Wednesday, May 30, 2012



ஒரு பேசாத வார்த்தையின்
பிரியத்தை பொதிந்து வைத்துள்ளது
உன் புன்னகையின் ஈரம்!

சொன்னாலும் சொல்லாமல் போனாலும்
சுவையாகத்தான் இருக்கிறது ஏதோ
ஒரு சுருதி பற்றி
சுழன்று கொண்டிருக்கும் விளங்காத
உன் பார்வையின் சங்கீதம்!

புரியாத மொழியில் நீ
சொல்லும் கவிதைகள் எல்லாம்
புதிதாக்கி விடுகின்றன என்
விடியல் பொழுதுகளை!

அழுக்கான என் அகந்தையை
அழகாகத் துடைத்துப் போகிறாய்
கடவுளின் கரம் பற்றி
தவழ்ந்து கொண்டிருக்கும் உன்
தளிர் மழலை விரல்களால்!

என் இருண்ட மனதின்
அர்த்தமில்லா அழுகைகளையும்
அகங்கார ஆர்ப்பாட்டங்களையும்- பெரும்
ஆரவாரக் கூச்சல்களையும் கூட
எந்தச் சலனமும் இன்றி
வேடிக்கை பார்க்கும் உன்
வெள்ளை விழிகளில்
வெளிச்சமாகத் தெரிகிறார்
நான் எங்கெங்கோ
தேடிக் கொண்டிருக்கும் இறைவன்!!

அன்று சொன்னவன் வார்த்தைகள்
இன்று புரிகின்றன!
தெய்வம் இருப்பது எங்கே?
அது இங்கே! வேறெங்கே?

Tuesday, May 29, 2012

N yet another century! thats the hundredth post in enakku piditha padal @ karumbuvil.blogspot,in

Thursday, May 24, 2012

பயணங்கள் முடிவதில்லை-IV


அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்? எனத் தொடங்கி, மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வியுடன் விழித்துக் கொண்டிருக்கும் இந்த  பொழுதில், மறந்திருந்த மாரிமுத்து அவர்களை அருள் நித்யானந்தம் நினைக்க வைத்தது விசித்திரம்தான். ஆனால் இதில் நான் கண்டுணர்ந்தது வேறு ஒரு பாடம்!

படிப்பறிவு என்று நாம் சொல்லும் ஒன்று உண்மையிலேயே உலக அறிவு தானா? நாம் உண்ணும் உணவிலிருந்து, உடுக்கும் உடையிலிருந்து, நம்மைச் சுத்தமாக்கி வைக்கும் கழிவு வரை நாம் கவனிக்கிறோமா? என்று யோசித்துப் பார்க்கிறேன். நகர வாழ்க்கை, வாழ்க்கையை நரக வாழ்க்கையாக்கி விட்டதோ என்று கூடத் தோன்றுகிறது.

உணவு முறையை எடுத்துக் கொள்வோம். என்றோ தயார் செய்யப்பட்டு, சவ்வுத் தாள்களிலோ, ப்ளாஸ்டிக்  அடைப்பான்களிலோ, நீண்ட நாள் கெடாமல் இருக்க கலக்கப் படும் வேதிப் பொருளுடன்(PRESERVATIVE) கிடைக்கும் INSTANT FOOD எனப்படும் உடனடி உணவு வகைகள், வாயையும் வயிற்றையும் அடைத்து, வயதையும் அடைக்கும் அவசர கதி அரைவேக்காட்டு உணவு, அல்லது ஒரு வாரத்திற்குச் சேர்த்து அரைத்து குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைத்த புளித்த மாவில் செய்து சாப்பிடும் இட்லி மற்றும் தோசை தான், இன்று பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாகி விட்டது. காலையில் கெல்லாக்ஸ், மதியம் பர்கர் மற்றும் பிங்கர் சிப்ஸ், இரவு (நள்ளிரவு) பீட்ஸா, கோக், ப்ரட் பட்டர் ஜாம் என்ற புதிய உணவு முறை ஒன்றும் இன்று உருவாகியுள்ளது. இவற்றிற்கு பெயர் ஒரு காலத்தில் JUNK FOODS என்று கேள்விப் பட்டதாக நினைவு. இவை எந்த காலத்தில் செரிமானம் ஆவது?

சுட்டெரிக்கும் நம் சீதோக்ஷ்ண நிலையில், எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகள் கிட்டத் தட்ட காணாமலேயே போய் விட்டன. நான் உண்டிருந்த கொழுப்புச் சத்து குறைவான, களி மற்றும் கூழை, உடனடியாகக் கொழுப்பைக் கூட்டும் பனிக்கூழ் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. பன நுங்கையும், இளநீரையும் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட பழச் சாறுகளும் , நீராகாரத்தையும், நீர் மோரையும் குப்பிகளில் அடைத்த சக்கரை நீரில் வாயு செலுத்தப் பட்ட குளிர் பானங்களும், கேழ்வரகு அடையையும், பொறி உருண்டையையும், வற்றல்களையும் சிப்ஸ், எண்ணெயில் பொரித்த, உப்பு காரம் அதிகம் சேர்க்கப் பட்ட நொறுக்குத் தீனிகளும் கபளிகரம் செய்து விட்டன. விளைவு தேசிய வியாதிகளாகிவிட்ட நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும், அதன் பொருட்டு குடும்பம் குடும்பமாக நாம் உணவுடன் சேர்த்து உண்ணும் வண்ணமயமான மாத்திரைகளும். எங்கே செல்கிறோம் எனப் புரியவில்லை.

அவை மட்டுமன்றி, வேறு என்ன நோய் நம்மைத் தாக்கி இருக்கிறது என்ற சராசரி மனிதனுக்குத் தெரிய வேண்டிய பட்டறிவைத் தராத படிப்பறிவு எதற்கு எனத் தெரியாமல் தான் கேட்கிறேன். தலைவலி, சளி, காய்ச்சல் எனச் சர்வ நோய்களுக்கும் பாராசிட்டமால் என்ற சர்வ ரோக நிவாரணி ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். அவ்வப்போது விற்பனை நிறுவனத்தார் மாற்றும் பெயரை மட்டும் சொல்லி விட்டு ஒரே மாத்திரையிலேயே எல்லா நிவாரணங்களையும் பெறுவதென்றால் எப்படி?

சரி! மஞ்சள் காமாலையைப் பற்றிப் பார்ப்போம்.  சாதாரணமாக, மஞ்சளாக சிறுநீர் கழிக்கையில், ஒரு சாமானிய மனிதன் என்ன செய்கிறான்? முதல் நாள் சூடாக இருக்கலாம் என நினைக்கலாம். அடுத்த நாள், மருத்துவரிடம் போகிறானோ இல்லையோ, குறைந்த பட்சம், சோறு கொண்ட தானறிந்த சோதனையையாவது செய்து பார்க்க வேண்டாமா? கட்டுப்பெட்டிகள், பழமைவாதிகள், பட்டிக்காட்டான்கள் என்று நகைப்புடன் கடந்து போகும் எளிய வாழ்க்கை வாழும் கிராமத்தினருக்கு இந்த அடிப்படை பட்டறிவு இருக்கிறது. அங்கேயும் நீரிழிவு நோய் வந்து விட்டது. எனினும் தங்கள் தினசரி வாழ்க்கையில் தங்கள் உடல் எவ்வாறு இருக்கும் என்பதையும் மாற்றங்கள் நிகழ்வதையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளும் நிகழ் கால பட்டறிவும் கவனமும் அவர்களிடம் நிறைய உள்ளது.

ஆனால் நிறைய படித்து விட்டு, நல்ல வேலைகளில், மாத சம்பளம் பெறுபவர்களுக்கு, தங்கள் உடல் மீது அக்கறை குறைந்து விட்டதை உணர்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு சிறு மாத்திரையை விழுங்கி விட்டு வேலைக்குப் போய்விடும் மனோபாவம், கவலையளிக்கிறது. மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் வந்தவருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ஆனால், சூட்டினாலோ, வேலைப் பளுவினாலோ இருக்கலாம் எனக் கடந்து போயிருப்பார். அல்லது ஒரு நாள், இரு நாள் பார்த்து விட்டு, அடுத்து வந்த நாட்களில், அதையே சகஜ நிலையாக நினைக்கும் ஆபத்தான மன நிலைக்குச் சென்றிருக்கலாம். அல்லது பெரிதாக ஒன்றும் இருக்காது. இதற்கெல்லாம் எதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தி இருக்கலாம். அல்லது குடும்ப விழாக்கள், பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற முக்கிய செலவுகள் இருக்க, இப்பொழுதென்ன மருத்துவத்திற்கு அவசரம்? கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்று நினைத்திருக்கலாம். அல்லது இலக்கு நிர்ணயக்கப் பட்ட இன்றைய தொழில் துறையில், உடலைக் கூர்ந்து நோக்க நேரமின்றி, அவகாசமின்றி, விடுமுறையின்றி, கவனிக்கப் படாமலேயே கடந்து போயிருக்கலாம்.

