Friday, May 4, 2012

பயணங்கள் முடிவதில்லை


எனக்கு ஆறுதல் வேண்டாம்! ஆனால் அழ வேண்டும் போல் இருக்கிறது. இந்த அழுகைக்குக் காரணம் சோகமோ துக்கமோ அல்ல! ஒரு புரிதல்!

ஏமாற்றும் மகன்களிடம் நகையைக் கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக வாங்கி வந்த ஒரு லட்ச ரூபாயை “ நீ எது செய்தாலும் சரி! எனக்கு நல்லது தாம்மா செய்வ! அம்மாவால அலைய முடியாது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை நான் வட்டி வாங்கிக்குறேன். வாரிசாய் என் வீட்டுக்காரரை போட்டுடு! நான் முதலில் போனால் என் பணம் அவருக்கு உதவட்டும். அவர் போனால் அவர் பணம் எனக்கு உதவட்டும்” என வைப்புத் தொகை வைக்க வரும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியிடம் சொல்கிறேன். அதெல்லாம் சொல்லாதீங்க! கவலையை விடுங்க! நீங்க இரண்டு பேரும் நூறு வருக்ஷம் இன்னும் ஆரோக்கியமா சந்தோக்ஷமாய் இருப்பீங்க என்கையில் அவரின் முகத்தில் சொல்லிலடங்கா மகிழ்ச்சி பூக்கிறது. அருகில் இருக்கும் இளைஞன் அந்த பூரிப்பை ரசிப்பதைப் பார்த்த மூதாட்டியை, அவனிடம் என்னைக் காட்டி எது சொல்ல வைக்கிறது, “இது என் மகள்!” என. எதற்காகவோ என்னிடம்  புகார் செய்ய வந்த இளைஞன் ஆச்சரியக் குறியுடன் பார்க்கும் வாடிக்கையாளரானான். என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை. ஒரு ஆத்மார்த்தமான புன்னகையை மட்டும் உதிர்க்கிறேன்.

ஒரு அடர்த்தியான அழுத்தம் அப்பிக் கொள்ளும் வேலைப்பளு மிகுந்த நாளின் நடுவில், தங்கள் பண பரிவர்த்தனைக்கான என் அனுமதிக்காகக் காத்திருக்கும் பத்து பன்னிரண்டு வாடிக்கையாளர்கள் தாண்டி கவனிக்க வைக்கிறது ஒரு பொறுமை இழந்த குரல். தன் வைப்புத் தொகை பற்றி அதிகம் கேள்வி கேட்கும் ஒரு பெரியவரிடம் பொறுமை இழந்து கொண்டிருக்கும் சக ஊழியரை அனுப்பி விட்டு, பெரியவரின் எதிரில் அமர்ந்து விசாரிக்கிறேன்.

கொஞ்சம் பொறுங்கள் சார்! எல்லா கணக்குகளையும் சரிபார்த்து நாளை காலையில் நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன். பத்து லட்சத்தை நீங்கள் தாராளமாக நாளைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்கிறேன். சட்டென கண்களில் நீர் அரும்ப, “நான் என்னம்மா சொல்றது? இந்தப் பணம் இரண்டாம் பட்சம். அதை எப்ப வேண்டுமானாலும் வாங்கிக்கிறேன். என் நிலத்தை விற்று வருகிற பணத்தில் ஒரு வீடு வாங்கி என் பெயரிலேயே பதிவு செய்து, அதில் வருகிற வாடகை பணத்தை என் செலவுக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினான் என் மகன். நிலத்தை விற்ற பணத்தின் பெரும் பகுதியை அவன் பெயரில் போட்டுக் கொண்டான். பதிமூன்று லட்சத்தை என் பெயரில் போட்டு வைத்தவன், இப்பொழுது வேறு விதமாக என்னை ஏமாற்றுகிறான். வீடெல்லாம் உன் பெயரில் எழுத முடியாது, உன் பெயரில் இருக்கும் பத்து லட்சத்தை மரியாதையாக எனக்கு எடுத்துக் கொடுத்து விடு. நான் வீடு வாங்கிக் கொள்கிறேன். மீதமிருக்கும் மூன்று அல்லது நான்கு லட்சத்தை உன் பெயரில் போட்டு வைத்து, நீ இருக்கிற  வரைக்கும் வட்டி வாங்கி சாப்பிடு. நீ செத்த அப்புறம் அந்த பணம் எனக்குத்தான் என்கிறான். நான் சம்பாதித்த நிலம் போச்சு. நம்பின மகன் நெஞ்சில குத்தறான். மீறினால் சோறு போட மாட்டேன்; வெளியே போ என்கிறான். சின்னவன் நெஞ்சில குத்தறான். பெரியவன் முதுகில ஏற்கனவே குத்திட்டான்.

