Thursday, May 24, 2012

பயணங்கள் முடிவதில்லை-III


அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்?

இந்த கேள்வி எழுந்து ஒரு முழு இரவும் பகலும் கடந்து விட்டன. எனினும் விடை மட்டும் கிட்டிய பாடில்லை. இந்த மனுக்ஷன் ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை! மனசே ரொம்ப பேஜாரா இருக்கு! என்று நேற்று மாலையில், என் அலுவலக ஊழியர் கூறுகையில், ஏன்? யாருக்கு என்ன ஆச்சு சண்முகம் என்றேன். அந்த ரயில்வே கேட் கீப்பர் மேடம்! பெருசா வெள்ளையா மீசை வைச்சுக் கிட்டு வருவாரே! பெயர் மறந்து போச்சு! உங்க கிட்ட வீட்டு லோன் வாங்குவதைப் பற்றிக் கூட விசாரிச்சாரே! அவர்தான் மேடம்! ரயில்வே ஸ்டேக்ஷன்ல போஸ்டர் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன். ஞாயிற்றுக்கிழமை ராத்திரி தூக்கு போட்டுக் கிட்டாராம் மேடம்! அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை போலிருக்கிறது என்றார்!

யார் மணியா? என்றேன். அவர் இல்லை மேடம்! உங்களுக்கு ஞாபகம் வரல! அந்த பென்சன் லோன், அதான் அந்த நவமணிக்குக் கூட கையெழுத்து போட்டாரே! அவர்தான் மேடம்! என்றார். முகம் லேசாக மனதில் நிழலாடியது. தவறாக நினைத்து விடக் கூடாது என்று தலையைச் சிலுப்பிக் கொண்டேன், பாவம்! என்ன பிரச்சனையோ? என்றவாறு!

பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்கள் மேல் எனக்கு அனுதாபமோ, அபிமானமோ வந்ததில்லை, வருவதில்லை, என் பள்ளித் தோழன் அறிவொளி உட்பட. அவர்கள் கோழைகள் மற்றும் சமூக துரோகிகள் என்பேன். ஏனெனில் பெரும்பாலான சமயங்களில் தற்கொலைகள், கன நேர முடிவில் ஒரு நீண்ட அற்புதமான வாழ்வைப் பொசுக்கி விடுகின்றன.  மானம் சம்பந்தப் பட்டவையாக கருதப் படுகின்ற அவை, கை, கால், மூளை எல்லாம் சரியாக இருப்பவர்களால்தான் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. ஊனமுற்றவர்கள் கிடைத்த வாழ்வை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். எல்லாம் இருந்தால் அதன் அருமை தெரிவதில்லயோ! போதாததற்கு மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் போல என்று ஒன்றுக்கும் உதவாத உவமை வேறு! செய்த தவறுகளுக்கான விளைவுகளை எதிர்நோக்க முடியாமல் அல்லது வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் செய்யும் மற்றொரு தவறு அது! பிரச்சனைகளின் வேரை ஆராயாமல், முட்களைப் பார்த்து மிரண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வதால் யாருக்கு என்ன பயன்?

ஆனால் அற்பமே ஆனாலும் இந்த அதிக பட்ச தண்டனை அதிகம்தான். யோசனையுடன் வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினேன். பேருந்து நிறுத்தத்தில் இருந்த வீட்டு மனை விற்பனை விளம்பரப் பலகையில் ஒட்டியிருந்த போஸ்டரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் சற்றே திடுக்கிட்டேன். ஞாயிறு இரவு சுமார் 11.30 மணியளவில், திரு. அருள் நித்யானந்தம் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது……. என்று தொடர்ந்து இங்ஙனம் என்று அவரது மனைவி, மக்கள் மற்றும் மருமக்கள் பெயர்கள் இடப்பட்டிருந்தன. இவரா? அடப்பாவமே! ஆனால் ஏன்? ஏன்? என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்தவாறிருந்தன.

