக் கொண்டு
ஏதும் புரியாமல்
நில்லாமல் ஓடும்
இவ் வயதை
யாதெனக் கொள்வது!

நிழலெனக் கொள்வதோ!
தழலெனக் கொள்வதோ!

No comments:

Post a Comment