ஆனால், இந்த இருக்கலாம்கள் எல்லாம், எந்த நிலையிலும் நோயின் தன்மையைக் குறைக்கப் போவதில்லை. மாறாக தீவிரப் படுத்தி, சிக்கல் மேல் சிக்கல் சேர்த்து, மருத்துவ விஞ்ஞானத்தைத் தோற்கடிக்க நாமே செய்து கொள்ளும் ஏற்பாடுகள் என்று, எப்பொழுது நாம் உனர்ந்து கொள்ளப் போகிறோம்.?

ஆரம்ப காலத்தில் கவனிக்காமல் விட்டு விட்டு, இறுதிக் கட்டத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்த பின்,  மருத்துவர்களைக் குறை கூறுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

வேலை வேண்டும்தான். வாழ்க்கைக்குப் பணம் சம்பாதிப்பதும், கடின உழைப்பும் முக்கியம்தான். நான்  இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சுவர்  இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? கருவியைத் தொலைத்துவிட்டு காரியம் நிகழ்த்துவதானால் எப்படி? உடல் முக்கியம். உங்கள் குடும்பத்திற்கு உங்கள் உயிர் முக்கியம். கவனிப்பீர்களா நண்பர்களே!?!

சேர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை!

பயணங்கள் முடிவதில்லை-III


அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்?

இந்த கேள்வி எழுந்து ஒரு முழு இரவும் பகலும் கடந்து விட்டன. எனினும் விடை மட்டும் கிட்டிய பாடில்லை. இந்த மனுக்ஷன் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை! மனசே ரொம்ப பேஜாரா இருக்கு! என்று நேற்று மாலையில், என் அலுவலக ஊழியர் கூறுகையில், ஏன்? யாருக்கு என்ன ஆச்சு சண்முகம் என்றேன். அந்த ரயில்வே கேட் கீப்பர் மேடம்! பெருசா வெள்ளையா மீசை வைச்சுக் கிட்டு வருவாரே! பெயர் மறந்து போச்சு! உங்க கிட்ட வீட்டு லோன் வாங்குவதைப் பற்றிக் கூட விசாரிச்சாரே! அவர்தான் மேடம்! ரயில்வே ஸ்டேக்ஷன்ல போஸ்டர் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன். ஞாயிற்றுக்கிழமை ராத்திரி தூக்கு போட்டுக் கிட்டாராம் மேடம்! அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை போலிருக்கிறது என்றார்!

யார் மணியா? என்றேன். அவர் இல்லை மேடம்! உங்களுக்கு ஞாபகம் வரல! அந்த பென்சன் லோன், அதான் அந்த நவமணிக்குக் கூட கையெழுத்து போட்டாரே! அவர்தான் மேடம்! என்றார். முகம் லேசாக மனதில் நிழலாடியது. தவறாக நினைத்து விடக் கூடாது என்று தலையைச் சிலுப்பிக் கொண்டேன், பாவம்! என்ன பிரச்சனையோ? என்றவாறு!

பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்கள் மேல் எனக்கு அனுதாபமோ, அபிமானமோ வந்ததில்லை, வருவதில்லை, என் பள்ளித் தோழன் அறிவொளி உட்பட. அவர்கள் கோழைகள் மற்றும் சமூக துரோகிகள் என்பேன். ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் தற்கொலைகள், கன நேர முடிவில் ஒரு நீண்ட அற்புதமான வாழ்வைப் பொசுக்கி விடுகின்றன.  மானம் சம்பந்தப் பட்டவையாக கருதப் படுகின்ற அவை, கை, கால், மூளை எல்லாம் சரியாக இருப்பவர்களால்தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. ஊனமுற்றவர்கள் கிடைத்த வாழ்வை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். எல்லாம் இருந்தால் அதன் அருமை தெரிவதில்லயோ! போதாததற்கு மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் போல என்று ஒன்றுக்கும் உதவாத உவமை வேறு! செய்த தவறுகளுக்கான விளைவுகளை எதிர்நோக்க முடியாமல் அல்லது வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் செய்யும் மற்றொரு தவறு அது! பிரச்சனைகளின் வேரை ஆராயாமல், முட்களைப் பார்த்து மிரண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வதால் யாருக்கு என்ன பயன்?

ஆனால் அற்பமே ஆனாலும் இந்த அதிக பட்ச தண்டனை அதிகம்தான். யோசனையுடன் வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். பேருந்து நிறுத்தத்தில் இருந்த வீட்டு மனை விற்பனை விளம்பரப் பலகையில் ஒட்டியிருந்த போஸ்டரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் சற்றே திடுக்கிட்டேன். ஞாயிறு இரவு சுமார் 11.30 மணியளவில், திரு. அருள் நித்யானந்தம் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது……. என்று தொடர்ந்து இங்ஙனம் என்று அவரது மனைவி, மக்கள் மற்றும் மருமக்கள் பெயர்கள் இடப்பட்டிருந்தன. இவரா? அடப்பாவமே! ஆனால் ஏன்? ஏன்? என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்தவாறிருந்தன.

அதற்குப் பின் என் பேச்சு நின்று போயிருந்ததை, மற்றவர்கள் சுட்டிக் காட்டிய பிறகுதான் உணர முடிந்தது. வேலை அதிகமா மேடம்? ரொம்ப சோர்வா இருக்கீங்க என்றவர்களுக்கு நான் சாதாரணமாக உதிர்க்கும் புன்னகையைக் கூட உதிர்க்க முடியவில்லை. தொடர்ந்த பேருந்துப் பயணத்திலும், இரவு இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போதும் கூட என்னால் சகஜ நிலைக்கு வர இயலவில்லை. வேலை இடத்தில் நடப்பவற்றை மூளைக்கு மட்டும் சொல்லி விட்டு, மனதிற்குள் நுழையத் தடை போடும் வித்தையை இன்னும் நான் கற்றுக் கொள்ளவில்லை!

ஆனால், இரவு ஒன்பதரை மணியளவில் மண்டல அலுவலகத்திலிருந்து வந்த மறுதின மிகச் சிறு கிளைத் திறப்பு விழாவுக்கான, ரெடி பண்ணிடுங்கம்மா! நாங்கள் 8.45க்கு கிளம்பிடுவோம். நீங்க ஆபீஸ்ல தனியா இருக்கிறதுனால 9-9.30க்குள்ள முடிச்சுட்டு, உங்களை ஆபீஸ்ல் ட்ராப் பண்ணிடலாம் என்ற ஆர்டரைக் கேட்டவுடன் சகலமும் மறந்து போனது. 9.40க்கு ஊராட்சி மன்றத் தலைவர் பேச ஆரம்பித்து, இப்ப சொன்னா எப்படி மேடம்? என்று ஆரம்பித்த உரையாடலை சரிங்க மேடம்! காலையில செய்துடலாம்! என்று முடித்தபோது இரவு 10.00 மணி.

அதற்குப் பிறகு அப்பாவிடம் புலம்பினால், உன்னால முடியும்னு தானம்மா இவ்வளவு SHORT NOTICE ல நம்பிக்கையோட சொல்றாங்க. வேற ஆபீஸர் இல்ல. RDO ON LEAVE , தனியா நீதான் தயார் செய்யனும்னு அவங்களுக்கும் தெரியும். DGM VISIT போது சொதப்பினால் அது உனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் கெட்ட பெயர் என்றும் அவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி, நீ செய்வன்னு அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதால தான், உன்னைச் செய்யச் சொல்றாங்க. நல்லா பண்ணலாம்மா! இப்போ நிம்மதியாத் தூங்கு! காலையில் எல்லாம் நன்றாகச் செய்து விடலாம் என்று அப்பா கொடுத்த உற்சாக டானிக்குடன் உறங்கப் போனேன்.

காலையில் எழுந்ததிலிலிருந்து அலைபேசியும் கையுமாக எங்கெங்கும் அலைந்து கொண்டிருந்த போது அந்த போஸ்டரைக் கடந்து சென்றதாக நினைவில்லை. அதே இடத்தில் இருந்தும்கூட, வேலை என் கவனத்தை திசை திருப்பி விட்டிருந்தது. விழாவை வெற்றிகரமாக முடித்து, காலைக்கும் மதியத்திற்குமாக சேர்த்து மதியம் மூன்று மணிக்கு சாப்பிட்டு, அலுவலக வேலை நேரம் முடித்து, மாலை 7.30 மணிக்கு, பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால் மீண்டும் திரு. அருள் நித்யானந்தத்தின் போஸ்டர். இம்முறை அருள் நித்யானந்தம் ஏன் அமரரானார் என்ற கேள்வி எழவில்லை. மாறாக மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வி எழுந்தது. ஆமாம் யார் இந்த மாரிமுத்து?

