Tuesday, December 25, 2012


நாளை உலகம் இல்லையென்றானால்
உயிரே என்ன செய்வாய்?
கேள்வி: கவிப்பேரரசு
பதில் : நான்

அம்மா அப்பாவுடனும்
அன்பு சகோதரர்களிடமும்
அலைபேசியில் சில நிமிடம்!

ஆயிரம் மலர் தேடி
அதில் உறுதேன் நாடி
ஆசையாய் பருக சில நிமிடம்!
அருந்தி மகிழ சில நிமிடம்!

இடைவெளியில்லாத நல்லிசை
இடையூறற்ற மெல்லிசை
இடையறாதோடும் முழு நேரம்!

ஈகைக்கென சில நிமிடம்!
ஈடேறாத ஆசைகளுக்காக சில நிமிடம்!
ஈன்ற பெற்றோரையும்
தாங்கிய நன்னிலத்தையும் நன்றியுடன்
நினைத்து சில நிமிடம்!

உரையாடலாகவோ உறைந்த மெளனமாகவோ
உற்ற தோழர்க்கென சில நிமிடம்!
உருப்படாத அச்சம் துடைக்க
உருப்படியாக சில நிமிடம்!

ஊர் சுற்றிப் பார்க்க
உற்சாகமாய் சில நிமிடம்!
ஊட்டி வளர்த்த ஆசிரியர்களையும்
உள்ளத்தை வளப்படுத்திய நூல்களையும்
உவகையுடன் நினைவுகூற சில நிமிடம்!

எல்லாம் கடந்த போதும்
எதுவும் நிலையில்லை என்ற
எளிய உண்மைக்கென சில நிமிடம்!

ஏணியாக இருந்தவர்களுக்காக சில நிமிடம்!
ஏமாந்த நொடிகளுக்காக சில நிமிடம்!
ஏகாந்த தருணங்களில்
எழுதிய கவிதைகளுக்காக சில நிமிடம்!
எனக்கே எனக்கான ஒரு
கவிதைக்காக சில நிமிடம்!

ஐம்புலனடக்கி அனைவருக்காகவும் ப்ரார்த்திக்க
ஆண்டவனிடம் சில நிமிடம்!
ஐந்திணைகளில் பார்த்ததை பிடித்ததை
அவசரமாக அசைபோட சில நிமிடம்!

ஒரு வாறாக நாள் முடியும்
ஒன்றுமற்ற வெளியில்
ஒன்றுபடும் நற்றருணத்தில்
மனதில் ஏதுமற்றதொரு மந்திர நிமிடத்தில்
நின்ற இடத்தில் மண்டியிட்டு
நிலத்தில் வீழ்ந்து முத்தமிட்டு
உலகத்தார் எல்லோரிடமும்
மன்னிப்பு கேட்பேன் சில நிமிடம்.

செய்த பிழைகளுக்காகவும்
செய்யாத நல்லவைகளுக்காகவும்
மண்ணில் வந்த நாள் தொட்டு
மறந்தும் நான் செய்த
குற்றங்களுக்காகவும், தவறுகளுக்காகவும்,
சொற்களாலும், செயல்களாலும்
சுட்டுக் கடந்த தருணங்களுக்காகவும்
நேரம் போதா வேளையிலும்
நெடுஞ்சான்கிடையாக வீழ்ந்து
புவி புகும் முன்
நான் கேட்பேன்
என்னை மன்னிப்பாய்
எனச் சில நிமிடம்!

ஓய்கின்றது உலகம் என
ஓடுகின்ற ஊர் நடுவே
அலமாரியை அவசரமாகக் குடைந்து
தேடியெடுத்த தேசியக் கொடியுடன்
தேசிய கீதம் தனை
தெளிவாகப் பாடியபின்
தேகம் சாய்ப்பேன்
தாய்மண்ணில் சில நிமிடம்!

