Saturday, September 27, 2014

மோடி அமெரிக்காவிற்குப் போயிருப்பதை மறந்து விட்டு இந்திய தொலைக்காட்சிகள் அனைத்தும் பெங்களூரின் பரப்பன அக்ரஹாரத்தை நோக்கி திரும்பிவிட்ட நாள் ஒன்றின் மத்தியில் இதை எழுதுகிறேன். ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படும்போது, கட்சித் தொண்டர்கள் உணர்ச்சி வயப்படுவது இயல்பானதே! எனினும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே இங்கு கவலைக்குரிய விக்ஷயமாக இருக்கிறது. நீங்கள் உடைக்கும் உடைமைகளும், எரிக்கும் வாகனங்களும், நாசப்படுத்தும் பொருட்கள் யாவுமே உங்களுடையதும், உங்களைப் போன்ற பொது மக்களுடையதும் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தமிழகம் பற்றி எரிவதைப் பார்க்கப் பார்க்க வயிறு பற்றி எரிகிறது. நீங்கள் நிறுத்திய பேருந்துகளிலிருந்து இறக்கி விடக்கப்பட்ட பயணிகளில் உங்கள் வீட்டுப் பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும், கர்ப்பினிகளும், நோயாளிகளும், உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருப்பவர்களும், இன்று தன் குடும்பத்தின் வயிறு நிறைவதற்காக வேலை தேடிச் சென்றவர்களுமாக மிகச் சாதாரண மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மூடிய கடைகளில் உயிர் பிழைக்கும் மருந்துகள் இருக்கும் மருந்துக் கடைகளும், அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் விற்கும் காய்கறிக் கடைகளும், மளிகைக் கடைகளும் இருக்கின்றன என்பதை கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அமைதிப் பூங்காவெனப் புகழ்பெற்ற தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கொண்டிருக்கும் நிலையை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது தள்ளிவைக்கப் பட்ட தீர்ப்பு. போன வாரம் வரவேண்டியது இந்த வாரம் வழங்கப் பட்டிருக்கிறது. இன்றில்லையென்றால் அடுத்த வாரமோ என்றோ நிகழந்திருக்கும் என்பதை முதல்வர் அறிவார். ஆனால் தன் தலைமையின் கீழ் கட்டிக் காத்த தமிழகம் இப்படி கட்டுக்கடங்காத வன்முறைக்கு இலக்காகிக் கொண்டிருப்பதை அவர் நிச்சயம் விரும்ப மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நல்ல தலைமையின் கீழ் நடை போடும் ஒரு நிறுவனம் ஆகட்டும்; மாநிலம் ஆகட்டும்; தலைவர் இல்லாத நேரத்தில் கூட தலைநிமிர்ந்து தலைவர் பெயரைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது சரியாகும். உங்கள் தலைவர் மீண்டு வருவார் என்று நம்புங்கள். அமைதி காக்கும் சமயம் இது. இதுவும் கடந்து போகும். ஆனால் நீங்கள் நிலை மறந்து கட்டவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையால் உங்கள் குடும்பங்கள், உற்றார், உறவினர், சுற்றம், நட்பு யாவும் எதிர் கொள்ளும் இன்றைய சூழலின் பாதிப்பு இன்றோடு போவதல்ல என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அமைதி காருங்கள்! இது உங்கள் தேசம்!

No comments:

Post a Comment