இது நடந்தது இந்த மாதத் தொடக்கத்தில். ஒரு வழக்கமான கூட்டம் மிகுந்த பென்க்ஷன் தினம். கெளன்டரின் சூடான காலைப் பொழுது. மேடம்! என்ற குரலுக்கு தலை உயர்த்தி, சொல்லுங்க என்றேன் நான். நான் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து வருகிறேன். பென்க்ஷனர் மாரிமுத்துவோட ப்ரதர். சரி! 
அவரால மேல ஏறி வந்து பென்க்ஷன் வாங்க முடியாது. அதனால கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டோம். கோணல் மானலான கையெழுத்தைப் பார்த்து, வங்கி அதிகாரிகளுக்கேயான சந்தேகம் எழ, அதெப்படிங்க! வேண்டுமானால் எங்கள் பணியாளர்களை அனுப்பி கையெழுத்து பெறுவது தான் முறை! என்றவாறு பாஸ்புக்கை வாங்கினேன். முதியோர் ஓய்வூதியத்தைப் பொருத்தவரை, நான் அறிந்து, வேறு கைகளுக்குப் போய் விடக் கூடாதென்பதில் சற்று கவனத்துடன் தான் செயல்பட்டு வருகிறேன். பாஸ்புக்கைப் பிரித்ததும் இடறியது.

கடவுளே! இவரா! வாய்ப்பே இல்லை! ஏதேனும் ஏமாற்றுகிறார்களா? என்று சட்டென சிந்தனை எழுகிறது. சில மாதங்களாக அவரைக் காணாதது அப்பொழுதுதான் நெருடியது. ஓய்வூதியத்திற்காகவோ, அது சார்ந்த கடனுக்காகவோ, பேரக்குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு துவங்கவோ எதற்காகவும், எப்பொழுது வங்கிக்கு வந்தாலும், என்னிடம் நேராக வந்து பேசிவிட்டு, வேலையை முடித்துக் கொண்டு செல்லும் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். ஒரு ராணுவ வீரராகவோ, ரயில்வே காவலராகவோ அவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. வெகு செவ்வனே பராமரிக்கப் பட்ட ஆரோக்கியமான உடம்புக்காரர். ஆனால் சில மாதங்களாக ஏன் அவர் வரவில்லை? அவருக்கு என்ன ஆயிற்று? வினவுகிறேன்

மஞ்சள் காமாலை என்று மருத்துவ பரிசோதனைக்குச் சென்றோம். முற்றி விட்டது என்று மருத்துவமனையில் அனுமதித்துச் சோதனை செய்தார்கள். வயிற்றில் கட்டி, சோதனையில் புற்று நோய் என்று தெரிய வந்தது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலேயே கைவிரித்துவிட்டார்கள். ஆர்மி ஆஸ்பிட்டல், க்ஷீபா ஆஸ்பிட்டல் எல்லாம் கைவிரித்து ஜி.எச்சிற்கு எடுத்துச் செல்லச் சொன்னார்கள். ஜி.எச்சில் மருத்துவர்கள், இது முற்றிய நிலை, நீங்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வது நல்லது என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் என்றார், மாரிமுத்துவின் சகோதரர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டவர்.

கூட்டத்தை ஒதுக்கி விட்டு, கையில் பாஸ்புக்குடனும், மூர்த்தி வாங்க என்று என் அலுவலக ஊழியரிடம் சொல்லி விட்டு, பணவிடைச்சீட்டுடன் கீழே விடு விடென்று இறங்கினேன். அவரும் உடன் மற்றொரு இளைஞனும் என்னைப் பின் தொடர்ந்தனர். வங்கியின் வாசலில் நின்றிருந்த க்ஷேர் ஆட்டோவில் வேறு யாரோ அமர்ந்திருந்தனர். திரும்பி எங்கே சார் என்றேன்.

இங்கே வாங்க மேடம்! என்று ஒரு சிறிய ரக, காய்கறி மற்றும் சுமைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் பின்கதவைத் திறந்தார். அதிர்ந்தே போனேன் நான். அவரே தான். அத்தனை கட்டுக் கோப்பாகப் பார்த்த அதே பெரியவர், உடலெல்லாம் மஞ்சள் ஊறி, வயிறு உப்பி, நினைவற்ற நிலையில் கண்மூடிக் கிடந்தார். தலைமாட்டில் அவரது மனைவி அழுதவாறு அமர்ந்திருந்தார். மூச்சுத் திணறுவதுபோல் திணறிப் போனேன். மனதை ஏதொ பிசைய, என்னங்க இது? எப்படி இவ்வளவு சீரியசாக விட்டீங்க? மூர்த்தி அவரோட கைரேகை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பட படவென பேசி முடித்தேன். என் பதவியை என் மூளை நினைவுறுத்தினாலும், என் மனம் என்னைப் பதற வைத்து விட்டது. என் பதற்றத்தைப் பார்த்து விட்டு, என்ன மேடம்! என்ன மேடம்! என்று ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ஒன்றுமில்லை! அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர்களை விலக்கினேன்.

அழுதுகொண்டிருந்த அவர் மனையிடம், மனதைத் தளர விடாதீர்கள் அம்மா! கடவுளை நம்புங்கள்! மனிதனால் ஆகாத அதிசயத்தை, மருத்துவத்தை கடவுள் நிகழ்த்துவார். நானும் வேண்டிக் கொள்கிறேன். அவர் நிச்சயம் குணமாகி விடுவார் என்றேன். மூளை இது அவரின் இறுதி நிலை என்றது. மனமோ, கடவுளே! அவரைக் காப்பாற்று! என்றது. அடுத்த மாதம் எப்படி மேடம்? அவரை அழைத்து வந்துதான் ஓய்வூதியம் வாங்க வேண்டுமா? என்றவரிடம், வேண்டாங்க! வேறு யாராவது வாருங்கள்! நான் என் அலுவலகத்தில் இருந்து யாரையாவது உடன் அனுப்பி கைரேகை பெற்றுக் கொள்கிறேன் என்றேன். எந்த நம்பிக்கையில் அவ்வாறு கூறினேன் என்று இந்த நிமிடம் வரையில் எனக்குத் தெரியவில்லை, நன்றி சொன்னவர்களுக்கு பதில் நன்றி சொல்லி விட்டு, மனம் நிறைய பாரத்துடன் என் இருக்கைக்குத் திரும்பினேன்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சென்று விட்டனர். என் மனம் மட்டும், அந்த வண்டிக்கு அருகிலேயே நின்று கொண்டு நகர மறுத்து அடம்பிடித்தது. அலுவலகத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் புலம்பித் தீர்த்து விட்டேன். நல்ல வேளையாக மாலையில் மண்டல அலுவலகத்திலிருந்து திடீர் REVIEW MEETINGகிற்கு அழைக்க, ஜி.ஆர்.டியின் மூன்று மணி நேர ரெவ்யூ மனதை மாற்றியது.

மறுநாள் மாலை கவிந்த நேரத்தில், பேருந்தில் ஈஞ்சம்பாக்கம் கடக்கையில், யாரையோ அடக்கம் செய்து விட்டு, சாலையோர மரத்தடியில், செலவுப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். சட்டென மாரிமுத்துவாக இருக்குமோ என்று மூளைக்குள் பொறி. சும்மா இரு! அவராக இருக்காது. நன்றாக இருக்கட்டும் என்றது மனம். இன்னும் ஏன் அவருக்கு கக்ஷ்டம். போதுமே! ஓய்வு பெறட்டும் என்ற மூளையைக் கடைசி வரை பேசவே விடவில்லை மனம். அதற்குப் பின் நாட்கள் ஓடி விட்டன. மறந்திருந்த  மாரிமுத்து அவர்களை அருள் நித்யானந்தம் நினைக்க வைத்தது விசித்திரம்தான்.

கடைசியில் அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்? எனத் தொடங்கி, மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வியுடன் விழித்துக் கொண்டிருக்கும் இந்த இரவுதான் மிச்சம். ஓய்வூதியம் பெற மீண்டும் திரு. மாரிமுத்து வருவார் என்ற நம்பிக்கையுடன், ஒரு வேண்டுதலைச் சுமக்கும் மனதுடன், அடுத்த மாதத்தின், முதல் வாரத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை. அவர் வருவார்!!!

சேர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை!

Tuesday, May 22, 2012



ஒரு வெற்றுத் தாளின்
பக்கம் போலத்தான்
மூடி வைக்கிறேன்,
இந்த இரவையும்!

என் கைகளினின்றும்
நழுவி ஓடுகின்றது
காலம்!

என் கால்களினின்றும்
நழுவி ஓடுகின்றன
சாலைகள்!

என் கண்களினின்றும்
நழுவி ஓடுகின்றன
காட்சிகள்!

ஏனோ இவை
யாவற்றுக்கும் ஏதுமில்லை
சாட்சிகள்!

ஒரு வெற்றுத் தாளின்
பக்கம் போலத்தான்
மூடி வைக்கிறேன்,
இந்த இரவையும்!

Saturday, May 19, 2012

Remembering 18.05 @ Mullivaikkaal



ஆறாத வடுக்கள்;
அழியாத சுவடுகள்;
மாறாத காயங்கள்;
மறவாத நினைவுகள்!

ஆன்டுகள் மூன்று
அவசரமாகக் கடந்த பின்னும்
அப்படியேதான் இருக்கின்றது
அவர்களின் நாட்காட்டி!