விட்ட தருணங்களுக்காய்
வருத்தம் இல்லை!
பட்ட துயரங்களுக்காய்
புலம்பல் இல்லை!
செய்த நற்செயல்களுக்காக
சேகரித்த நன்றிகளை
பிறப்பின் பலனாய்
சிறப்பாய் நினைத்துக் கொண்டு
ஓம் என்ற ஓசை
உயிரெங்கும் ஒலித்திருக்க
நல்லதொரு இசையுடன்
நல்ல தருணங்களுக்கான நன்றியுடன்
நாவில் நற்றமிழுடன்
ஓய்ந்தமர்வேன் ஒரு புன்னகையுடன்
கடை நிமிடம்!

வாழ்க்கையில் நான் உருப்படியாக
வாழ்ந்த நாள் இது ஒன்றே
என்ற நிம்மதியுடன்
கனவுகளுடன் உறங்கிப் போவேன்.

நாளை உலகம் இல்லையென்றானால்
நான் இழக்க ஒன்றுமில்லை!

Sunday, December 16, 2012



 கடல் படப் பாடல்கள் கேட்டேன். மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம் நல்ல கவிதை வரிகள், நல்ல இசைக்கோர்வையோடு  அருமையான ரஹ்மான் மெலடி டூயட். சிப்பியின் ஒரே முமுமையான முத்து. சித்திரை நிலா குறை சொல்ல முடியாத தந்தையின் தாலாட்டு. நீயில்லையேல் நான் என் செய்வேன் எனத் தொடங்கும் அன்பின் வாசலே எனத் தொடங்கும் பாடல் தொடக்கத்தின் எதிர்பார்ப்பைத் தொடக்கத்தோடே நிறுத்திவிட்டு, கிறிஸ்மஸ் கேரல் ஆகிவிடுகிறது, மகுடி மகுடி.. பாடலில் நீங்கள் கூடவா ரஹ்மான் சார்! என லேசாக சலிக்கத் தொடங்கிய மனசு அடுத்த பாடலில் கிட்டத்தட்ட தலையிலடித்துக் கொண்டது. மனசைத் தொறந்தாயே! எனத் தொடங்கும் அடியே பாடல் எந்த மொழிக்கு அல்லது எந்த மாநிலத்திற்கு அல்லது எந்த நாட்டிற்கு  ரஹ்மான் சார்? கேள்வி எழும்புகிறது. என்ன செய்ய? VTV’S AAROMALE  வை ஒட்டிய ADIYE SONG AMAZING என்று FB, TWITTER தொடங்கி YOUTUBEல் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் வரை, தயவு செய்து நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கும்கி பாடல்கள் கேட்டீர்களா? எல்லாமே ஆஹா ரகம்.  அய்யய்யய்யோ என ஒரு பாடல். AYYAYYYO AMAZING!!! அதுதான் AMAZING. 
சரி! கடல் என்று பெயரிடப்பட்டு, கடல் சார்ந்து எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படத்தில், ஒரு கடல் பாட்டாவது இருக்க வேண்டுமே எனத் தேடினால், இருக்கிறது ரஹ்மான் அவர்களே பாடிய ஏலே கீச்சான் என்ற பாடல். என்ன அது கொங்கனி மொழியில் கோவாவிற்காக இருக்க வேண்டியது. தவறிப் போயோ மறந்து போயோ தமிழ் படத்தில் வைத்து விட்டீர்களா ரஹ்மான் சார்? எல்லாம் கிடக்கட்டும். ஊரே கொண்டாடுவதாகக் கூறப்படும் நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன் பாடலை நானும் கேட்டேன். நொந்து விட்டேன். இப்படிச் சொல்வதற்காக  மன்னித்து விடுங்கள் திரு. ரெஹ்மான் அவர்களே! இதை நான் ஒரு முறை கேட்டு விட்டுச் சொல்லவில்லை. ஒரு வேளை, கேட்கக் கேட்க பிடிக்கக்கூடும் என ஒரு மாதமாகக் காத்திருந்து வெறுத்துப் போன விரக்தியில் தான் சொல்கிறேன்.

 ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பாடல் கூட இதே உணர்வுக்காக எழுதப்பட்ட, இசைக்கப்பட்ட பாடல்தான். பாடலுக்குத் திரையில் உயிர் கொடுத்தவர் ராதா அவர்கள். படத்தின் பெயரைச் சொல்லாமலே யாவருக்கும் புரித்திருக்கும். முதல் மரியாதைக்குரிய பாடல்தான் அது. அவர் மகள் நடிக்கும் முதல் படத்தின் பாடல் REALLY UPSETTING N DISAPPOINTING. காலையில் ஒரே முறைதான் இந்தப் பாடலைக் கேட்டேன். இன்று எழுதியே ஆக வேண்டும் என்று அமர்ந்து விட்டேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே, இரு பன்பலைகளில், சர சர சாரக் காத்து பாடல் காதுகளை வருடிப் போகிறது. இரண்டுக்கும் ஒரே பாடலாசிரியர்தான். இசையமைப்பாளர்கள் தான் வெவ்வேறு. “ வாகை சூட வா”  இசையமைப்பாளருக்கு உங்கள் அளவுக்கு உலக அனுபவம் இல்லையெனினும்,  உணர்வுகளைத் தொடும் சூட்சுமம் தெரிந்திருக்கிறது.  கும்கி இசையைக் கேட்டீர்களா? அவையெல்லாம் பாமரர்களின் இசை என நீங்கள் கருதுவதாகவதாகவே வைத்துக் கொண்டாலும், இது பாமரர்களைப் பற்றிய, பாமரர்களின் படம் தானே! இல்லையா? இசையால் உலகை கட்டிப்போட்டிருந்த தங்களுக்கு என்னவாயிற்று ரெஹ்மான் SIR?

இந்தப் பாடலை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை.  எந்த தொடர்ச்சியோ, நிறுத்தங்களோ இல்லாமல், ABRUPT ஆக, VERY VERY DISAPPOINTING MR. REHMAN. குரல் கொடுத்தவரின் ஹாய் என்ற SIGH வேறு கடுப்பேற்றுகிறது. நெய்தல் மட்டுமல்ல! குறிஞ்சி, முல்லை, மருதம் இவை திரிந்த பாலை என எத்திணையைச் சேர்ந்த பெண்ணின் பாடலும் இல்லை இது. 2002ல் இசை வெளியாகி, படமாக வெளிவராத, இளையராஜாவின் காதல் சாதியில் ஒரு பாடல். “ என்ன மறந்தாலும், உன்ன மறக்க மனம் கூடவில்லையே” என்று மஹதிக்கு வாழ்வு கொடுத்த ஒரு பாடல். நிச்சயம் கேட்டிருப்பீர்கள். இன்னும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். பிறகு நம் மண்ணிற்கேற்ற மாதிரி இசையமைக்க அமருங்கள். இதில் EGO எதுவும் தேவையில்லை.. ஹாலிவுட், பாலிவுட் தாண்டி, உங்களை உருவாக்கிய, உலகுக்கு உயர்த்திக் காட்டிய தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கொஞ்சம் திரும்பி வாருங்கள் PLEASE! PLEASE! PLEASE! IF TAJMAHAL, KARUTHAMMA AND KIZHAKKU SEEMAIYILE COULD BE YOURS, EVEN MORE N MORE CAN BE. WISH YOU ALL THE BEST. WE ARE WAITING FOR THE BETTER.

பாடல்கள் அனைத்தையும் கேட்டு முடித்ததும் ஒன்று மட்டுமே தோன்றுகிறது. மூங்கில் தோட்டம்; மூலிகை வாசம்…..இது போதுமே! எனக்கு இது போதுமே எனத் தொடர்கிறது பாடல். ரஹ்மான் சார், இது போதுமே எனக்கு என்று, இந்தப் படத்திற்கென மெனக்கெடத் தவறிவிட்டாரோ? SORRY RAHMAN SIR! WE EXPECTED MORE FROM YOU.

Tuesday, December 11, 2012



கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான்-நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தொர்
அகழி வெட்டினான்.
சொல்விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்.
சுதந்திர மென்றதன்மேற்
கொடியைத் தூக்கினான்.

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன் பெயர்.
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சியவன் பெயர்.
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர்.
அவன் பெயர் பாரதி.

