Happy Birthday Kanchana!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
நேற்றிரவு கடிகார முட்கள் மணி பன்னிரண்டைத்
தொட, இதை நான் எனக்குள் சொல்லிக் கொண்டிருந்தபோது, மற்றுமொரு பயணத்தில் இருந்தேன்.
காய்ந்திருந்த காஞ்சிபுரத்தை மூன்று நாட்களுக்கேனும் சாரலாய், தூறலாய், மழையாய் சற்றே
நனைத்துக் குளிர்வித்து விட்டு, தொடர்வேலைகளினின்று விடைபெற்று இல்லம் நோக்கிய பேருந்துப்
பயணம் அது. “சின்ன சின்ன வண்ணக்குயில்…..” இளையராஜா கசிந்து கொண்டிருந்தார் காற்றிலும்
காதுகளுக்குள்ளும். பயணங்கள் பழகிவிட்டன. பயணங்கள் வழக்கமாகிவிட்டன. நடுவில் பத்மாசினியின்
வாழ்த்துக்கள் மற்றும் பைபிள் வசனங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களாக அலைபேசியில் குறுஞ்செய்திகளாக
நிறைந்து கொண்டிருந்தன. ஊர் வந்து இறங்கியபோது தம்பி பேருந்து நிறுத்ததில் காத்திருந்தான்.
பன்னிரண்டாகி விட்டதா என்று உறுதி செய்து கொண்டு “Happy Birthday Akka” என்றான்.
Thanks da என வீடு . சென்றோம்.
அப்பாவும் அம்மாவும் விழித்திருந்தார்கள் உணவுடன். தொலைக்காட்சியில் மேகாவில் இருந்து
“ கள்வனே! கள்வனே! என்ன தான் மாயம் செய்தாய்” ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவற்றையும்
எடுத்து வைத்து விட்டு, பூஜை அறையில் ஒரு சிறு பிரார்த்தனையுடன் உறங்கப் போனபோது இரவு
,மணி ஒன்று.
தோட்டத்தில் சாமந்திச்
செடிகளுடனும் அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தம்பியின் வாழ்த்துக்களுடனும் தொடங்கிய
நாளை, கானடாவிலிருந்து ஜோதியின் அலைபேசி அழைப்பு மேலும் இனிதாக்கியது. நேற்றிலிருந்து
இன்றைக்கு வந்த காலம் கடந்த சிறப்பு வாழ்த்து அது. அதற்குப் பிறகான அண்ணனின் கேக்,
அம்மாவின் கேசரி, நாங்கள் பகிர்ந்து கொண்ட இனிப்புகள், நேரில், அலைபேசியில், இணையத்தில்
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! சொன்ன வாழ்த்துக்களையும், என்னைத் தொடர்பு
கொள்ள இயலாமையால் சொல்ல முயன்றும் சொல்ல இயலாத வாழ்த்துக்களையும், சொல்ல மறந்த வாழ்த்துக்களையும்,
பணிகளுக்கிடையே நேரம் கிடைக்காததால் நினைக்க மறந்தவர்களின் வாழ்த்துக்களையும் கூட இறைவனுக்கு
நன்றியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த பிறந்தநாளுக்கு எனக்குக் கிடைத்த அரிய பெரிய
இரண்டு பரிசுகள். ஒன்று, இன்று நான் என் குடும்பத்துடன் வீட்டில் இருந்தது. மற்றொன்று
அண்ணன் இந்த நாளைச் சிறப்பாக்க அண்ணன் ரத்த தானம் செய்துவிட்டு வந்தது.
என் வாழ்க்கையின் மிகக்
கடினமான ஒரு கால கட்டத்தை கடக்க என் குடும்பம் உடனிருந்தது; உடனிருக்கிறது. பரம்பொருளே!
இறைவா! அதற்காக உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள்! எப்பொழுதும் போல் உன்னிடம் ஒன்று மட்டுமே
கேட்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, என் நண்பர்கள் (சச்சின் உட்பட), எனக்குத்
தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அனைவரும் நலமாக இருக்க வேண்டும். மாரி அளவாய் பொழியட்டும்;
நாடு செழிக்கட்டும்; மக்கள் நலமாய் வாழட்டும்; இன்றும் இனி வரும் எல்லா நாட்களும் நன்றாக
இருக்கட்டும். என் சொல்லிலும், செயலிலும் நீயே இருந்து ஆசிர்வதிப்பாயாக! வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
இந்த வேண்டுதலுடன் உறங்கப்
போகிறேன்! வாராத வாழ்த்துக்கள் சற்று உறுத்தத்தான் செய்கின்றன, எனினும் இன்று என் குடும்பம்
என்னை தன் உள்ளங்கையில், உள்ளத்தில், உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. இந்த
நாளுக்கு நன்றி இறைவா! இந்த நாள் போல் எல்லா நாளும் என்னுடன் இரு!
எல்லோருக்கும் சேர்த்து
நானும் ஒரு முறை வாழ்த்துகிறேன். Happy Birthday Kanchana!
No comments:
Post a Comment