நான் யாரை நம்பியும் பொறக்கலம்மா! கோயில் கோயிலா சுத்தறேன். அன்றைய உணவை ஆண்டவன் படியளக்கிறான். நான் அருள் வாக்கு சொல்றவன். ஆனா நான் இதை உனக்கு மட்டும்தான் சொல்றேன். அப்படி என் மரியாதையை விட்டு கீழே இறங்கணும்னா, என் வாழ்க்கையை முடிச்சுக்குவேன். இதை நான் ஏன் உன்கிட்ட சொல்றேன்னு அப்புறமா நாளைக்கு சொல்றேன். ஆனால் உனக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியக் கூடாது, எனக்கு என்ன ஆனாலும்!
மத்தபடி பணம் இருக்கட்டும்மா! நாளைக்கு பத்தோ பதினொன்றோ, மதியமோ சாயந்திரமோ கூட வாங்கிக் கொள்கிறேன். என்னவோ என் பாரத்தை எல்லாம் உன்கிட்டத்தான் சொல்லணும்னு தோணுச்சு. ரகசியம் பத்திரம் என்றார்.” ஒன்றும் ஆகாது. வருத்தப் படாதீர்கள். உங்கள் பணத்தை உங்களுக்காக சிறப்பான வைப்புத் தொகையாக்கி, நல்ல முறையில் முடித்துத் தருகிறேன். போயிட்டு வாங்க! எல்லாம் சரியாயிடும்” என்கிறேன். கண்களில் நீருடன், நன்றி சொல்லி விட்டுப் போகும் பெரியவரை என்னிடம் அவர் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள தூண்டியது எது?

எப்பொழுதாவது நான் தொடர்வண்டியில் செல்கையில், பழக்கமான ஒரு பாட்டி. வெறிச்சென்ற கழுத்தும் காதுகளும், ஒற்றை மூக்குத்தி, சமயத்தில் அதுவும் இல்லையென்றாலும் ஒரு எளிமையான அழகோடு மெல்லிய தேகத்துடன் மிடுக்காய் வரும் பாட்டி. என்னை பயணச் சீட்டு வாங்குகையிலேயே பார்த்து விட்டு, ஏன் நேத்து வரல என்பார். மாங்காய், வாழைப்பழம், பலாப்பழம் எனப் பருவத்துக்குத் தகுந்தவாறு, பள்ளிச் சிறாருக்கு பழம் விற்கும் பாட்டி, காது கேட்காதென்ற பொழுதிலும் என்னுடன் ஆர்வமாய் பேசிக் கொண்டு வருவதே ரசனைக்குறியதாக இருக்கும்.

தன் கண் அறுவை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வைத்துள்ளதாகவும், மழைக் காலம் முடிந்ததும் தன் மகளை அழைத்துச் சென்று சிகிச்சை செய்து கொள்ளப் போவதாகவும் கூறுவார். அண்ணன் வீடு, மக வீடெல்லாம் இருக்குது. நான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன். ச்சீ! ன்னு ஒரு வார்த்தை சொல்லிடக்கூடாது. இந்தக் கண் பார்வை சுத்தமா போயிடுச்சு, ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. இந்தக் கண்ணும் சரியாத் தெரியல. மங்கலாத்தான் தெரியுது. இப்போ கூட, டீ கூட குடிக்காமத்தான் காசு சேர்த்து வைக்கிறேன். மழைக்காலம் போயிடுச்சுன்னா கண் ஆபரேக்ஷன் பண்ணிக்குவேன். நல்லபடியா கண் தெரிஞ்சு உன்னையெல்லாம் பார்க்கணும். என்னை உன் கல்யாணத்துக்கு உன் ஊருக்கு கூப்பிடுவியா? என்பார். நிச்சயமா என்பேன் நான். ஆமாம்! மேனேஜருக்கு ஆயிரம் பேரைத் தெரியும். என்னை உன் வீட்டுக்கெல்லாம் உன் கல்யாணத்துக்கு கூப்பிடுவியா என்பார். கண்டிப்பா என்பேன் மீண்டும். எனக்கு புடவை எடுத்துத் தந்து உன் கல்யாணத்துக்கு கூப்பிடு. நான் எங்கேயும் போனதில்ல. ஆனா உனக்காக கண்டிப்பா வருவேன் என்பார்.

