Wednesday, December 31, 2014

2015 பிறக்க இன்னும் சில நிமிடங்கள் மிச்சம் இருக்கையில்......மிகச் சிறந்த ஆசானாய் இருந்த, இருந்து கொண்டிருக்க 2014 க்கு மிகப் பெரிய நன்றி. வாழ்வின் அதிக பட்ச வேகத்தில் சோதனை ஓட்டத்தை நிகழ்த்திக் காட்டி இயற்கையின் இயக்கத்தை, காலத்தின் மிகப் பெரிய பலத்தை நிரூபித்தமைக்கு 2014க்கு நன்றி. எல்லாம் இந்த இரவின் இருளுடன் கரைந்து போய் நாளை புத்தம் புதிய ஒளியுடன் நம்பிக்கையுடன் பிறக்கும். 2015 மிகச் சிறப்பாகவே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளுடன்....2014 ன் இறுதி நிமிடத்தில் நான் காஞ்சனா. GOOD BYE 2014
திருப்பாவை பாசுரம் 16
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
     கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
     ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
     தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
     நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 16

அண்ணலே அருளாளா!
ஆலிலைக் கண்ணா!
இன் குழலோனே!
ஈகைக் கார்முகிலா!
உறிவெண்ணெய் உண்டானே!
ஊழியின் அமுதே!
எமை ஆள்பவனே!
ஏழுமலை வாசனே!
ஐயம் தீர்ப்பவனே!
ஒப்பிலியப்பா!
ஓங்கி உலகளந்தானே!
ஒளக்ஷதம் ஆனவனே!
கண் திறவாய்!
எனப் பாடி பதம் பணிந்தே
புகழ்ந்தேலோர் எம் பாவாய்!

-காஞ்சனா

Tuesday, December 30, 2014

திருப்பாவை பாசுரம் 15
எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
     சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
     வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
     எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
     வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 15

ஓடிக் களைத்து ஓய்ந்திட்டேன் கண்ணா உன்னை
தேடித் துவண்டு தேய்ந்தே விட்டேன் உலகெலாம்!
பாடிப் பறந்த குயில் பாடல் மறந்தது போல் என்னை
வாடி வதங்கவிட்டு நிலை மறந்து போனாயோ?
இமை கூடிப் பிரிகையிலே விழிகளில் ஒளி பிறக்கும்;
இயக்கம் இணைகையிலே ஒளியினில் காட்சியும்.
இதழ் கூடிப் பிரிகையிலே குழலினில் ஒலி பிறக்கும்;
காற்று இணைகையிலே துளையினில் இசையும்.
இயற்கையும் இயக்கமும் காற்றும் கடலும் சகலமும்
நீயெனில் உன்னால் உருவாகி உன்னால் உய்யும் சகியெனைத்
தீயினில் தவிக்க விட்டுச் சகித்தல் சரியோ? முறையோ? 
சாரங்கா! உனைப்போல் இறைவர்க்கு இது அழகோ?
தொடரும் கேள்விகள்; தொலைவில் உன் பதில்கள்;
விடை மொழி திருவரங்கா! தாமதமின்றி என்னை 
விடுவிக்கும் நேரம் இது! விடை மொழி திருவரங்கா!

-காஞ்சனா

Monday, December 29, 2014

திருப்பாவை பாசுரம் 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
     செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
     தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
     நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
     பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்


எம் பாவை 14

புல்லினத்தின் புதல்வியாய் முள் தாங்கிய உடலியாய் உனக்கான
மெல்லிசை மீட்ட யுகங்கள் கடந்த மூங்கில் நானென்பதை அறிவாயோ
கண்ணா! உன் சுவாசத்தை வாசிக்கும் குழல்கள் யாவிலும்
எத்துளையிலோ என் உயிர் தாங்கியிருக்கிறாய் என்றறிவேன் எனினும் எனக்கான பாடல் இசைக்க மட்டும் ஏன் மறந்தாயோ நானறியேன்!
உறங்கியது போதும் கிருக்ஷ்ணா! என் உள்ளம் அழைப்பது 
உன்னைத்தான் என்பதை நீ உணரத்தான் வேண்டும்! 
பாசாங்கை விட்டொழித்து பாவை உயிர் காத்திடவா!
பாரங்கள் நீக்கி பதிலை நீ சொல்லிட வா!
-காஞ்சனா

Sunday, December 28, 2014

திருப்பாவை பாசுரம் 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
     கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
     வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
     குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
     கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவாய் 13

உறக்கமும் கனவுகளுமாய் என்ன விளையாட்டு இது?
விழித்தெழும் நேரமிது! விக்கிரமா! கண் திறவாய்!
மாதர்கள் மாக்கோலமிட்டு மஞ்சள் மலர் மகுடமிட்டு
வாசல் அலங்கரித்து மகிழ்வுடனே அழைக்கும் குரல்
வாசனை எட்டவில்லையோ! காலம் மூன்றறிந்தவனே!
காக்கும் காலை இது! கார்வண்ணா! கண் திறவாய்!

