பேருந்தில்
வீட்டுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். படித்துக் கொண்டிருந்த ஆனந்த விகடன்,
ஆனந்த உறக்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. பேருந்து ஓட்டுனர் வண்டியை சாலையின்
குறுக்கே திருப்பி திடீரென ப்ரேக் போட்டதில், உலுக்கி எழுப்பியது போல் உறக்கம் கலைந்தது.
எட்டிப்
பார்த்ததில் பேருந்தின் பக்க வாட்டில் இரு சக்கர வாகனத்தில் காலை நடைப் பயிற்சிக்கான
உடையுடன் இரண்டு இளைஞர்கள், லேசான பதற்றத்துடன் பேருந்தைக் கடந்து நட்ட நடு சாலையில்
நிற்பது தெரிந்தது. ஓர் விபத்து தவிர்க்கப் பட்டிருப்பது அப்பட்டமாக விளங்கியது. பயம்
கண்ணில் இருந்து விலகாத நிலையிலேயே ஓர் இளைஞன், வண்டியிலிருந்து இறங்கினான். என்னப்பா
இது? எனக் கேட்ட ஓட்டுனரின் குரலில் கோபம் இல்லை, எரிச்சல் இல்லை,. மாறாக பரிவும் பக்குவமான
விசாரிப்பும் இருந்தது. “கறிண்ணா!” என்றான் இளைஞன். அப்பொழுதுதான் கவனித்தேன். சாலையின் நடுவில் பைக்
பக்கத்தில் நெடுஞ்சாலையில் இரண்டு கருப்பு பாலித்தீன் பைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
விழுந்து கிடந்தன. பேருந்து ஓட்டுனர் சட்டென்று கூறினார். “ கொஞ்சம் ஏமாந்து விட்டிருந்தா
நீங்களே கறியாகி இருப்பீங்க! பார்த்துப் போங்கப்பா! “ என்று. அவர் சொன்னது எவ்வளவு
பெரிய உண்மை எனப் பொட்டில் அடித்தாற்போல பளீரெனப் புரிந்தது. .
அழகான
இந்தக் காலைப் பொழுது, எல்லோருக்கும் ஒன்று போல் தான் விடிகிறது. அதை அழகாக அடுத்த
கட்டத்திற்கு எடுத்துச் செல்வது நம் கையில் தான் இருக்கிறது. பேருந்து ஓட்டுனருக்கு
வயது ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்துக்குள் இருக்கும். அவரை நம்பி, அந்த இளைஞர்களின் வயதில்
மகனோ மகளோ இருக்கக் கூடும். அவர்களுக்காக மட்டுமல்லாமல் இந்தப் பேருந்தில் பயணிக்கும்
ஐம்பத்தேழு பேருக்காகவும் அவர் பேருந்தை கவனமாக ஓட்ட வேண்டி இருக்கிறது. அதை அவர் செவ்வனே
செய்கிறார். காயத்தையோ உயிரிழப்பையோ ஏற்படுத்தி இருக்கக் கூடிய ஒரு விபத்தையும் திறம்
பட தவிர்த்துள்ளார்.
ஆனால்
வாழ்க்கைக்குள் இப்பொழுதுதான் காலடி எடுத்து வைத்துள்ள இளைஞர்களுக்கு வேகம் மட்டுமே
வாழ்க்கையல்ல என்று புரிந்து கொள்ள இப்படி ஒரு சம்பவம், அசம்பாவிதமாகி இருக்கக் கூடிய
ஒரு சம்பவம் தேவைப் படுகிறது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, விவேகமான
ஓட்டுனரின் சுதாரிப்புதான் உயிர்ப் பிச்சை கொடுத்தது என்பதைப் புரிந்து கொள்வார்களா?.
எத்தனை பேரின் காலை அமைதியாக ஆரம்பிக்க, பதற்றம் இல்லாமல் பயணம் தொடர, கால விரயம் இன்றி
அவரவர் இலக்கினைச் சென்றடைய உதவிய பேருந்து ஓட்டுனரின் பங்கு சிறிது போல் தோன்றினாலும்
பெரிதினும் பெரிதே. அவருக்கும் அவரைப் போன்ற அனைத்து பேருந்து மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கும்,
பிற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் நிச்சயம் நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம்.
சிறு
குறு ஊர்ப்புறச் சாலைகளிலும், சிறிய பெரிய நகர்ப்பற வீதிகளிலும், சாலைகளிலும் பயணித்துக்
கொண்டிருக்கும் என்னையும் உள்ளடக்கிய இளைஞர்களே!
உங்கள் வாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இல்லை. உங்களைச் சார்ந்த குடும்பத்தினரும்,
நண்பர்களும், பிற நேசம் மிகு உறவுகளும், தொழில் முறை சார்ந்த சக ஊழியர்களும், வாடிக்கையாளர்களும்,
நீங்கள் கடந்து செல்லும் சாலையில் நடந்தோ, மிதிவண்டியிலோ, இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களிலோ
பயணிக்கும் மக்களும் தெரிந்தோ தெரியாமலோ அவரவர் வாழ்க்கையை நீங்கள் பயணம் செய்யும்
வாகனத்தினைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உங்கள் கைகளில் ஒப்படைத்திருக்கிறார்கள் என்று உணர்ந்து உங்கள்
வாகனத்தை ஓட்டுங்கள்.
நடந்து
போனால் போதாது, இன்று பறந்தால் மட்டுமே மற்றவர்களுடன் போட்டியிட்டு வாழ்க்கையை நடத்த
முடியும் என்பது சம்பாத்தியத்திற்கு வேண்டுமானால் சரியான வாக்கியமாக இருக்கலாம். ஆனால் சாலையில் நாம் பயணிக்கையில் நம்முடைய
இன்றிமையாத தேவை, வேகம் அல்ல, மிதமான வேகத்தில் கவனத்துடன் ஓட்டும் விவேகமே என்பதைக்
கருத்தில் கொண்டு பயணத்தைத் தொடருங்கள். உங்கள் பாதுகாப்பான பயணம் மற்றுமொரு அற்புதமான
வாழ்க்கையின் தருணத்தை, இன்னொரு நாள் வாழும் வாய்ப்பை மற்றவருக்கும் வழங்குகிறதென்பதை
மறந்து விடாதீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.
சேர்ந்து
பயணிப்போம்.
பயணங்கள்
முடிவதில்லை!!!
No comments:
Post a Comment