திருமால்பூரில் இறங்குகையில் யாரும் அறியாமல் கையில் பத்து ரூபாயைத் திணித்து டீ சாப்பிடுங்க! என்பேன். பின்னர் ஏதோ ஒரு நாளில் அந்தப் பத்து ரூபாயை விடவும் அதிகமாக சிறப்புச் சுவையுடன் ஏதோ ஒரு பழத்தை எனக்கு மட்டும் கொடுப்பார். மற்றவர்களிடம் பழத்திற்கான காசு பெற்றுக் கொண்டாலும் என்னிடம் பெற்றதே இல்லை. உங்க ப்ரண்ட் உங்களுக்கு மட்டும் ஸ்பெக்ஷலாத் தராங்க என்பார்கள் சக பயணிகள். அன்பில் கனிந்திருக்கும் அக்கனிகள் அதீத சுவையுடன் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். பிறகு நேரம் சரிப்படாததால் நான் தொடர் வண்டியில் செல்வதை நிறுத்தி விட்டேன்.

சில மாதங்களுக்கு முன், கடன் வசூசுக்கு சென்று விட்டு, அயர்ந்து அலுவலகத்துக்குள் நுழையும் வேளையில் முதியோர் உதவித் தொகை வாங்கும் இரு பெண்கள், மேடம் என்று வழியிலேயே நிறுத்தினார்கள். என்னம்மா? என்றேன். அந்த பழம் விக்கிற பாட்டி ரயில்ல வருமே மேடம்! அது ரெண்டு நாளைக்கு முன்னால தவறிடுச்சி. ஒன்னாம் தேதி பென்க்ஷன் வாங்க வந்தப்ப சொல்லலாம்னு நினச்சோம். பாவம்! நீங்களே கூட்டத்தோட போராடிக்கிட்டிருந்தீங்க! பேங்க் பண விக்ஷயம். நாங்க சொல்லி, நீங்க எதுன்னா டென்க்ஷனாய் வேலைக்கு பாதிப்பு வந்துடக் கூடாதுன்னுதான் சொல்லலை மேடம். அந்தக் கிழவி எப்பவும் உங்களைப் பத்தி சொல்லும், எங்க கிட்டயும் கேட்கும். நீங்க சாப்பிட சொல்லி பணம் கொடுப்பீங்களாமே! மேனேஜரம்மா எவ்வளவு நல்லது பாருன்னு சுத்தி இருக்கிற வீட்டுக்காரங்ககிட்ட எல்லாம் காமிக்கும். ரொம்ப ரோக்ஷக்கார கிழவி மேடம். அக்கம்பக்கத்தில யாரிடத்திலயும் கையேந்தாது. காசில்லன்னா பட்டினியா கூட இருக்குமே தவிர பத்து பைசா கொடுன்னு கேட்காது. உங்கக்கிட்ட எப்படி வாங்கிக்கிச்சுன்னு தெரியல. பேங்க்கம்மாவை எனக்குத் தெரியும்னு ரொம்ப பெருமையாப் பேசும் மேடம். என்று வருத்தத்தை ஆச்சரியத்துடன் ஆனால் சின்சியராக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நாட்களில் பார்த்த மற்ற முதியவர்களும் அந்த பாட்டியைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். பெயர் தெரியாத அந்தப் பாட்டியை என்பால் எது ஈர்த்தது. அல்லது இத்தனை பெரியவர்களிடம் என்னைப் பற்றி எது பகிர்ந்து கொள்ள வைத்தது. இத்தனை பேரும் உரிமையுடன் என்னுடன் பகிர்ந்து கொண்ட நிமிடங்கள் எவ்வாறு சாத்தியப்ப்பட்டன.