அச்சமும் அய்யமும் எனை அண்டவிடலாமோ?
அச்சுதா! அபயம்! அபயம்! ஆருயிர் காத்திட வா!
ஆயிரம் அலைக்கரங்கள் அன்பாய் அழைக்கும் குரல்
ஆரவாரமாய் கேட்கவில்லையோ? அகிலனை அடைந்திலையோ!
மறை நான்கறிந்தவனே! மாதவா! மணிவண்ணா!
 மாந்தர் குலம் தழைக்க மணிவிழிகள் தாம் திறவாய்! 

இன்றாவது இன்றாவதென நன்று நாள் வளர்த்திட்டேன்;
கன்றினைத் தாய் விடலழகோ? கண்ணா! உயிர் வார்த்திட வா!
தொன்று பிறவியெல்லாம் உனையன்றோ சரணடைந்தேன்;
இன்னும் மனமின்றி ஏன் மெளனம் காக்கின்றாய்!
கண்ணை இமை காப்பது போல், கன்றைப் பசு காப்பது போல்
என்னைக் காக்கும் நேரமிது!கண்ணா! கண் திறவாய்!

காலை விடிந்தது காண்! கதிர் கரங்கள் நீண்டது காண்!
சோலை பூத்தது காண்! சொற்பாக்கள் இசைத்தது காண்!
தோளை அணைத்து நின்று தொண்டுகள் செய்திடவே
மாலை மலர்ந்தது காண்! மணம் வீசி நின்றது காண்!
பாலை துளிர்த்திடவே பார்வை ஒன்று ஈந்திடுவாய்!
நாளை எனத் தள்ளாமல் இன்றே நீ கண் திறவாய்!

-காஞ்சனா

Saturday, December 27, 2014

திருப்பாவை பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி
     நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
     பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
     மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
     அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்



எம் பாவை 12

நீயே என் மீட்பன் என்பதை நானறிவேன்;
நீயே என் தேவன் என்பதை நானறிவேன்;
நீயே என் தோழன் என்பதையும் நானறிவேன்;
நீ சொன்னாய் என்றே நிற்காமல் இதோ
நீந்திக் கொண்டிருக்கிறேன்- தீயாற்றிலிருந்து மீட்க
நீ எப்போது உன் கரம் நீட்டுவாய் என
நீண்ட இரவினில் காத்துக் கிடக்கிறேன்!
வைகுந்தவாசா! திருமகள் நேசா!
மையிட்ட விழிகள் திறந்தே எனக்கு
மழை அருள்வாய்! பிழைத்துக் கொள்கிறேன்!

-காஞ்சனா

Friday, December 26, 2014

திருப்பாவை பாசுரம் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
     செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
     புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
     முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
     எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!



எம் பாவை 11

சகா என்றழைத்தால் சடுதியில் வருவேன் என்றாய்;
மகாதேவா! நாள் பத்து கடந்த பின்னும் இன்னும்
மெளனம் கலைத்தாயில்லை-சகியெனச் சொன்னது
சத்தியம்தானா எனச் சொல் என் சகா!

நீ அணைத்த தோள்களில் நிம்மதி தேடுகின்றேன்;
தீயெனச் சுடும் வாழ்க்கையை மாற்ற இன்றேனும்
நீ வர வேண்டும் என்றே வேண்டுகின்றேன்;
இருள் போதும் கண்ணா! இந்த இரவை 
விடிய வைக்க இப்போதே விரைந்து வா!  
எனக் கூவும் குரல் கேட்கலையோ!
அவன் காதிற் சொல்லேலோர் எம்பாவாய்!

-காஞ்சனா

Thursday, December 25, 2014

திருப்பாவை பாசுரம் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
     மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
     போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
     தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
     தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!