கேலியான தீர்மானங்கள்;
போலியான அறிக்கைகள்;
அன்னை தேசமே
அன்னியமான பின்-
அனைத்து நாடுகளுக்கும்
அவர்கள் அகதிகள்தானே!

புத்தனும் தூங்கிப் போனான்
புதைகுழியின் பிணங்களுடன்-
உதிர்ந்த உயிர்களோடும்,
உலர்ந்த உணர்வுகளோடும்!

மடிந்தவை மட்டுமே
பிணங்களாகா!
மரிக்காத உடல்கள் தரிக்கும்
மனங்கள் கூடத்தான் என
மெதுவாகப் புரிகிறது!

பார்த்துப் பதறினாலும்
பாராத பாசாங்குடன்
பாவங்கள் சுமந்து
சிலுவை சேர்கிறோம்!

என் இனம்
வாழ்ந்தால் போதும்!
என் பிள்ளை
வளர்ந்தால் போதும்!
என் வயிறு
நிறைந்தால் போதும்!
உன் வலி
உனக்குத் தானே என
உறக்கத்தில் நடைபோடும்
உனக்கும் எனக்கும்
புரிந்த உண்மை,
பாவிகளை இரட்சிக்க
வந்த அந்த
பரமனுக்கும் தெரியும்-
இதற்கெல்லாம் இனி
பாவ மன்னிப்பே
இல்லை என!

வெட்கித் தலைகுனிகிறேன்
மீண்டும் ஒரு முறை-
மனிதனாகப் பிறந்ததற்காக!
மனிதம் போதித்த
மகாத்மாவின் தேசத்தில்
மனம் ஒளித்து
செவிடாக வாழ்வதற்காக!

முள்ளி வாய்க்காலில்
முடியும் முன்னர்
முதல் இட்டுப் போன
அத்தனை தமிழர்களுக்கும்
முதல் வணக்கங்கள்!
மாண்ட இடத்திலிருந்தே
மீண்டு வரும்
வட்டியுடன் மீண்டும்
வற்றாத தமிழினம்!!

Sunday, May 6, 2012

பயணங்கள் முடிவதில்லை!!!-Part 2


பேருந்தில் வீட்டுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன், ஆனந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. பேருந்து ஓட்டுனர் வண்டியை சாலையின் குறுக்கே திருப்பி திடீரென ப்ரேக் போட்டதில், உலுக்கி எழுப்பியது போல் உறக்கம் கலைந்தது.

எட்டிப் பார்த்ததில் பேருந்தின் பக்க வாட்டில் இரு சக்கர வாகனத்தில் காலை நடைப் பயிற்சிக்கான உடையுடன் இரண்டு இளைஞர்கள், லேசான பதற்றத்துடன் பேருந்தைக் கடந்து நட்ட நடு சாலையில் நிற்பது தெரிந்தது. ஓர் விபத்து தவிர்க்கப் பட்டிருப்பது அப்பட்டமாக விளங்கியது. பயம் கண்ணில் இருந்து விலகாத நிலையிலேயே ஓர் இளைஞன், வண்டியிலிருந்து இறங்கினான். என்னப்பா இது? எனக் கேட்ட ஓட்டுனரின் குரலில் கோபம் இல்லை, எரிச்சல் இல்லை,. மாறாக பரிவும் பக்குவமான விசாரிப்பும் இருந்தது. “கறிண்ணா!” என்றான் இளைஞன்.  அப்பொழுதுதான் கவனித்தேன். சாலையின் நடுவில் பைக் பக்கத்தில் நெடுஞ்சாலையில் இரண்டு கருப்பு பாலித்தீன் பைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழுந்து கிடந்தன. பேருந்து ஓட்டுனர் சட்டென்று கூறினார். “ கொஞ்சம் ஏமாந்து விட்டிருந்தா நீங்களே கறியாகி இருப்பீங்க! பார்த்துப் போங்கப்பா! “ என்று. அவர் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை எனப் பொட்டில் அடித்தாற்போல பளீரெனப் புரிந்தது. .

அழகான இந்தக் காலைப் பொழுது, எல்லோருக்கும் ஒன்று போல் தான் விடிகிறது. அதை அழகாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது நம் கையில் தான் இருக்கிறது. பேருந்து ஓட்டுனருக்கு வயது ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்துக்குள் இருக்கும். அவரை நம்பி, அந்த இளைஞர்களின் வயதில் மகனோ மகளோ இருக்கக் கூடும். அவர்களுக்காக மட்டுமல்லாமல் இந்தப் பேருந்தில் பயணிக்கும் ஐம்பத்தேழு பேருக்காகவும் அவர் பேருந்தை கவனமாக ஓட்ட வேண்டி இருக்கிறது. அதை அவர் செவ்வனே செய்கிறார். காயத்தையோ உயிரிழப்பையோ ஏற்படுத்தி இருக்கக் கூடிய ஒரு விபத்தையும் திறம் பட தவிர்த்துள்ளார்.

ஆனால் வாழ்க்கைக்குள் இப்பொழுதுதான் காலடி எடுத்து வைத்துள்ள இளைஞர்களுக்கு வேகம் மட்டுமே வாழ்க்கையல்ல என்று புரிந்து கொள்ள இப்படி ஒரு சம்பவம், அசம்பாவிதமாகி இருக்கக் கூடிய ஒரு சம்பவம் தேவைப் படுகிறது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, விவேகமான ஓட்டுனரின் சுதாரிப்புதான் உயிர்ப் பிச்சை கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்வார்களா?. எத்தனை பேரின் காலை அமைதியாக ஆரம்பிக்க, பதற்றம் இல்லாமல் பயணம் தொடர, கால விரயம் இன்றி அவரவர் இலக்கினைச் சென்றடைய உதவிய பேருந்து ஓட்டுனரின் பங்கு சிறிது போல் தோன்றினாலும் பெரிதினும் பெரிதே. அவருக்கும் அவரைப் போன்ற அனைத்து பேருந்து மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கும், பிற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் நிச்சயம் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.

சிறு குறு ஊர்ப்புறச் சாலைகளிலும், சிறிய பெரிய நகர்ப்பற வீதிகளிலும், சாலைகளிலும் பயணித்துக் கொண்டிருக்கும் என்னையும் உள்ளடக்கிய  இளைஞர்களே! உங்கள் வாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இல்லை. உங்களைச் சார்ந்த குடும்பத்தினரும், நண்பர்களும், பிற நேசம் மிகு உறவுகளும், தொழில் முறை சார்ந்த சக ஊழியர்களும், வாடிக்கையாளர்களும், நீங்கள் கடந்து செல்லும் சாலையில் நடந்தோ, மிதிவண்டியிலோ, இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களிலோ பயணிக்கும் மக்களும் தெரிந்தோ தெரியாமலோ அவரவர் வாழ்க்கையை நீங்கள் பயணம் செய்யும் வாகனத்தினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உங்கள் கைகளில்  ஒப்படைத்திருக்கிறார்கள் என்று உணர்ந்து உங்கள் வாகனத்தை ஓட்டுங்கள்.

நடந்து போனால் போதாது, இன்று பறந்தால் மட்டுமே மற்றவர்களுடன் போட்டியிட்டு வாழ்க்கையை நடத்த முடியும் என்பது சம்பாத்தியத்திற்கு வேண்டுமானால் சரியான வாக்கியமாக  இருக்கலாம். ஆனால் சாலையில் நாம் பயணிக்கையில் நம்முடைய இன்றிமையாத தேவை, வேகம் அல்ல, மிதமான வேகத்தில் கவனத்துடன் ஓட்டும் விவேகமே என்பதைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் தொடருங்கள். உங்கள் பாதுகாப்பான பயணம் மற்றுமொரு அற்புதமான வாழ்க்கையின் தருணத்தை, இன்னொரு நாள் வாழும் வாய்ப்பை மற்றவருக்கும் வழங்குகிறதென்பதை மறந்து விடாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.

சேர்ந்து பயணிப்போம்.

பயணங்கள் முடிவதில்லை!!!


விளக்குகளுக்கு வேலையின்றி
விழித்திருக்கிறது வெண்ணிலா,
வெளிச்சத்தை வெள்ளமாய்
வெளியெங்கும் பாய்ச்சியவாறு!

விழித்தெழும் விடியல்கள்
யாவும் இவ்வாறிருந்தால்
எப்படி இருக்கும்?
பேராசை எழுகிறது
ஓர் பெளர்ணமியின்
வெளிச்ச விரிப்பில்!

அமாவாசையும் பிறைகளும்
கடந்த பிறகே
அழகு நிலா
முழுமை பெறுவதை
கண்டறிந்து சொல்கிறது
கையளவு பட்டறிவு!

என்ன ஒரு
கண்டுபிடிப்பென்று நான்
இறுமாந்திருக்கையில் கேட்கிறது
ஒரு குரல்!

வளரவும் இல்லை!
நான் தேயவும் இல்லை!
வற்றாத ஒளியுடன்
வடுவுறாத வடிவுடன்
மாற்றமின்றி நான்
முற்பொழுதும் மலர்ந்திருக்கிறேன்!

