Wednesday, December 24, 2014

திருப்பாவை பாசுரம் 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
     தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
     மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
     ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
     நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

எம் பாவை 9

வானே நிறம் கொண்ட வண்டார்குழலோனே உனைத்
தானே சரண்புகுந்தேன் -தாயெனக் காத்திடுவாய்!
தேனே, திரவியமே, தீங்குழலின் நாயகனே
வீணே தாமதம் ஏன்? சேயனக்கருள் புரிவாய்!
அபயம் அளித்திடுவாய்! ஆனந்தம் தந்திடுவாய்!
அல்லல்கள் நீக்கி நல்லன நல்கிடுவாய்!

நெஞ்சம் உறங்குதில்லை; நீள் கனவு ஏதுமில்லை;
வஞ்சம் நீக்கியே வந்து வசந்தம் தந்திடுவாய்.
நஞ்சாய் நகர்கிறது நாழிகை ஒவ்வொன்றும்-அதை
பஞ்சாய் மாற்றி எனக்கெனப் பரிவுறப் பேசிடுவாய்!
நாளை நாளையென நம்பி உனைச்சேர்ந்தேன்
வேலையெடுத்து என் வேதனைகள் அகற்றிடுவாய்!

கடுஞ்சோதனைக் காலமெல்லாம் என்னை உன்
கரம் சுமந்து காத்திட்டாய்-இந்த
வேதனைகள் போதும் ஐயா! இனி
வெண்பனியாய் குளிர்ந்திடுவாய்-எனக்கொரு
நன்மை செய்திடுவாய்; நற்செய்தி சொல்லிடுவாய்; 
நன்றி சொல்ல வைத்திடுவாய் என மனம் தனை 
எடுத்துச் சொல்லிப் பாடீரோ எம்பாவாய்!

-காஞ்சனா




No comments:

Post a Comment