எம் பாவை 10

நீ கிருக்ஷ்ணனோ இல்லை கிறிஸ்துவோ!
ஈசனோ அல்லது இயேசுவோ;
மரியம், மாரி அல்லது மேரி
நாமம் எதுவாகினும் நலம் தரும்
நல்மேய்ப்பன் ஒருவனே என நம்புகிறேன்
வழி தவறிய ஆடாய் விழி பிதுங்கி
நிற்கின்றேனே! நிமலனே! தேவ மைந்தா!
நிழல் தனை நல்கிடுவாய்! தேவகி நந்தா!
சாயியும் நீ; மாயியும் நீ;
சகலமும் நீ என்றிருக்க
மாயங்கள் இன்னும் எதற்கு?
காயங்கள் துடைத்தெறிந்து 
தூயனே எனைக் காத்தருள்வாய்!
கிருபை செய் பரம்பொருளே!

நீ பேசும் பேச்சன்றோ என்
தீவினைகள் நீக்கிப் போடும்!
நீ தரும் நற்செய்தியன்றோ என்
வீடு காத்து நிம்மதி தரும்!
கோவிந்தா! கோபாலா!
கோமகனே! நல் மாற்றம் தா!
எனக் கோடி முறை அழைக்கின்றேன்
செவி மடுத்தேலோர் எம்பாவாய்!

-காஞ்சனா

Wednesday, December 24, 2014

திருப்பாவை பாசுரம் 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
     தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
     மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
     ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
     நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 9

வானே நிறம் கொண்ட வண்டார்குழலோனே உனைத்
தானே சரண்புகுந்தேன் -தாயெனக் காத்திடுவாய்!
தேனே, திரவியமே, தீங்குழலின் நாயகனே
வீணே தாமதம் ஏன்? சேயனக்கருள் புரிவாய்!
அபயம் அளித்திடுவாய்! ஆனந்தம் தந்திடுவாய்!
அல்லல்கள் நீக்கி நல்லன நல்கிடுவாய்!

நெஞ்சம் உறங்குதில்லை; நீள் கனவு ஏதுமில்லை;
வஞ்சம் நீக்கியே வந்து வசந்தம் தந்திடுவாய்.
நஞ்சாய் நகர்கிறது நாழிகை ஒவ்வொன்றும்-அதை
பஞ்சாய் மாற்றி எனக்கெனப் பரிவுறப் பேசிடுவாய்!
நாளை நாளையென நம்பி உனைச்சேர்ந்தேன்
வேலையெடுத்து என் வேதனைகள் அகற்றிடுவாய்!

கடுஞ்சோதனைக் காலமெல்லாம் என்னை உன்
கரம் சுமந்து காத்திட்டாய்-இந்த
வேதனைகள் போதும் ஐயா! இனி
வெண்பனியாய் குளிர்ந்திடுவாய்-எனக்கொரு
நன்மை செய்திடுவாய்; நற்செய்தி சொல்லிடுவாய்; 
நன்றி சொல்ல வைத்திடுவாய் என மனம் தனை 
எடுத்துச் சொல்லிப் பாடீரோ எம்பாவாய்!

-காஞ்சனா




Tuesday, December 23, 2014

திருப்பாவை பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
     மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
     கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
     ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.



எம் பாவை 8

எவ்வேலை இருந்த போதும் இது
என்னைக் காக்கும் நேரமன்றோ!
இவ்வேளை விரைந்து வந்து உன்
கண்ணென எனைக் காப்பாய் எனச்
சூடிக் கொடுத்த மகள்
பாடி அழைத்திட்டேன் பரம்பொருளை!
சூடிக் கொடுத்த மலர் வாடும்முன்
ஓடி வந்து கோதையைக் காத்தருள்வாய்
என்றவனைப் பாடியழைக்கும் விதம்
அறிந்தேலோர் எம்பாவாய்!

- காஞ்சனா

Monday, December 22, 2014

திருப்பாவை பாசுரம் 7
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
     பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
     வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
     நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
     தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.


எம் பாவை 7

மாயவா! மதுசூதனா! மாதவா!மணிவண்ணா!
நேயனே! சாரங்கா! இரட்சிக்க வந்திடுவாய்!
சேய்காக்கும் நேரமிது என்றறிந்தாய் எனினும்
வாய் மூடி மெளனம் ஏன்? வாசனே!
வந்தருள்வாய் எனக்  கூவியழைத்தும் இன்னும்
அவன் வரும் ஓசை கேட்கவில்லை! 
கண்ணில் உறக்கமின்றி கண்ணன் வரக்
காத்திருக்கிறேன்- அவசரமாய் வரச்சொல்லி
அவனிடம் அழுந்தச் சொல்வீரோ எம்பாவாய்!
-காஞ்சனா



Sunday, December 21, 2014

திருப்பாவை பாசுரம் 6
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
     வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
     கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
     உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
     உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 6

என் உறக்கத்தையும் விழிப்பையும்
எண்ணம் யாவையும் உன்னிடம்
ஒப்புவித்து மலரடி சரணடைந்தேன்!
ஒப்பிலானே! கண் திறவாய்!