சுற்றும் உன் பூமியும்
சுழலும் உன்
சூரியக் குடும்பமும்
என்னை உருமாற்றிக் காண்பதின்
உண்மையை உணர்க!

சொன்னது…….
வெண்ணிலவாகக்கூட
இருக்கக் கூடும்!

ஆராய்ச்சி எதற்கு!
ஆனந்தத்தை அனுபவி!
அப்பற்ற அழகு
ஆய்வதற்கல்ல ஆராதிப்பற்கே!
சிந்தனை எழுகிறது
சின்ன கொட்டாவியுடன்!
Happy Morning!!

Saturday, May 5, 2012


கேட்டால் தருவேன் என்றவன் நீயே!
கேட்டேன் ஒன்று தந்தாயா!!!!!!

தேவனின் கோயில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தேவனே!!


Friday, May 4, 2012

பயணங்கள் முடிவதில்லை


எனக்கு ஆறுதல் வேண்டாம்! ஆனால் அழ வேண்டும் போல் இருக்கிறது. இந்த அழுகைக்குக் காரணம் சோகமோ துக்கமோ அல்ல! ஒரு புரிதல்!

ஏமாற்றும் மகன்களிடம் நகையைக் கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக வாங்கி வந்த ஒரு லட்ச ரூபாயை “ நீ எது செய்தாலும் சரி! எனக்கு நல்லது தாம்மா செய்வ! அம்மாவால அலைய முடியாது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை நான் வட்டி வாங்கிக்குறேன். வாரிசாய் என் வீட்டுக்காரரை போட்டுடு! நான் முதலில் போனால் என் பணம் அவருக்கு உதவட்டும். அவர் போனால் அவர் பணம் எனக்கு உதவட்டும்” என வைப்புத் தொகை வைக்க வரும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியிடம் சொல்கிறேன். அதெல்லாம் சொல்லாதீங்க! கவலையை விடுங்க! நீங்க இரண்டு பேரும் நூறு வருக்ஷம் இன்னும் ஆரோக்கியமா சந்தோக்ஷமாய் இருப்பீங்க என்கையில் அவரின் முகத்தில் சொல்லிலடங்கா மகிழ்ச்சி பூக்கிறது. அருகில் இருக்கும் இளைஞன் அந்த பூரிப்பை ரசிப்பதைப் பார்த்த மூதாட்டியை, அவனிடம் என்னைக் காட்டி எது சொல்ல வைக்கிறது, “இது என் மகள்!” என. எதற்காகவோ என்னிடம்  புகார் செய்ய வந்த இளைஞன் ஆச்சரியக் குறியுடன் பார்க்கும் வாடிக்கையாளரானான். என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஒரு ஆத்மார்த்தமான புன்னகையை மட்டும் உதிர்க்கிறேன்.

ஒரு அடர்த்தியான அழுத்தம் அப்பிக் கொள்ளும் வேலைப்பளு மிகுந்த நாளின் நடுவில், தங்கள் பண பரிவர்த்தனைக்கான என் அனுமதிக்காகக் காத்திருக்கும் பத்து பன்னிரண்டு வாடிக்கையாளர்கள் தாண்டி கவனிக்க வைக்கிறது ஒரு பொறுமை இழந்த குரல். தன் வைப்புத் தொகை பற்றி அதிகம் கேள்வி கேட்கும் ஒரு பெரியவரிடம் பொறுமை இழந்து கொண்டிருக்கும் சக ஊழியரை அனுப்பி விட்டு, பெரியவரின் எதிரில் அமர்ந்து விசாரிக்கிறேன்.

கொஞ்சம் பொறுங்கள் சார்! எல்லா கணக்குகளையும் சரிபார்த்து நாளை காலையில் நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். பத்து லட்சத்தை நீங்கள் தாராளமாக நாளைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்கிறேன். சட்டென கண்களில் நீர் அரும்ப, “நான் என்னம்மா சொல்றது? இந்தப் பணம் இரண்டாம் பட்சம். அதை எப்ப வேண்டுமானாலும் வாங்கிக்கிறேன். என் நிலத்தை விற்று வருகிற பணத்தில் ஒரு வீடு வாங்கி என் பெயரிலேயே பதிவு செய்து, அதில் வருகிற வாடகை பணத்தை என் செலவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினான் என் மகன். நிலத்தை விற்ற பணத்தின் பெரும் பகுதியை அவன் பெயரில் போட்டுக் கொண்டான். பதிமூன்று லட்சத்தை என் பெயரில் போட்டு வைத்தவன், இப்பொழுது வேறு விதமாக என்னை ஏமாற்றுகிறான். வீடெல்லாம் உன் பெயரில் எழுத முடியாது, உன் பெயரில் இருக்கும் பத்து லட்சத்தை மரியாதையாக எனக்கு எடுத்துக் கொடுத்து விடு. நான் வீடு வாங்கிக் கொள்கிறேன். மீதமிருக்கும் மூன்று அல்லது நான்கு லட்சத்தை உன் பெயரில் போட்டு வைத்து, நீ இருக்கிற  வரைக்கும் வட்டி வாங்கி சாப்பிடு. நீ செத்த அப்புறம் அந்த பணம் எனக்குத்தான் என்கிறான். நான் சம்பாதித்த நிலம் போச்சு. நம்பின மகன் நெஞ்சில குத்தறான். மீறினால் சோறு போட மாட்டேன்; வெளியே போ என்கிறான். சின்னவன் நெஞ்சில குத்தறான். பெரியவன் முதுகில ஏற்கனவே குத்திட்டான்.

நான் யாரை நம்பியும் பொறக்கலம்மா! கோயில் கோயிலா சுத்தறேன். அன்றைய உணவை ஆண்டவன் படியளக்கிறான். நான் அருள் வாக்கு சொல்றவன். ஆனா நான் இதை உனக்கு மட்டும்தான் சொல்றேன். அப்படி என் மரியாதையை விட்டு கீழே இறங்கணும்னா, என் வாழ்க்கையை முடிச்சுக்குவேன். இதை நான் ஏன் உன்கிட்ட சொல்றேன்னு அப்புறமா நாளைக்கு சொல்றேன். ஆனால் உனக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியக் கூடாது, எனக்கு என்ன ஆனாலும்!
மத்தபடி பணம் இருக்கட்டும்மா! நாளைக்கு பத்தோ பதினொன்றோ, மதியமோ சாயந்திரமோ கூட வாங்கிக் கொள்கிறேன். என்னவோ என் பாரத்தை எல்லாம் உன்கிட்டத்தான் சொல்லணும்னு தோணுச்சு. ரகசியம் பத்திரம் என்றார்.” ஒன்றும் ஆகாது. வருத்தப் படாதீர்கள். உங்கள் பணத்தை உங்களுக்காக சிறப்பான வைப்புத் தொகையாக்கி, நல்ல முறையில் முடித்துத் தருகிறேன். போயிட்டு வாங்க! எல்லாம் சரியாயிடும்” என்கிறேன். கண்களில் நீருடன், நன்றி சொல்லி விட்டுப் போகும் பெரியவரை என்னிடம் அவர் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள தூண்டியது எது?

எப்பொழுதாவது நான் தொடர்வண்டியில் செல்கையில், பழக்கமான ஒரு பாட்டி. வெறிச்சென்ற கழுத்தும் காதுகளும், ஒற்றை மூக்குத்தி, சமயத்தில் அதுவும் இல்லையென்றாலும் ஒரு எளிமையான அழகோடு மெல்லிய தேகத்துடன் மிடுக்காய் வரும் பாட்டி. என்னை பயணச் சீட்டு வாங்குகையிலேயே பார்த்து விட்டு, ஏன் நேத்து வரல என்பார். மாங்காய், வாழைப்பழம், பலாப்பழம் எனப் பருவத்துக்குத் தகுந்தவாறு, பள்ளிச் சிறாருக்கு பழம் விற்கும் பாட்டி, காது கேட்காதென்ற பொழுதிலும் என்னுடன் ஆர்வமாய் பேசிக் கொண்டு வருவதே ரசனைக்குறியதாக இருக்கும்.

தன் கண் அறுவை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வைத்துள்ளதாகவும், மழைக் காலம் முடிந்ததும் தன் மகளை அழைத்துச் சென்று சிகிச்சை செய்து கொள்ளப் போவதாகவும் கூறுவார். அண்ணன் வீடு, மக வீடெல்லாம் இருக்குது. நான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன். ச்சீ! ன்னு ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாது. இந்தக் கண் பார்வை சுத்தமா போயிடுச்சு, ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இந்தக் கண்ணும் சரியாத் தெரியல. மங்கலாத்தான் தெரியுது. இப்போ கூட, டீ கூட குடிக்காமத்தான் காசு சேர்த்து வைக்கிறேன். மழைக்காலம் போயிடுச்சுன்னா கண் ஆபரேக்ஷன் பண்ணிக்குவேன். நல்லபடியா கண் தெரிஞ்சு உன்னையெல்லாம் பார்க்கணும். என்னை உன் கல்யாணத்துக்கு உன் ஊருக்கு கூப்பிடுவியா? என்பார். நிச்சயமா என்பேன் நான். ஆமாம்! மேனேஜருக்கு ஆயிரம் பேரைத் தெரியும். என்னை உன் வீட்டுக்கெல்லாம் உன் கல்யாணத்துக்கு கூப்பிடுவியா என்பார். கண்டிப்பா என்பேன் மீண்டும். எனக்கு புடவை எடுத்துத் தந்து உன் கல்யாணத்துக்கு கூப்பிடு. நான் எங்கேயும் போனதில்ல. ஆனா உனக்காக கண்டிப்பா வருவேன் என்பார்.