அதற்குப் பின் என் பேச்சு நின்று போயிருந்ததை, மற்றவர்கள் சுட்டிக் காட்டிய பிறகுதான் உணர முடிந்தது. வேலை அதிகமா மேடம்? ரொம்ப சோர்வா இருக்கீங்க என்றவர்களுக்கு நான் சாதாரணமாக உதிர்க்கும் புன்னகையைக் கூட உதிர்க்க முடியவில்லை. தொடர்ந்த பேருந்துப் பயணத்திலும், இரவு இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போதும் கூட என்னால் சகஜ நிலைக்கு வர இயலவில்லை. வேலை இடத்தில் நடப்பவற்றை மூளைக்கு மட்டும் சொல்லி விட்டு, மனதிற்குள் நுழையத் தடை போடும் வித்தையை இன்னும் நான் கற்றுக் கொள்ளவில்லை!

ஆனால், இரவு ஒன்பதரை மணியளவில் மண்டல அலுவலகத்திலிருந்து வந்த மறுதின மிகச் சிறு கிளைத் திறப்பு விழாவுக்கான, ரெடி பண்ணிடுங்கம்மா! நாங்கள் 8.45க்கு கிளம்பிடுவோம். நீங்க ஆபீஸ்ல தனியா இருக்கிறதுனால 9-9.30க்குள்ள முடிச்சுட்டு, உங்களை ஆபீஸ்ல் ட்ராப் பண்ணிடலாம் என்ற ஆர்டரைக் கேட்டவுடன் சகலமும் மறந்து போனது. 9.40க்கு ஊராட்சி மன்றத் தலைவர் பேச ஆரம்பித்து, இப்ப சொன்னா எப்படி மேடம்? என்று ஆரம்பித்த உரையாடலை சரிங்க மேடம்! காலையில செய்துடலாம்! என்று முடித்தபோது இரவு 10.00 மணி.

அதற்குப் பிறகு அப்பாவிடம் புலம்பினால், உன்னால முடியும்னு தானம்மா இவ்வளவு SHORT NOTICE ல நம்பிக்கையோட சொல்றாங்க. வேற ஆபீஸர் இல்ல. RDO ON LEAVE , தனியா நீதான் தயார் செய்யனும்னு அவங்களுக்கும் தெரியும். DGM VISIT போது சொதப்பினால் அது உனக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் கெட்ட பெயர் என்றும் அவர்களுக்குத் தெரியும். அதையும் தாண்டி, நீ செய்வன்னு அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதால தான், உன்னைச் செய்யச் சொல்றாங்க. நல்லா பண்ணலாம்மா! இப்போ நிம்மதியாத் தூங்கு! காலையில் எல்லாம் நன்றாகச் செய்து விடலாம் என்று அப்பா கொடுத்த உற்சாக டானிக்குடன் உறங்கப் போனேன்.

காலையில் எழுந்ததிலிலிருந்து அலைபேசியும் கையுமாக எங்கெங்கும் அலைந்து கொண்டிருந்த போது அந்த போஸ்டரைக் கடந்து சென்றதாக நினைவில்லை. அதே இடத்தில் இருந்தும்கூட, வேலை என் கவனத்தை திசை திருப்பி விட்டிருந்தது. விழாவை வெற்றிகரமாக முடித்து, காலைக்கும் மதியத்திற்குமாக சேர்த்து மதியம் மூன்று மணிக்கு சாப்பிட்டு, அலுவலக வேலை நேரம் முடித்து, மாலை 7.30 மணிக்கு, பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால் மீண்டும் திரு. அருள் நித்யானந்தத்தின் போஸ்டர். இம்முறை அருள் நித்யானந்தம் ஏன் அமரரானார் என்ற கேள்வி எழவில்லை. மாறாக மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வி எழுந்தது. ஆமாம் யார் இந்த மாரிமுத்து?

