Thursday, December 25, 2014

திருப்பாவை பாசுரம் 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
     மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
     போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
     தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
     தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!



எம் பாவை 10

நீ கிருக்ஷ்ணனோ இல்லை கிறிஸ்துவோ!
ஈசனோ அல்லது இயேசுவோ;
மரியம், மாரி அல்லது மேரி
நாமம் எதுவாகினும் நலம் தரும்
நல்மேய்ப்பன் ஒருவனே என நம்புகிறேன்
வழி தவறிய ஆடாய் விழி பிதுங்கி
நிற்கின்றேனே! நிமலனே! தேவ மைந்தா!
நிழல் தனை நல்கிடுவாய்! தேவகி நந்தா!
சாயியும் நீ; மாயியும் நீ;
சகலமும் நீ என்றிருக்க
மாயங்கள் இன்னும் எதற்கு?
காயங்கள் துடைத்தெறிந்து 
தூயனே எனைக் காத்தருள்வாய்!
கிருபை செய் பரம்பொருளே!

நீ பேசும் பேச்சன்றோ என்
தீவினைகள் நீக்கிப் போடும்!
நீ தரும் நற்செய்தியன்றோ என்
வீடு காத்து நிம்மதி தரும்!
கோவிந்தா! கோபாலா!
கோமகனே! நல் மாற்றம் தா!
எனக் கோடி முறை அழைக்கின்றேன்
செவி மடுத்தேலோர் எம்பாவாய்!

-காஞ்சனா

No comments:

Post a Comment