திருமால்பூரில் இறங்குகையில் யாரும் அறியாமல் கையில் பத்து ரூபாயைத் திணித்து டீ சாப்பிடுங்க! என்பேன். பின்னர் ஏதோ ஒரு நாளில் அந்தப் பத்து ரூபாயை விடவும் அதிகமாக சிறப்புச் சுவையுடன் ஏதோ ஒரு பழத்தை எனக்கு மட்டும் கொடுப்பார். மற்றவர்களிடம் பழத்திற்கான காசு பெற்றுக் கொண்டாலும் என்னிடம் பெற்றதே இல்லை. உங்க ப்ரண்ட் உங்களுக்கு மட்டும் ஸ்பெக்ஷலாத் தராங்க என்பார்கள் சக பயணிகள். அன்பில் கனிந்திருக்கும் அக்கனிகள் அதீத சுவையுடன் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். பிறகு நேரம் சரிப்படாததால் நான் தொடர் வண்டியில் செல்வதை நிறுத்தி விட்டேன்.

சில மாதங்களுக்கு முன், கடன் வசூசுக்கு சென்று விட்டு, அயர்ந்து அலுவலகத்துக்குள் நுழையும் வேளையில் முதியோர் உதவித் தொகை வாங்கும் இரு பெண்கள், மேடம் என்று வழியிலேயே நிறுத்தினார்கள். என்னம்மா? என்றேன். அந்த பழம் விக்கிற பாட்டி ரயில்ல வருமே மேடம்! அது ரெண்டு நாளைக்கு முன்னால தவறிடுச்சி. ஒன்னாம் தேதி பென்க்ஷன் வாங்க வந்தப்ப சொல்லலாம்னு நினச்சோம். பாவம்! நீங்களே கூட்டத்தோட போராடிக்கிட்டிருந்தீங்க! பேங்க் பண விக்ஷயம். நாங்க சொல்லி, நீங்க எதுன்னா டென்க்ஷனாய் வேலைக்கு பாதிப்பு வந்துடக் கூடாதுன்னுதான் சொல்லலை மேடம். அந்தக் கிழவி எப்பவும் உங்களைப் பத்தி சொல்லும், எங்க கிட்டயும் கேட்கும். நீங்க சாப்பிட சொல்லி பணம் கொடுப்பீங்களாமே! மேனேஜரம்மா எவ்வளவு நல்லது பாருன்னு சுத்தி இருக்கிற வீட்டுக்காரங்ககிட்ட எல்லாம் காமிக்கும். ரொம்ப ரோக்ஷக்கார கிழவி மேடம். அக்கம்பக்கத்தில யாரிடத்திலயும் கையேந்தாது. காசில்லன்னா பட்டினியா கூட இருக்குமே தவிர பத்து பைசா கொடுன்னு கேட்காது. உங்கக்கிட்ட எப்படி வாங்கிக்கிச்சுன்னு தெரியல. பேங்க்கம்மாவை எனக்குத் தெரியும்னு ரொம்ப பெருமையாப் பேசும் மேடம். என்று வருத்தத்தை ஆச்சரியத்துடன் ஆனால் சின்சியராக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நாட்களில் பார்த்த மற்ற முதியவர்களும் அந்த பாட்டியைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். பெயர் தெரியாத அந்தப் பாட்டியை என்பால் எது ஈர்த்தது. அல்லது இத்தனை பெரியவர்களிடம் என்னைப் பற்றி எது பகிர்ந்து கொள்ள வைத்தது. இத்தனை பேரும் உரிமையுடன் என்னுடன் பகிர்ந்து கொண்ட நிமிடங்கள் எவ்வாறு சாத்தியப்ப்பட்டன.

தனியாகவோ, தம்பதிகளாகவோ மாதம் ஒரு முறை பென்க்ஷனோ, வைப்புத் தொகை வட்டியோ வாங்கிப் போக வரும் பெரியவர்கள், தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து அந்தச் சிறிய தொகையை பெரு மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வது எதனால்?

எப்போதாவது வரும் அந்த தாடி வைத்த பெரியவர், நீ என் மூத்த மகள். நீ இருக்கிற வரைக்கும் நான் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு வருவேன் என்று, சீம்பால் (எனக்கு பால் பிடிக்காது என்பது அவருக்குத் தெரியாது) முதல் இளநீர், வேர்க்கடலை, இனிப்பு கார வகைகள், பழவகைகள், பிஸ்கட் என கிடைப்பவற்றை எல்லாம் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடுவார். அவருக்கு என் மீது ஏன் இத்தனை பாசம்.

தொழுநோயில் இரண்டு கைகளின் கால்களின் மொத்த விரலையும் இழந்து நின்ற ஒரு பெண்மணிக்கு ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் எவ்வாறேனும் உதவித் தொகை வாங்கித் தந்தே தீருவதென தீர்மானித்து அவர் மகனுடன் கணக்கு தொடங்கி முதியோர் உதவித் தொகை பெற்றுத் தந்த முதல் மாதம். எங்கே உங்கம்மா என்றதற்கு அவர் மகன் கைகாட்டிய திசையில், வங்கி வாசல் கதவிற்கு வெளியே கைகூப்பியவாறு நின்றிருந்தார், அவரை உள்ளே அழைத்து அருகில் நின்ற அவர் மகனிடம் தொகையைக் கொடுத்த போது அந்தப் பெண்மணியின் கண்ணில் தெரிந்த உணர்ச்சிகள்!

கடனைத் தருவதிலும் திரும்பப் பெறுவதிலும் நான் கராறாக இருக்கிறேன் என்பதால், முக்கியமாக காலம் கடந்த கடன்களை திரும்பப் பெறுவதில் நான் சிரத்தையுடன் கட்டாயத்துடன் இருக்கிறேன் என்பதால் மற்றவர்களுக்கு என் மீது கொஞ்சமல்ல நிறையவே வருத்தம் உண்டு. ஆனால் அவர்களை வட்டிச் சலுகையுடன் நான் கடன் சுமையிலிருந்து விடுவித்ததை, தலை நிமிர்ந்து நடக்க வைத்ததை என்றேனும் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள். மிகத் தெளிவாக ஒரு முதியவர் கூறினார், அவங்க கிடக்குறாங்கம்மா! நீ உன் கடமையைத்தானம்மா செய்ற என்று.

அவர்களுக்குச் செய்யாத எதையும் இந்தப் பெரியவர்களுக்கு நான் தனியே சிறப்புச் சலுகையாக செய்து விடவில்லை. ஒரு கனிவான புன்னகையையும், அன்பான வரவேற்பையும் ஆறுதலான செவிமடுத்தலையும் தந்ததைத் தவிர.
மொத்தத்தில் யோசித்துப் பார்த்தால் ஒன்று மட்டும் விளங்குகிறது. எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து முடித்து விட்டு வந்த பின் எல்லா மனிதர்களுக்கும் அடிப்படைத் தேவை பணம் அல்ல……………………ஒரு துளி பாசம் மட்டுமே என்று! 

பயணிப்போம்.

பயணங்கள் முடிவதில்லை

Tuesday, May 1, 2012

அப்பாவும் நானும்!

அப்பா!
என் உயிரின் முதல் துளி! என் வாழ்க்கையின் வித்து! என் இருப்பின் ஆதாரம்! என் அன்பிற்குரிய ஆசான்! என் விலை மதிப்பற்ற வழிகாட்டி! என் மதிப்பிக்குரிய மாமனிதர்! என் தந்தை! என் பாசமான அப்பா! என் அப்பா!

என் அப்பாவைப் பற்றிப் பேசும் முன்…..பொதுவாக அப்பா என்பவர் எவ்வாறு பார்க்கப் படுகிறார் என்று பார்ப்போம்.