வஞ்சமில்லா பேரன்பை என்
நெஞ்சமெல்லாம் நிறைத்திட்டேன்!
வஞ்சனை செய்யாமல் நீ
வந்தெனை காத்திடுவாய்!

கடலினைக் கடைந்தெடுத்தது நல்
அமிழ்தினை எடுத்தவனே! என்
கவலைகள் களைந்தெடுத்து
அருள் நல்வாழ்வு தந்திடுவாய்!

கடும் பனி காலமிதில்
உன்னடியாரை கொடுங்கோடை
வாட்டல் நன்றோ! விரும்பிய
மாற்றம் தந்தெனை
ஏற்றம் செய்திடுவாய்!

படரும் இருள் விலக்கி
சுடரொளி தந்திடுவாய்-கொடும்
இடர்களை உடன் நீக்கி 
தடைகளைத் தகர்த்தெறிவாய்!

எதிர்த்து நிற்போரிடத்தில் எல்லாம்
எனக்காக பேசிடுவாய்!
வெருப்பிருக்கும் மனத்திலெல்லாம்
விருப்பம் மிகச் செய்வாய்!
பகைகளை அழித்தென் மீது
பரிவினை அளித்திடுவாய்!

நின்னை மறந்தறியேன்;
நின்னைப் பிரிந்தறியேன்;
நிம்மதி வேண்டி நின்
நிழலண்டி நிற்கின்றேன்;
நிமலனே! வரம் தருவாய்!
நிலம் துளிர்க்க அருள் புரிவாய்!
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்
நல்வார்த்தை நாளை சொல்லிடுவாய்!

-காஞ்சனா




Saturday, December 20, 2014

திருப்பாவை பாசுரம் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
     தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
     தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
     வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
     தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.




எம் பாவை 5

பசும்பால் நெய்யாகி
பாங்குடனே குடமேகி
பரந்தாமன் விளக்கேற்றி
பரமபதம் அடைந்ததை 
கண்டீரோ எம்பாவாய்!

இன்று மலர்ந்தது
இவன் மலரடி சேரவென
வாசனின் பிருந்தாவனத்தை
வாச மலர்கள் நிறைத்ததை
கண்டீரோ எம்பாவாய்!

இருந்ததும் இருப்பதும்
இன்னும் இருக்கப் போவதும்;
உண்டதும் உண்ணப்பட்டதும்
உயிரென உண்டான யாவும்
உலகளந்த உத்தமனின்
உன்னதம் சரணம்! சரணம்!
என்று அடைக்கலமானதை
கண்டீரோ எம்பாவாய்!

உயிர்கள் அனைத்தையும்
உய்விக்கும் உத்தமனே
உன்னைச் சரணடைந்தேன்!
உன்னைச் சரணடைந்தேன்!
 உண்மைக்கும் பொய்க்கும்
உயர்வான இறைமைக்கும்
நீயே பொருளெனில்,
நீக்கமற என்னுள் 
நினைவாய் நிழலாய்
நித்திய ஒளியாய்
நம்பிக்கையாய் நிறைந்து
என்னை நித்தம் காப்பாய்!
என் சொல்லாவாய்;
செயலாவாய்;
யாதுமாவாய் என
பலவாறாய்
பாடி அழைத்தேன்!
திருப்பள்ளியெழுச்சி அவன்
திருச்செவிகள் தட்டி
எழுப்பியதை
கண்டீரோ எம்பாவாய்!

-காஞ்சனா




Friday, December 19, 2014

திருப்பாவை பாசுரம் 4
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
     ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
     பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
     தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
     மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.


எம் பாவை 4

கோலக் கருமணியை ;
கோகுலத்து கோமகனை;
ஆயர்பாடி அழகனை;
ஆழி சூழ் பரந்தாமனை
கொஞ்சித் துயிலெழுப்ப
கோபியரே வாரீரோ!

மதுரா நகர் குழலோசையில்
மயங்கிய குயில்கள் காண;
பத்மநாபன் சங்கொலியில்
பதுங்கிய பகைவர் காண;
பறவைகளும் விலங்கினமும்
பார்போற்றும் பாவலரும்
காத்துக் கிடக்கின்றனர்!

சொல்லிற் கினியனை
சுந்தர ரூபனை
வல்லமை பொருந்திய
வரத ராஜனை
மெல்லத் துயிலெழுப்ப
செல்வச் சிறுமியரே
வருவீர்காள்!