மகாகவிக்கு மகோன்னதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Sunday, December 9, 2012



இது கண்ணாடியின் 200வது பதிவு. இது இசை சார்ந்ததாக, ஒரு நல்ல கலைஞனைப் பற்றியதாக, நல்ல இசையை வழங்கும் நல்ல மனிதருக்காக அமைந்தது என் மனதிற்கு நிறைவு தருகிறது.

இன்று குழலிசையால் இசை ரசிகர்களின் இதயங்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும், அருண்மொழி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திரு. நெப்போலியன் அவர்களின் பிறந்தநாள்.

முறைப்படி இசை ஏதும் கற்றறியாத, இளையராஜாவைக் கேட்டு வளர்ந்த எனக்கும் இசைக்கும் இணைப்புப் பாலமாக எப்பொழுதும் இருந்திருப்பதும், இருந்து கொண்டிருப்பதும் குழலும், வயலினும் என்றால், அந்த குழலோசை என நான் உணர்ந்திருப்பது யாவும் திரு. நெப்போலியன் அவர்களுடையதே ஆகும். குழலும் வயலினும் இல்லாமல் இசைஞானியின் இசை ஏது? அவரிடம் மட்டும் எப்படி  இப்படி குழைந்து, வெள்ளமாகி, அலை அலையாக ஆர்ப்பரிக்கின்றன என வியந்திருக்கிறேன். அந்த குழலுக்குச் சொந்தக்காரர் தாங்கள் என அறிந்தபோது, ஆச்சர்யப் பட்டேன். இருக்கும் இடமே தெரியாமல் மென்மையாக அமர்ந்திருக்கும் இந்த மனிதருக்குள்ளிருந்தா இந்த மயக்கும் இசை வடிவம் பெறுகிறது என வியந்து போனேன். ஆனால், நீ தானா! நீ தானா! எனத் தங்கள் குரலில் திரு. பார்த்திபன் பாடுகையில் உணர்ந்தேன், குழல் மட்டுமல்ல, குரலும் கூட இந்த மனிதருக்கு மாபெரும் வரம்தான்.

  விடியல் முதல் இரவு வரை என் மகிழ்ச்சி, மலர்ச்சி, அயற்சி, அழுத்தம், அனல் கணங்கள் யாவையும் என் மழலை கண தாலாட்டாக இருந்து தணிய வைத்து, தென்றலாக வருடிக் கொடுத்து, என் நாட்களை அழகாக மாற்றியமைக்கும் திறன் குழலுக்குள்ளதை உணர்ந்திருக்கிறேன். நன்றி சகோ. திரு. நெப்போலியன் அவர்களே! முதல் மரியாதையின் அந்த நிலாவத் தான் பாடலை அண்மையில் ஒருநாள் காலையில் கேட்க ஆரம்பித்து, நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்ந்து மயங்கிக் கிடந்தேன், அந்த PRELUDE. AWESOME SIR! அதைப்போலவே! சின்னக் கண்ணன் அழைக்கிறான், ஏரிக்கரைப் பூங்காற்றே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி என இசைஞானியின் MASTERPIECE யாவிலும் நான் தங்களையும் தொடர்பு படுத்திப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஒரு வேளை இந்தப் பாடல்களின் இசைக்கோர்வையில் தாங்கள் பங்கு பெறாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், இசைஞானியின் ராஜா ராஜாதான் மேடை நிகழ்ச்சியில், மணிக்கணக்கில், மேற்சொன்ன மற்றும் சொல்லாமல் விட்டுப் போன பாடல்களுடன், எங்களை ஏதோ ஓர் மந்திரத்தால் கட்டிப் போட்டது போல் மயக்கி அமர வைத்திருந்ததில் தங்கள் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் ஐயம் ஏதுமில்லை. THANK YOU SO MUCH SIR. GOD BE WITH YOU ALL THE TIME.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் SIR! தங்கள் குழல் போல், குரல் போல், அருண்மொழி போல், இந்த நாளும், இனி வரும் எல்லா நாட்களும் இறைவனின் நல்லருளுடன் இனிதாக அமைய, எங்கள் குடும்பத்தினர் அனைவரின் வாழ்த்துக்கள், தங்களுக்கான ப்ரத்யேகமான ப்ரார்த்தனைகளுடன். MANY MORE HAPPY RETURNS OF THE DAY SIR. WISH YOU THE HAPPIEST, BLESSED AND MOST MEMORABLE BIRTHDAY.

