இருளும் ஒளியும்
இரு வேறன்று;
இருப்பும் இல்லாமையும்!
இருப்பதை உணர
ஒரு விளக்கும்
இரு விழிகளும்
போதுமெனக் கொள்வோமெனில்
பார்வையற்றவர்க்கு
அவையும் தேவையன்றென்று
அவனிக்குத் தெரியாதா என்ன!
அவர்கட்கு
இருளும் ஒளியும்
இரு வேறன்று
இருப்பும் இல்லாமையும்!
அறிவு சொல்வதை
அகிலம் கேட்கிறது;
அன்பு கொள்வதாலேயே
அகிலம் வாழ்கிறது!
என்பு தோல்
போர்த்த உடம்பை
கண்களால் காண்போமெனில்
அன்பையும் அறிவையும்
எங்ஙனம் காண்பது!
காண்பது ஒன்றே
இருப்பினைக் கூறுமெனில்
அகிலத்தை உய்விக்கும்
அன்பையும் அறிவையும்
இருப்பதெனக் கொள்வதா!
இல்லையென்பதா!
சொல்லாத வார்த்தைகள்
மெளனத்திற்குள் இருப்பது போல்,
காணக் கிடைப்பவையும்
காணாதவையும்
இல்லாமல் இருப்பவையும்
இங்கேயே இருக்கின்றன;
இல்லையென ஏதுமில்லை;
இருப்பது இங்கேயே!
இல்லாததும்!
இருளும் ஒளியும்
இரு வேறன்று;
இருப்பும் இல்லாமையும்!
No comments:
Post a Comment