அம்மாவைப் பற்றி அதிகம் பேசுபவர்கள் பெரும்பாலும் அப்பாவைப் பற்றி விமர்சிப்பவர்களாகவோ அல்லது எதையும் பேசாதவர்களாகவோ இருக்கிறார்கள்! ஏனெனில் அப்பா என்பவர் பெரும்பாலும் ஓடி உழைத்துக் களைத்துத் திரும்பும் வேளைகளில் காணப்படும் ஒரு கடினமான மனிதராகவே காணப்படுகிறார்! கருத்தில் கொள்ளப்படுகிறார்! கண்டிப்பின் மறு உருவமாகவே கருதப் படுகிறார்! காரணம் தங்களை வெளிப்படுத்திய படைப்பாளிகளின் சமூகம் இன்னும் ஆண்களின் பெரும்பான்மையில் அழுந்திக் கிடப்பதனாலாகவும் இருக்கலாம்! வெளிவந்த படைப்புகளில், வெளிப்பட்ட கருத்துக்கள் பதிவுகளாகின்றன. அவை பெரும்பாலும் இன்று வரை ஆண்களுக்குரியவையாக இருக்கின்றன. தன் குடும்பத்துக்காக ஓடாகத் தேய்ந்து, அவமானங்கள் பொறுத்து, அழுகைகளை உள்ளுக்குள் ஒளித்துக் கொண்டு உலா வரும் அப்பா ஏனோ அன்னியப்பட்டுப் போகிறார்! மழலைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கும்பொழுது, இருபாலருக்கும் இனியவராக இருக்கும் அப்பா, பதின் வயது என்ற பருவத்தில் வேறுபட்டுப் போவதற்கு நம் சமூகமும் ஒரு தவிர்க்க இயலாத காரணம். பெரிய மனுக்ஷி என்ற பெயரில் பெண்கள் தங்கள் வீடு எனும் கூடுகளுக்கு அருகாமையில் வரும் பதின் வயதில், அரும்பு மீசை, வலுவாகும் உடல், வசீகரிக்கும் நட்பு, நான் பெரிய பையனாயிட்டேன் என்று கூடுகளை விட்டு விலகி வெளி உலகத்தை நோக்கிச் சிறகு விரிக்கும் பொழுதுகளில் கண்டிப்பு காட்டித் திருத்தும் ஆசானாக உருவெடுக்கும் தந்தை ஆண்பிள்ளைகளிடமிருந்து முதல் முறையாகத் தனிப்பட்டுப் போகிறார். நானும் ஆண்மகன், நானும் வளர்ந்து விட்டேன் என்று திமிர்ந்தெழும் பதின் வயதில் தந்தை மகன் உறவு தகிக்கும் தனலாகிவிடுகிறது. பின் தொடரும் வாக்குவாதங்கள், மனச்சிக்கல்கள் பல சமயம் உறவுகளைச் சிதைக்கும் எல்லைக்குப் போய் விடுகின்றன. விளைவு தனிக்குடித்தனம், முதியோர் இல்லம் மற்றும் இன்ன பிற.

தந்தை மகன் உறவை மிகவும் நேர்மையாகப் பதிவு செய்த வகையில் இயக்குனர் சேரனின் “தவமாய் தவமிருந்து” திரைப்படம் அப்பழுக்கற்ற அழுத்தமான ஆணித்தரமான அழகான ஒரே பதிவாக அமைகிறது! அந்த வகையில் என்னைப் பொருத்த வரையில் “வாரணம் ஆயிரம்” திரைப்படம் ஒரு ஹைடெக் ஹைக்கூ! அவ்வளவே!

தந்தை மகள் உறவைப் பல பல திரைப்படங்கள் உருக உருக, திரையரங்கம் எங்கும் கண்ணீர் மிதக்கக் காவியப் படுத்தி இருக்கின்றன. எனினும் மனதில் நிற்கும் மகத்தான என் சமகால படைப்புகள் என்று ஊன்றி கவனித்தால் விரல் விட்டும் எண்ணி விடலாம் போல்தான் இருக்கிறது! மணிரத்னம் மற்றும் கமலின் மகத்தான படைப்பான “நாயகன்” அந்த விதத்தில் நாயகனே! “மகாநதி”யும் ஒரு மகத்தான பதிவு!

இன்றைய இயக்குனர்களில் உறவுகளின் மகத்துவத்தை ஒரு மயிலிறகைப் போல் இயல்பாக அழகாக வடிக்கும் இயக்குனர் வசந்த் என் மதிப்பிற்குரிய மகத்தான இயக்குனர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் “கேளடி கண்மணி” எவ்வாறு சாத்தியப்பட்டது என்று இன்னும் வியப்பாக இருக்கிறது. “கேளடி கண்மணி” திரைப்படம் SPB அவர்களை பாடகர் என்பதைத் தாண்டி நடிகர் என்பதைத் தாண்டி இன்னும் மதிப்பிற்குரிய மனிதராக்கியது,

“பூவெல்லாம் கேட்டுப் பார்” திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்- அழுத்தமான வேதனையுடன் பனியன் வேட்டியில் தனி அறையில் தரையில் அமர்ந்து ஜோதிகாவிடம் தன் வருத்தத்தை வெளிப்படுத்தும் அதீத அன்புடைய, தான் முழுதும் நம்பி பாசம் செலுத்தியும், தன்னை மீறி தன் மகள் கூடப் போய் விட்டாளே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய நாசர் முதல் முறையாக என்னை ஆச்சரியப் படுத்தினார். நாசரின் படைப்புக்களை, நடிப்பை நோக்கி நான் திரும்பிய நேரம் பெரும்பாலும் அதுவாகத் தான் இருக்க முடியும். அந்த நடிப்பை அதே நாசர் “ இந்திரா” திரைப்படத்தில் கொடுத்திருந்தாலும், வசந்த்தின் படைப்புக்கே சிறப்பிடம். நன்றி! இயக்குனர் திரு. வசந்த் அவர்களே! காதல், காமம், வன்முறை, பழிவாங்குதல், கொலை, கொள்ளை ஆகியவற்றை மட்டுமே இன்றைய இயல்பான படைப்புகளாக போலியாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய பெரும்பான்மையான இயக்குனர்களுக்கு நடுவில், “நேருக்கு நேர்”, “ரிதம்” என்று பெரிய கதாநாயகர்களின் படங்களிலும் எந்த விட்டுக் கொடுத்தலும் இன்றி உறவுகளின் மகத்துவத்தைக் கூறிக் கொண்டிருக்கும் தங்கள் பயணம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மற்றபடி தந்தை-மகள் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “அபியும் நானும்” மற்றும் “தெய்வத் திருமகள்” போன்ற திரைப்படங்களை எடுத்த முயற்சிக்காக நிச்சயம் பாராட்டலாம் எனினும் HAVE A LONG WAY TO GO!



இனி நான்…..



காஞ்சனா!அப்பா செல்லம் எப்பொழுதும்! 


வாழ்வின் மிகச் சிறப்பான நாட்களை, மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே எனக்கு உரித்தாக்க ஆசைப்படும் அதற்காக பிரயத்தனப்படும் என் அப்பாதான் இன்றைய இந்தப் பொழுது வரையில் என் எல்லா வெற்றிகளுக்கும் பின்னால், சுதந்திரமான என் படைப்புகளுக்குப் பின்னால் இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அன்பான அம்மா, அண்ணன் மற்றும் தம்பியுடன் அழகான என் குடும்பம் என் அப்பாவின் தலைமையினால் தலைநிமிர்ந்திருக்கிறது.

நான் ஒரு வங்கி மேலாளரின் மகளாகப் பிறந்தேன் வளர்ந்தேன். ஆனால் என் அப்பா ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் நேர்மையாலும் ஒழுக்கத்தினாலும், கடின உழைப்பாலும், காலம் பாராமல் கடமை ஆற்றுவதாலும், மனிதாபிமானத்தினாலும், தன்னைப் பெற்றவர்களை, தன் உடன்பிறந்தவர்களை மேன்மைப் படுதினார். எளியவர்களுக்கு உதவும் மென்மையான மனதாலும், அபார அறிவினாலும் வங்கியின் முதன்மை மேலாளராக உயர்ந்தார். வாழ்க்கையில் எந்த உயரத்திற்குப் போனாலும் அதே பணிவுடன், சக மனிதர்களை மதிக்க வேண்டும், மதிக்கவும் மன்னிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற மிகச் சிறந்த பாடத்தை அப்பா எங்களுக்குச் சொல்லித் தரவில்லை. அவரைப் பார்த்து நாங்கள் கற்றுக் கொண்டோம். பக்தியையும் எல்லா மதங்களையும் சரியாகப் புரிந்து சகோதரத்துவம் கொள்வதற்கும், வினா எழுப்புவதற்கும், விடை அறிந்து அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் நாங்கள் அப்பாவைப் பார்த்தே தெரிந்து கொண்டோம். அவ்வாறே வாழ்கிறோம். 


பத்தாம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியையான தன் மனைவியை (எங்கள் அம்மாவை) +2, BA, MA, M.Ed என்று படிக்க வைத்து பெருமிதத்துடன் தலைநிமிர்த்திவைத்த கல்வியின் மகத்துவம் உணர்ந்த B.Sc(Agri) முடித்த ஒரு பக்கா PROFESSIONAL ஐ, சிறந்த கணவனை, மாண்புமிகு ஆண்மகனை, நாங்கள் கண்கூடாகப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். 


வேலைப் பளு எவ்வளவு இருந்தாலும் வாரக் கடைசியை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சூட்சுமத்தை ஒரு வங்கி அதிகாரியாக நான் என் அப்பாவிடமே கற்றுக் கொண்டிருக்கிறேன். 