இந்த பதிவை முகநூலில் ஏற்றிவிட்டு அலுவலகம் சென்று விட்டேன். அலுவலக இடைவேளையில், மின்னஞ்சலில் இயக்குனர் சகோ. தாமிரா பின்வருமாறு எழுதியிருந்தார். “ நல்ல பதிவு. அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள். தவறான பாடல்களை பாடி விடக்கூடாது என பாடுவதை நிறுத்திய மனிதன். எனக்குப் பிடித்த கலைஞன். வாழ்க வளமுடன்”
சகோ. நளினி, நல்ல மனிதர்கள் காட்டுப்பூக்கள் மாதிரி, தேடித் தான் ரசிக்க வேண்டியிருக்கிறது என்று மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார்.

அலுவலகத்தில் வழக்கத்தை விடவும் சற்று அதிகம் அனலடித்தாலும், அத்தனையையும் மென் புன்னகையுடன் எதிர்கொண்டேன். புயல் கணங்கள் பழகிவிட்டன.

சகோ. தண்டபாணி அவர்களின் திருமண நாள் வாழ்த்துக்களைப் பூச்செண்டுடன் கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதில், மிகவும் அழகாக நெகிழ்வாக மாறி, வீட்டை நோக்கிய பயணத்தில் நல்ல மகிழ்வான நினைவுகளுடன் இந்த நாள் நிறைவு பெற்றது.  என் கண்ணாடியின் 200வது பதிவு ஒரு நல்ல நாளைப் பற்றியதாக அமைந்ததில் மனமெங்கும் பூத்திருக்கிறது ஒரு பூவனம்..

Tuesday, December 4, 2012

அட்டகத்தி

 ...... “They wear jeans, T-shirts and fancy sunglasses to lure girls from other communities,” he told reporters. A resolution adopted at the meeting cited statistics of broken marriages to claim that inter-caste marriages ended in failure because they were unions born out of caste design and not love.


இரவெல்லாம் இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது மழை. இப்பொழுதும். மழை, வெள்ளம், குளிர் என்றவுடன் உள்ளே எங்கிருந்தாவது ஒரு பாடல் எழும்பி விடுகிறது. இன்று ஓடியது , ஒரு அற்புதமான இசை அலையை பல்லவியை நோக்கி அழைத்துச் சென்ற பாடல் “ குருவாயூரப்பா! குருவாயூரப்பா! நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி”, புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்திலிருந்து. ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய படமாக இருந்தாலும், படம் முழுவதையும் கீதா என்ற அதிகம் கவனிக்கப்படாத ஒரு மாபெரும் நடிகை தன் ஆதிக்கத்தை அசகாயமான நடிப்பால் ஆக்கிரமித்திருந்த அற்புதமான படம். ஆனால் என் சிந்தனை அந்தப் படத்தைப் பற்றியோ, கீதா அவர்களைப் பற்றியோ அல்ல!

 பாடலை ரசித்துச் சுவைத்தவாறு, மழையை ருசித்தவாறு, THE HINDU நாளிதழை எடுத்தேன். எல்லைப் பிரச்சனையைப் பற்றிப் பேச நம் வெளியுறவுத் துறை தூதர் பெய்ஜிங் பயணம், முதல் செய்தி. ஆமாம், உள்நாட்டுக்குள் எல்லை தாண்டி துளி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அதைத் தீர்த்து வைக்க நமக்கு வக்கில்லை. அருணாச்சல பிரதேசத்தை தன் நாடு என்று சீனா வரைபடமே போட்டு முடித்தபின், எல்லை பற்றி பேசி, சீனப் பெருங்கோட்டைச் சுவரைப் பார்த்து, அலுப்புதான் வருகிறது. ஆனால் நான் படித்து அதிர்ந்தது அடுத்த செய்தியைப் பார்த்துத்தான்.

ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு, ஒன்றும் அறியாத மற்ற உயர்ந்த இன பெண்களை மயக்கி, திருமணம் செய்து கொள்வதே இவர்களுக்கு வேலையாகிப் போய்விட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், தற்காப்பு என்ற பெயரில்  இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பிற குலப் பெண்களை இவர்கள் ஏமாற்றி மணந்து கொள்வதால்தான், நாட்டில் மணமுறிவுகளும், தற்கொலைகளும் அதிகமாகி விட்டன. சமுதாயமே கெட்டு சீரழிந்து விட்டது. ஆகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான சட்டத்தைத் திருத்தி வலுவற்றதாக்க வேண்டும். இதற்காக தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்து, பிற இன மக்கள் ஒன்று சேர்ந்து இன்று போராட்டம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார், தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி தர தங்களால் மட்டுமே முடியும் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு தலைவர். கிட்டத்தட்ட நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறிய தர்மபுரி அவலத்தின் அனல் கூட இன்னும் தணியாத நிலையில், தனலை ஊதிப் பெரிதாக்கி, குளிர் காய்வது, மெத்தப் படித்த, மக்கள் மதிக்கும் ஒரு மனிதருக்கு அழகா? வேதனையாக இருக்கிறது. நாம் குடியிருப்பது மக்களாட்சி நடக்கும் ஜனநாயக நாட்டிலா? பெரியாரும், வள்ளலாரும், வள்ளுவரும், பூங்குன்றனாரும்,  பாரதியும் படித்து போதித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது? அதிர்ந்து போயிருக்கிறேன்.