திருமகள் உறை திருமார்பன்
திருவேங்கடவன் கண் திறந்திடவே
கதிரவனும் காத்திருக்கின்றான்;
காலை மலர்ந்திடவே-எம்
கவலைகள் மறைந்திடவே;
அல்லல் நீங்கி
நல்லவை பிறக்கவே;
எல்லா நலன்களும்
எல்லையற்றுப் பெருகவே
எழில் கேசவனை எழுப்ப
வந்தேலோர்  எம்பாவாய்!

-காஞ்சனா

Thursday, December 18, 2014

திருப்பாவை பாசுரம் 3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
     நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
     ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
     தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
     நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 3

அரங்கனை அழைக்கச் செல்வோம்;
ஆநிறையே பால் தாரீர்!
பரமனை விழிக்கச் செய்வோம்;
பைங்கிளிகளே பறந்து வாரீர்!
பரந்தாமன் தோள் சேர்வோம்;
பனிப்பூக்களே விரைந்து வாரீர்!
காலம் கனிந்து விட்டதென
ஞாலம் அளந்தவன் சொல்லியதை
ஞானியர்தாம் அறிவாரோ!
நானும் அறிந்திட்டேன்!
வாய் நிறைய மண்ணோடு
வான் பூமி காட்டியவன்
நம்மைக் காக்க வந்த
நந்தகோபன் குமரன்
நாம் பிழைக்க இன்று
நன்னாள் தந்தானே!
வாசலிலே கோலமிட்டு
வாசனைப்பூ நடுவில் வைத்து
வாசுதேவனை வணங்கிடவே
வாரீரோ எம் பாவாய்!
பாங்குடனே அவன்
புகழ் பாடீரோ!
எம் பாவாய்!

-காஞ்சனா

Wednesday, December 17, 2014

திருப்பாவை பாசுரம் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
     செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
     செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
     உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 2

மாநிலத்து மாந்தரே!
மாதவன் மனம் கனிய
யாம் செய்யும் தவம்
யாதெனக் கேளீர்!

ஊர் உறங்கும் நள்ளிரவில்
உறங்காமல் விழித்திருந்து,
உலகளந்தான் உளம் நனைய
உலராத கனவுகள் சுமந்து,
உற்ற நண்பனாய் என்
உயிர் காப்பாய் என்றவன்பால்
உருக்கிய உலோகமென நாளும்
உளமாற பணிந்திட்டோம்!
எம் பாவாய்!

மலரவன் சூட்டிக் கொள்ள
மயிலிறகுடன் மனம்தனையும்
மணம் வீசும் மலர்களையும்
மறக்காமல் அவன் வீட்டின்
மதிலோடு படர விட்டோம்;
எம் பாவாய்!

மாலே! மணிவண்ணா!
மலர்பாதம் பணிந்திட்டோம்! 
உணவு நீர் மறந்து
உன்னையே அனுதினமும்
நினைந்திட்டோம்! 
மார்கழியின் நாளனைத்தும்
மனமொன்றி தவமிருப்போம்;
யாதவர் குலக்கொழுந்து
மாதவன் மறை கேட்போம்;
மறைக்கும் முகில் விலக்கி
மாற்றங்கள் தந்தருள்வாய்!
மறவாது வந்தெம்மை
மாண்புறவே காத்தருள்வாய்!
என்றுருகி எந்நாளும்
நோன்பிருப்போம்!
எம் பாவாய்!

-காஞ்சனா





Tuesday, December 16, 2014

திருப்பாவை பாசுரம் 1
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

எம் பாவை 1

மலர்கள் இதழ் மலர்ந்தன;
மயில்கள் தோகை விரித்தன;
மார்கழி புலர்ந்த தென்று
மன்னனுக்குக் கூற வாரீர்!
எம் பாவாய்!

கார்முகில் வண்ணனவன்
கடன் மறந்து உறங்குகின்றான்;
காஞ்சனை மருகும் நிலை
கருத்தினில் கொண்டிலையோ;
கருணை விளக்கேற்றி அவள்
காரிருள் நீக்க அவன்
கண் விழிக்க வேண்டுமென
கானங்கள் பாடியே நம்
கண்ணனுக்குக் கூற வாரீர்!
எம் பாவாய்!

பனி விலகும் காலமிது;
பசும்பால் சுரக்கும் நேரமிது;
பட்ட மரங்கள் துளிர்க்க
பட்டுப் புல் பாய் விரிக்க
பளிச்சென எம் பயம் விலகி
பயிரெனவே தழைக்க
உறக்கம் கலைத்து
உற்சாகமாய் எழுந்திரு என
மணிவண்ணனுக்குக் கூறவாரீர்!
எம் பாவாய்!


-காஞ்சனா