பிள்ளைகள் நாங்கள் மூவரும் தூங்கியபிறகு அலுவலகத்திலிருந்து திரும்பினாலும் (வங்கி அதிகாரிகள் அப்பொழுதிலிருந்தே இப்படித்தான்) மறக்காமல் எழுப்பி அப்பா வாங்கி வந்த தின்பண்டங்களை அம்மா அன்புடன் ஊட்டி விட்ட நாட்களில் நாங்கள் பாசத்தையும் குடும்பத்தின் பிணைப்பையும் கற்றுக் கொண்டோம். அம்மா அப்பாவைப் பெற்ற தாத்தாக்கள், ஆயா, ஆயம்மா, பெரியப்பாக்கள் பெரியம்மாக்களின், அத்தைகள் மாமாக்களின் பிள்ளைகள் இவர்களுடன் நாங்கள் என எல்லோரும் ஏதேனும் ஒரு வகையில் வாழ்க்கையில் வளர்ந்த எங்கள் வீட்டை அழகான கூட்டைக் கட்டி வளர்த்தவர் என் அப்பா! சேர்ந்து வாழ்வதின் சுகத்தை, விட்டுக் கொடுத்து வாழ்வதின் பேரானந்தத்தை நாங்கள் வாழ்ந்தே கற்றுக் கொண்டோம்.

எனக்கான ப்ரத்யேமான ஆடைகள், காதே குத்தாத வயதில் என் சக வயது தோழியர் பொறாமைப் பட நான் அணிந்து சென்ற காதணிகள் என்ற சிறு ஆசைகள் தொடங்கி, பொழுதுபோக்கு மற்றும் அறிவை விரிவாக்கிய சுற்றுலா பயணங்கள், மிகச் சிறந்த பள்ளியில் கல்வி, படிப்பு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் முதலிடம் என எல்லாவற்றுக்கும் காரணகர்த்தா தானே என்றாலும், இவள் என் மகள்! சாதிக்கப் பிறந்தவள் என்று பெருமையுடன் என் அப்பா சொன்ன ஒவ்வொரு தருணத்திலும் நான் அடுத்த உயரத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன், பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நன்றாக நினைவிருக்கிறது. என் ஐந்தாம் வகுப்பில் சுதந்திர தினத்துக்கான மாணவர்களிடையிலான போட்டிகள் நடந்து கொண்டிருந்த சமயம் அது. எனக்குக் காய்ச்சல் என்பதால் பேச்சுப் போட்டிக்குப் பெயர் கொடுக்கவில்லை. அப்பா அலுவலக வேலை நிமித்தம் ஒரு ட்ரெயினிங்குக்காக எர்ணாகுளம் சென்றிருந்தார். பேச்சுப் போட்டிக்கான நாள் வந்தது. இன்னும் ஒரு மணி நேரமே மிச்சமிருக்கிறது. நான் இல்லாத பேச்சுப் போட்டி. நிச்சயம் என் வகுப்புத் தோழன் உதய் வெற்றி பெற்று விடுவான். அசெம்ப்ளி முடிந்து அணிவகுப்புக்கான பயிற்சி நடந்து கொண்டிருக்கிறது. நானும் பயிற்சியில். எர்ணாகுளத்திலிருந்து அப்பா அனுப்பிய பேச்சுப் போட்டிக்கான படைப்புத்தாள்கள், கடிதமாக வந்து சேர்ந்தது. வகுப்பாசிரியர் அவசர அவசரமாக என்னைத் தனியே அழைத்து நீ தயாராகு என்று அணிவகுப்பிலிருந்து அழைத்துச் சென்றார். ஒரு வகுப்புக்கான நேரம். நான் தயாராகிவிட்டேன். பேச்சுப் போட்டியில் மீண்டும் முதலிடம். உதய் இரண்டாமிடம். இப்பவும் செகண்டா என்று காயத்ரி மிஸ் உதய்யை கேலி செய்தவாறு சென்றார். என்னைப் பெருமை படுத்திய அந்த என் ஆசிரியர்களை நன்றியுடன் இன்றும் நினைத்துக் கொள்கிறேன். அன்று மட்டுமல்ல, இன்று வரை என் எல்லா சாதனைகளுக்கும் சந்தோக்ஷங்களுக்கும் பின்னால் அப்பா எப்பொழுதும் இருக்கிறார்.

பெருமிதத்துடன் தான் கற்ற கல்லூரியை அறிமுகம் செய்து அப்பா சுற்றிக் காண்பித்த அந்நிமிடம் இன்றும் நினைவிருக்கிறது. பெரிய மணிக்கூண்டு, பசுமையான வளாகம், கனவு போல் ஒரு கல்லூரி. பள்ளிக் கல்வி முடித்து, எல்லோருக்குமான மருத்துவக் கனவை எனக்கு நனவாக்க என் தந்தை தயாராக இருந்த பொழுது, என் கலெக்டர் கனவுகள்பால் என்னை அழைத்துச் செல்ல, என் அப்பா படித்த கல்லூரியும் கல்வியும் என்னை அழைப்பதை உணர்ந்தேன். அப்பாவின் நண்பர்கள் பேராசிரியர்களாக அறிமுகமானார்கள். என் தந்தையின் மிக நெருங்கிய நண்பராக மட்டுமல்லாமல் என் தந்தைக்கு நிகரான பேராசிரியர் ரவீந்திரன், என் பொருளாதாரத் துறை மேற்படிப்புக்கான தூண்டுகோலாக இருந்தது மட்டுமல்லாமல், அவர் துணைவியார் மற்றும் குழந்தைகளுடன் என்னையும் தன் மகள் போல் பாவித்துக் காத்தார் என்றால் அது மிகையாகாது. மிகச் சிறந்த பேராசிரியர்கள், பொறாமை கொள்ள வைக்கும் கல்லூரி வளாகம், நல்ல நண்பர்கள் என்று பள்ளியைவிட என் கல்லூரி நாட்களையே அதிகம் நான் நேசிக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் என் சீனியராகவும் என் தந்தையாகவும் THANKS PA.

இன்னும் நினைவிருக்கிறது அப்பாவின் மிதிவண்டியின் முன் பகுதியில் எனக்காகவே சிறப்புச் சிம்மாசனமாக அமைக்கப் பட்டிருந்த இருக்கையை! அதே அன்பு, பின்னாளில் கல்லூரியில் என் பயன்பாட்டிற்காக தனியாக ஆர்டர் செய்யப்பட்டு அழைப்பு மணி, BACK LIGHT உடன் எனக்காக அனுப்பி வைத்த கேப்டன் சைக்கிளில் இருந்தது. என் கல்லூரி நாட்களின் மகத்தான நாட்கள் யாவிலும் என் மிதிவண்டி உடன் இருந்தது. ஒவ்வொரு தேர்வின் முடிவிலும் பல்கலைக்கழக வளாகம் முழுவதையும் மிதிவண்டியில் மூன்று முறை சுற்றி வருகையில், தேர்வின் அழுத்தம் மறந்து போய், உலகம் என் காலுக்கடியில் வரும். மழைநீரைக் கிழித்துக் கொண்டு மஞ்சள் சரக் கொன்றை மரங்களுக்கிடையிலான சாலையில் வேளாண்பொருளாதாரத் துறைக்குச் சென்ற நாட்களும், யாருமற்ற விடுமுறை மாலைகளில் விளையாட்டு மைதானத்தையொட்டிய மஞ்சள் பூப்படுகை விரித்த சாலையில் நூலகத்திற்குச் சென்ற நாட்களும், சில கடினமான தருணங்களில் மன அழுத்தம் தனிக்கத் தனிமை வேண்டி விடுதியின் பின்னிருந்த வயல்வெளிகளையும், மல்பெர்ரித் தோட்டங்களையும் நான் சுற்றித் திரிந்த நாட்களும், CHALTHE CHALTHE பாடிக்கொண்டு தோழியுடன் சாவகாசமாக செய்முறை வகுப்புகளுக்குச் சென்ற நாட்களும், நன்றாகத் தூங்கிவிட்டு வகுப்புக்கு ஐந்து நிமிடம் இருக்கையில் அடித்துப் பிடித்து அவசரமாக விரைந்த நாட்களும் என் அப்பா எனக்களித்த மிதிவண்டி சொர்க்கம். நான் மிதிவண்டி ஓட்டுவதை நிறுத்திய பின்னும் இன்னும் என் மிதிவண்டி வீட்டில் நிற்கிறது அதே பாசத்துடன்.

நின்று கொண்டிருக்கும் என் மிதிவண்டி தொடங்கி, நிகழ்ந்து கொண்டிருக்கும் என் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த என் கருத்துக்களுக்கும், பிரச்சனைகளுக்கும் செவிசாய்த்து சிக்கலில்லாமல் வழிநடத்திச் செல்வதற்காக அப்பாவுக்காக நான் நன்றி சொன்னதில்லை. இவ்வளவு அருமையான அப்பாவைக் கொடுத்ததற்காக ஆண்டவனுக்குத்தான் நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். HAPPY BIRTHDAY APPA. MANY HAPPY RETURNS OF THE DAY. LOVE YOU PA.