தனியாகவோ, தம்பதிகளாகவோ மாதம் ஒரு முறை பென்க்ஷனோ, வைப்புத் தொகை வட்டியோ வாங்கிப் போக வரும் பெரியவர்கள், தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து அந்தச் சிறிய தொகையை பெரு மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வது எதனால்?

எப்போதாவது வரும் அந்த தாடி வைத்த பெரியவர், நீ என் மூத்த மகள். நீ இருக்கிற வரைக்கும் நான் இதையெல்லாம் எடுத்துக்கிட்டு வருவேன் என்று, சீம்பால் (எனக்கு பால் பிடிக்காது என்பது அவருக்குத் தெரியாது) முதல் இளநீர், வேர்க்கடலை, இனிப்பு கார வகைகள், பழவகைகள், பிஸ்கட் என கிடைப்பவற்றை எல்லாம் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடுவார். அவருக்கு என் மீது ஏன் இத்தனை பாசம்.

தொழுநோயில் இரண்டு கைகளின் கால்களின் மொத்த விரலையும் இழந்து நின்ற ஒரு பெண்மணிக்கு ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் எவ்வாறேனும் உதவித் தொகை வாங்கித் தந்தே தீருவதென தீர்மானித்து அவர் மகனுடன் கணக்கு தொடங்கி முதியோர் உதவித் தொகை பெற்றுத் தந்த முதல் மாதம். எங்கே உங்கம்மா என்றதற்கு அவர் மகன் கைகாட்டிய திசையில், வங்கி வாசல் கதவிற்கு வெளியே கைகூப்பியவாறு நின்றிருந்தார், அவரை உள்ளே அழைத்து அருகில் நின்ற அவர் மகனிடம் தொகையைக் கொடுத்த போது அந்தப் பெண்மணியின் கண்ணில் தெரிந்த உணர்ச்சிகள்!

கடனைத் தருவதிலும் திரும்பப் பெறுவதிலும் நான் கராறாக இருக்கிறேன் என்பதால், முக்கியமாக காலம் கடந்த கடன்களை திரும்பப் பெறுவதில் நான் சிரத்தையுடன் கட்டாயத்துடன் இருக்கிறேன் என்பதால் மற்றவர்களுக்கு என் மீது கொஞ்சமல்ல நிறையவே வருத்தம் உண்டு. ஆனால் அவர்களை வட்டிச் சலுகையுடன் நான் கடன் சுமையிலிருந்து விடுவித்ததை, தலை நிமிர்ந்து நடக்க வைத்ததை என்றேனும் ஒரு நாள் புரிந்து கொள்வார்கள். மிகத் தெளிவாக ஒரு முதியவர் கூறினார், அவங்க கிடக்குறாங்கம்மா! நீ உன் கடமையைத்தானம்மா செய்ற என்று.

அவர்களுக்குச் செய்யாத எதையும் இந்தப் பெரியவர்களுக்கு நான் தனியே சிறப்புச் சலுகையாக செய்து விடவில்லை. ஒரு கனிவான புன்னகையையும், அன்பான வரவேற்பையும் ஆறுதலான செவிமடுத்தலையும் தந்ததைத் தவிர.
மொத்தத்தில் யோசித்துப் பார்த்தால் ஒன்று மட்டும் விளங்குகிறது. எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து முடித்து விட்டு வந்த பின் எல்லா மனிதர்களுக்கும் அடிப்படைத் தேவை பணம் அல்ல……………………ஒரு துளி பாசம் மட்டுமே என்று! 

பயணிப்போம்.

பயணங்கள் முடிவதில்லை

2 comments:

  1. Wonderful thought. This is one of your best posts till now. I really enjoyed it. I could get the irony even before reading the last paragraph.

    Thanks for sharing !!!

    ReplyDelete