Saturday, December 20, 2014

திருப்பாவை பாசுரம் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
     தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
     தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
     வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
     தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.




எம் பாவை 5

பசும்பால் நெய்யாகி
பாங்குடனே குடமேகி
பரந்தாமன் விளக்கேற்றி
பரமபதம் அடைந்ததை 
கண்டீரோ எம்பாவாய்!

இன்று மலர்ந்தது
இவன் மலரடி சேரவென
வாசனின் பிருந்தாவனத்தை
வாச மலர்கள் நிறைத்ததை
கண்டீரோ எம்பாவாய்!

இருந்ததும் இருப்பதும்
இன்னும் இருக்கப் போவதும்;
உண்டதும் உண்ணப்பட்டதும்
உயிரென உண்டான யாவும்
உலகளந்த உத்தமனின்
உன்னதம் சரணம்! சரணம்!
என்று அடைக்கலமானதை
கண்டீரோ எம்பாவாய்!

உயிர்கள் அனைத்தையும்
உய்விக்கும் உத்தமனே
உன்னைச் சரணடைந்தேன்!
உன்னைச் சரணடைந்தேன்!
 உண்மைக்கும் பொய்க்கும்
உயர்வான இறைமைக்கும்
நீயே பொருளெனில்,
நீக்கமற என்னுள் 
நினைவாய் நிழலாய்
நித்திய ஒளியாய்
நம்பிக்கையாய் நிறைந்து
என்னை நித்தம் காப்பாய்!
என் சொல்லாவாய்;
செயலாவாய்;
யாதுமாவாய் என
பலவாறாய்
பாடி அழைத்தேன்!
திருப்பள்ளியெழுச்சி அவன்
திருச்செவிகள் தட்டி
எழுப்பியதை
கண்டீரோ எம்பாவாய்!

-காஞ்சனா




No comments:

Post a Comment