இது நடந்தது இந்த மாதத் தொடக்கத்தில். ஒரு வழக்கமான கூட்டம் மிகுந்த பென்க்ஷன் தினம். கெளன்டரின் சூடான காலைப் பொழுது. மேடம்! என்ற குரலுக்கு தலை உயர்த்தி, சொல்லுங்க என்றேன் நான். நான் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து வருகிறேன். பென்க்ஷனர் மாரிமுத்துவோட ப்ரதர். சரி! 
அவரால மேல ஏறி வந்து பென்க்ஷன் வாங்க முடியாது. அதனால கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டோம். கோணல் மானலான கையெழுத்தைப் பார்த்து, வங்கி அதிகாரிகளுக்கேயான சந்தேகம் எழ, அதெப்படிங்க! வேண்டுமானால் எங்கள் பணியாளர்களை அனுப்பி கையெழுத்து பெறுவது தான் முறை! என்றவாறு பாஸ்புக்கை வாங்கினேன். முதியோர் ஓய்வூதியத்தைப் பொருத்தவரை, நான் அறிந்து, வேறு கைகளுக்குப் போய் விடக் கூடாதென்பதில் சற்று கவனத்துடன் தான் செயல்பட்டு வருகிறேன். பாஸ்புக்கைப் பிரித்ததும் இடறியது.

கடவுளே! இவரா! வாய்ப்பே இல்லை! ஏதேனும் ஏமாற்றுகிறார்களா? என்று சட்டென சிந்தனை எழுகிறது. சில மாதங்களாக அவரைக் காணாதது அப்பொழுதுதான் நெருடியது. ஓய்வூதியத்திற்காகவோ, அது சார்ந்த கடனுக்காகவோ, பேரக்குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு துவங்கவோ எதற்காகவும், எப்பொழுது வங்கிக்கு வந்தாலும், என்னிடம் நேராக வந்து பேசிவிட்டு, வேலையை முடித்துக் கொண்டு செல்லும் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். ஒரு ராணுவ வீரராகவோ, ரயில்வே காவலராகவோ அவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. வெகு செவ்வனே பராமரிக்கப் பட்ட ஆரோக்கியமான உடம்புக்காரர். ஆனால் சில மாதங்களாக ஏன் அவர் வரவில்லை? அவருக்கு என்ன ஆயிற்று? வினவுகிறேன்

மஞ்சள் காமாலை என்று மருத்துவ பரிசோதனைக்குச் சென்றோம். முற்றி விட்டது என்று மருத்துவமனையில் அனுமதித்துச் சோதனை செய்தார்கள். வயிற்றில் கட்டி, சோதனையில் புற்று நோய் என்று தெரிய வந்தது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலேயே கைவிரித்துவிட்டார்கள். ஆர்மி ஆஸ்பிட்டல், க்ஷீபா ஆஸ்பிட்டல் எல்லாம் கைவிரித்து ஜி.எச்சிற்கு எடுத்துச் செல்லச் சொன்னார்கள். ஜி.எச்சில் மருத்துவர்கள், இது முற்றிய நிலை, நீங்கள் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வது நல்லது என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் என்றார், மாரிமுத்துவின் சகோதரர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டவர்.

கூட்டத்தை ஒதுக்கி விட்டு, கையில் பாஸ்புக்குடனும், மூர்த்தி வாங்க என்று என் அலுவலக ஊழியரிடம் சொல்லி விட்டு, பணவிடைச்சீட்டுடன் கீழே விடு விடென்று இறங்கினேன். அவரும் உடன் மற்றொரு இளைஞனும் என்னைப் பின் தொடர்ந்தனர். வங்கியின் வாசலில் நின்றிருந்த க்ஷேர் ஆட்டோவில் வேறு யாரோ அமர்ந்திருந்தனர். திரும்பி எங்கே சார் என்றேன்.

இங்கே வாங்க மேடம்! என்று ஒரு சிறிய ரக, காய்கறி மற்றும் சுமைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் பின்கதவைத் திறந்தார். அதிர்ந்தே போனேன் நான். அவரே தான். அத்தனை கட்டுக் கோப்பாகப் பார்த்த அதே பெரியவர், உடலெல்லாம் மஞ்சள் ஊறி, வயிறு உப்பி, நினைவற்ற நிலையில் கண்மூடிக் கிடந்தார். தலைமாட்டில் அவரது மனைவி அழுதவாறு அமர்ந்திருந்தார். மூச்சுத் திணறுவதுபோல் திணறிப் போனேன். மனதை ஏதொ பிசைய, என்னங்க இது? எப்படி இவ்வளவு சீரியசாக விட்டீங்க? மூர்த்தி அவரோட கைரேகை எடுத்துக் கொள்ளுங்கள் என்று பட படவென பேசி முடித்தேன். என் பதவியை என் மூளை நினைவுறுத்தினாலும், என் மனம் என்னைப் பதற வைத்து விட்டது. என் பதற்றத்தைப் பார்த்து விட்டு, என்ன மேடம்! என்ன மேடம்! என்று ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ஒன்றுமில்லை! அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர்களை விலக்கினேன்.