எனக்கு சில உண்மைகள் விளங்கவில்லை.
  • இது கி.பி. 2012 தானா?
  • சட்டம் இயற்றிய மேதைகள் முட்டாள்களா?
  • ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் ஆகியவற்றை போடுவதற்கு ஏதேனும் தகுதி தேவைப்படுகிறதா? அவை உயர் வகுப்பினர் அணிவதற்கான உடுப்புகளா? அவ்வாறெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோவனாண்டிகளாக இருக்க மட்டுமே சபிக்கப் பட்டவர்களா? பொருளாதார ரீதியாகவோ கல்வி அறிவு பெற்று கலாசார ரீதியாகவோ மேம்பட்டு நல்ல ஆடை உடுத்தி மகிழ அவர்களுக்கு உரிமையில்லையா? அல்லது இவற்றை அணிபவர்கள் அனைவரும் பொறுக்கிகளா? எனில் இவற்றை அனியும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுமா? இவை ஆயத்த ஆடைகள், அழகூட்டும் ஆடைகளே தவிர அழகான பெண்களை மயக்கி ஓட்டிக் கொண்டு போகும் அதிசய லேகியம் தடவிய ஆடைகளாகத் தெரியவில்லை.
  • இவ்வாறிருக்கையில் ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் பார்த்து ஏமாந்து போகும் அளவிற்கு, பெண்கள் பூஞ்சையானவர்களா? ஏமாளிகளா? பெண்களுக்குச் சொந்த புத்தி கிடையாதா?
  • இத்தனை தீண்டாமை இருக்கும் குடியிருப்புகளுக்கு குறிப்பிட்ட வேறு இனத்தினர் நுழைய வாய்ப்பே இல்லை எனில், பெண்கள் படிக்கவும் வேலைக்காகவும் வெளியில் செல்லும் இடங்களில் தான் நீங்கள் சொல்வது போல் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன எனில், இனி பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கப் போகிறீர்களா?
  • மண் போல், பொன் போல் பெண்ணும் பூட்டி வைக்க, அலங்கரிக்க, தேவைப்படும் வகையில் பயன்படுத்த, வெறும் போகப் பொருள்தானா?
  • பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அறிவற்றவர்களா?
  • மேற்சொன்ன சாதி மறுப்பு அல்லது கலப்புத் திருமணங்களால். புதிய இரத்த பிரிவு ( BLOOD GROUP) உருவாகும் என எந்த மருத்துவமாவது கூறுகிறதா?
  • இந்த காதல் திருமணங்களால் AIDS போன்ற நோய்கள் வந்து விடும் வாய்ப்போ அல்லது மனிதனைத் தவிர வேறேதும் புதிய ஜந்து உருவாகி மனித குலத்தை வேரறுத்துவிடும் வாய்ப்போ உள்ளதா?
  • காதல் தவறா? எனில் காதலைக் கொண்டாடும் சமுதாயம் தானே நம்முடையது. காதலையும், உடன்போக்கையும்,  களவுத் திருமணத்தையும் கொண்டாடிய இலக்கியங்கள் தாமே நம்முடையவை?
  • ஆண், பெண் தவிர அரவாணிகள் என்ற மூன்றாவது இனத்தையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதையாக திருநங்கைகள் எனப் பெயரும் சூட்டி அழகு பார்த்து, ஓட்டுரிமையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கிய சமுதாயம் அல்லவா இது? தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனவும், சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் என்றால், மேற்சொன்ன மூன்று பாலினங்கள் தவிர இவர்கள் வேறேதேனும் இனத்தைச் சேர்ந்தவர்களா?
  • எல்லாவற்றுக்கும் கொடி பிடிக்கும் ஊடகங்கள், இத்தகைய சூழ்நிலையில், அட்டகத்தி போன்ற திரைப்படங்களை யதார்த்தம் என்று எவ்வாறு சொல்கின்றன? தலைவர் சொன்னதைத்தானே தாங்கள் படம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள்? அப்பட்டமான ஒரு சமூகத்தின் மீதான பழியாகத்தான் அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். என்ன? எந்த ஊர் என்று சொல்ல பயந்து கொண்டு, சென்னைக்குப் பக்கத்தில் ஒரு கிராமம் என்று சொல்லி நழுவிவிட்டார் இயக்குனர். எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் எனச் சொல்லவில்லை!
  • அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். மானிடரிலேயே சேர்த்துக் கொள்ளப் படத் தகுதியற்றவர்கள் போல் ஒரு வகுப்பினரை ஓரங்கட்ட முயற்சிப்பது, பிரிவினை வாதத்தை தூண்டும் செயல் இல்லையா? இதைத்தடுக்க சட்டத்தில் இடம் கிடையாதா?
  • இல்லையெனில் அப்புறம், இந்த நாடெதற்கு? இதற்கு ஒரு அரசியலமைப்புச் சட்டம் எதற்கு? இந்த அரசியல் கட்சிகளும் காட்சிகளும் தான் எதற்கு?
  • பிரித்தாளும் கொள்கையைத் தான் தாங்கள் பின்பற்றுகிறீர்கள், எல்லா அரசியல் தலைவர்களையும் போல். உங்களுக்கான தொண்டன் அந்த வகுப்பிலும் இருந்தான் என்பதை எப்படி நீங்கள் மறந்து போனீர்கள்?
  • சரி! தலித்களைத் தவிர்த்த மற்ற இனத்தவர்களின் கூட்டணி அமைக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், என்ன செய்ய முயல்கிறீர்கள்? தீட்டுப் படாமல் இருக்க, தனி மாநிலமோ, நாடோ வாங்கிக் கொள்ளப் போகிறீர்களா? அல்லது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒதுக்கி, ஊருக்கு ஊர் காலனிகளை உருவாக்கியது போல். தனி நாடு கொடுத்தனுப்பி விட்டு, பிற்பட்ட வகுப்புகளில் உயர்ந்த வகுப்பாகிவிடப் போகிறீர்களா? இந்த பிரித்தாளும் எண்ணம் ஏற்படவா இத்தனை படிப்பும், பட்டறிவும்? யோசித்துப் பாருங்கள்! மனிதர்களை மனிதர்களாக முதலில் பாருங்கள். அந்தத் தெளிவைத் தராத கல்வி கேலிக்குரியதே!