அழுதுகொண்டிருந்த அவர் மனையிடம், மனதைத் தளர விடாதீர்கள் அம்மா! கடவுளை நம்புங்கள்! மனிதனால் ஆகாத அதிசயத்தை, மருத்துவத்தை கடவுள் நிகழ்த்துவார். நானும் வேண்டிக் கொள்கிறேன். அவர் நிச்சயம் குணமாகி விடுவார் என்றேன். மூளை இது அவரின் இறுதி நிலை என்றது. மனமோ, கடவுளே! அவரைக் காப்பாற்று! என்றது. அடுத்த மாதம் எப்படி மேடம்? அவரை அழைத்து வந்துதான் ஓய்வூதியம் வாங்க வேண்டுமா? என்றவரிடம், வேண்டாங்க! வேறு யாராவது வாருங்கள்! நான் என் அலுவலகத்தில் இருந்து யாரையாவது உடன் அனுப்பி கைரேகை பெற்றுக் கொள்கிறேன் என்றேன். எந்த நம்பிக்கையில் அவ்வாறு கூறினேன் என்று இந்த நிமிடம் வரையில் எனக்குத் தெரியவில்லை, நன்றி சொன்னவர்களுக்கு பதில் நன்றி சொல்லி விட்டு, மனம் நிறைய பாரத்துடன் என் இருக்கைக்குத் திரும்பினேன்.

பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சென்று விட்டனர். என் மனம் மட்டும், அந்த வண்டிக்கு அருகிலேயே நின்று கொண்டு நகர மறுத்து அடம்பிடித்தது. அலுவலகத்தில் கிட்டத்தட்ட அனைவரிடமும் புலம்பித் தீர்த்து விட்டேன். நல்ல வேளையாக மாலையில் மண்டல அலுவலகத்திலிருந்து திடீர் REVIEW MEETINGகிற்கு அழைக்க, ஜி.ஆர்.டியின் மூன்று மணி நேர ரெவ்யூ மனதை மாற்றியது.

மறுநாள் மாலை கவிந்த நேரத்தில், பேருந்தில் ஈஞ்சம்பாக்கம் கடக்கையில், யாரையோ அடக்கம் செய்து விட்டு, சாலையோர மரத்தடியில், செலவுப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். சட்டென மாரிமுத்துவாக இருக்குமோ என்று மூளைக்குள் பொறி. சும்மா இரு! அவராக இருக்காது. நன்றாக இருக்கட்டும் என்றது மனம். இன்னும் ஏன் அவருக்கு கக்ஷ்டம். போதுமே! ஓய்வு பெறட்டும் என்ற மூளையைக் கடைசி வரை பேசவே விடவில்லை மனம். அதற்குப் பின் நாட்கள் ஓடி விட்டன. மறந்திருந்த  மாரிமுத்து அவர்களை அருள் நித்யானந்தம் நினைக்க வைத்தது விசித்திரம்தான்.

கடைசியில் அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்? எனத் தொடங்கி, மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வியுடன் விழித்துக் கொண்டிருக்கும் இந்த இரவுதான் மிச்சம். ஓய்வூதியம் பெற மீண்டும் திரு. மாரிமுத்து வருவார் என்ற நம்பிக்கையுடன், ஒரு வேண்டுதலைச் சுமக்கும் மனதுடன், அடுத்த மாதத்தின், முதல் வாரத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை. அவர் வருவார்!!!

சேர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை!

1 comment:

  1. Its disheartening to note that Sri. Marimuthu is no more. Passed away on 10th May two days after he was brought to my Branch for getting the pension.May his soul rest in peace.God Pl. take care of him.

    ReplyDelete