Tuesday, December 4, 2012

அட்டகத்தி

 ...... “They wear jeans, T-shirts and fancy sunglasses to lure girls from other communities,” he told reporters. A resolution adopted at the meeting cited statistics of broken marriages to claim that inter-caste marriages ended in failure because they were unions born out of caste design and not love.


இரவெல்லாம் இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது மழை. இப்பொழுதும். மழை, வெள்ளம், குளிர் என்றவுடன் உள்ளே எங்கிருந்தாவது ஒரு பாடல் எழும்பி விடுகிறது. இன்று ஓடியது , ஒரு அற்புதமான இசை அலையை பல்லவியை நோக்கி அழைத்துச் சென்ற பாடல் “ குருவாயூரப்பா! குருவாயூரப்பா! நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி”, புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்திலிருந்து. ஒரு இசைக்கலைஞனைப் பற்றிய படமாக இருந்தாலும், படம் முழுவதையும் கீதா என்ற அதிகம் கவனிக்கப்படாத ஒரு மாபெரும் நடிகை தன் ஆதிக்கத்தை அசகாயமான நடிப்பால் ஆக்கிரமித்திருந்த அற்புதமான படம். ஆனால் என் சிந்தனை அந்தப் படத்தைப் பற்றியோ, கீதா அவர்களைப் பற்றியோ அல்ல!

 பாடலை ரசித்துச் சுவைத்தவாறு, மழையை ருசித்தவாறு, THE HINDU நாளிதழை எடுத்தேன். எல்லைப் பிரச்சனையைப் பற்றிப் பேச நம் வெளியுறவுத் துறை தூதர் பெய்ஜிங் பயணம், முதல் செய்தி. ஆமாம், உள்நாட்டுக்குள் எல்லை தாண்டி துளி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அதைத் தீர்த்து வைக்க நமக்கு வக்கில்லை. அருணாச்சல பிரதேசத்தை தன் நாடு என்று சீனா வரைபடமே போட்டு முடித்தபின், எல்லை பற்றி பேசி, சீனப் பெருங்கோட்டைச் சுவரைப் பார்த்து, அலுப்புதான் வருகிறது. ஆனால் நான் படித்து அதிர்ந்தது அடுத்த செய்தியைப் பார்த்துத்தான்.

ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு, ஒன்றும் அறியாத மற்ற உயர்ந்த இன பெண்களை மயக்கி, திருமணம் செய்து கொள்வதே இவர்களுக்கு வேலையாகிப் போய்விட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், தற்காப்பு என்ற பெயரில்  இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பிற குலப் பெண்களை இவர்கள் ஏமாற்றி மணந்து கொள்வதால்தான், நாட்டில் மணமுறிவுகளும், தற்கொலைகளும் அதிகமாகி விட்டன. சமுதாயமே கெட்டு சீரழிந்து விட்டது. ஆகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான சட்டத்தைத் திருத்தி வலுவற்றதாக்க வேண்டும். இதற்காக தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்து, பிற இன மக்கள் ஒன்று சேர்ந்து இன்று போராட்டம் செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார், தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி தர தங்களால் மட்டுமே முடியும் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு தலைவர். கிட்டத்தட்ட நன்கு திட்டமிடப்பட்டு நடந்தேறிய தர்மபுரி அவலத்தின் அனல் கூட இன்னும் தணியாத நிலையில், தனலை ஊதிப் பெரிதாக்கி, குளிர் காய்வது, மெத்தப் படித்த, மக்கள் மதிக்கும் ஒரு மனிதருக்கு அழகா? வேதனையாக இருக்கிறது. நாம் குடியிருப்பது மக்களாட்சி நடக்கும் ஜனநாயக நாட்டிலா? பெரியாரும், வள்ளலாரும், வள்ளுவரும், பூங்குன்றனாரும்,  பாரதியும் படித்து போதித்துக் கொண்டிருக்கும் சமுதாயத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது? அதிர்ந்து போயிருக்கிறேன்.

எனக்கு சில உண்மைகள் விளங்கவில்லை.
  • இது கி.பி. 2012 தானா?
  • சட்டம் இயற்றிய மேதைகள் முட்டாள்களா?
  • ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் ஆகியவற்றை போடுவதற்கு ஏதேனும் தகுதி தேவைப்படுகிறதா? அவை உயர் வகுப்பினர் அணிவதற்கான உடுப்புகளா? அவ்வாறெனில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கோவனாண்டிகளாக இருக்க மட்டுமே சபிக்கப் பட்டவர்களா? பொருளாதார ரீதியாகவோ கல்வி அறிவு பெற்று கலாசார ரீதியாகவோ மேம்பட்டு நல்ல ஆடை உடுத்தி மகிழ அவர்களுக்கு உரிமையில்லையா? அல்லது இவற்றை அணிபவர்கள் அனைவரும் பொறுக்கிகளா? எனில் இவற்றை அனியும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுமா? இவை ஆயத்த ஆடைகள், அழகூட்டும் ஆடைகளே தவிர அழகான பெண்களை மயக்கி ஓட்டிக் கொண்டு போகும் அதிசய லேகியம் தடவிய ஆடைகளாகத் தெரியவில்லை.
  • இவ்வாறிருக்கையில் ஜீன்ஸ், டீ சர்ட், கூலிங் க்ளாஸ் பார்த்து ஏமாந்து போகும் அளவிற்கு, பெண்கள் பூஞ்சையானவர்களா? ஏமாளிகளா? பெண்களுக்குச் சொந்த புத்தி கிடையாதா?
  • இத்தனை தீண்டாமை இருக்கும் குடியிருப்புகளுக்கு குறிப்பிட்ட வேறு இனத்தினர் நுழைய வாய்ப்பே இல்லை எனில், பெண்கள் படிக்கவும் வேலைக்காகவும் வெளியில் செல்லும் இடங்களில் தான் நீங்கள் சொல்வது போல் அத்துமீறல்கள் நடைபெறுகின்றன எனில், இனி பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கப் போகிறீர்களா?
  • மண் போல், பொன் போல் பெண்ணும் பூட்டி வைக்க, அலங்கரிக்க, தேவைப்படும் வகையில் பயன்படுத்த, வெறும் போகப் பொருள்தானா?
  • பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அறிவற்றவர்களா?
  • மேற்சொன்ன சாதி மறுப்பு அல்லது கலப்புத் திருமணங்களால். புதிய இரத்த பிரிவு ( BLOOD GROUP) உருவாகும் என எந்த மருத்துவமாவது கூறுகிறதா?
  • இந்த காதல் திருமணங்களால் AIDS போன்ற நோய்கள் வந்து விடும் வாய்ப்போ அல்லது மனிதனைத் தவிர வேறேதும் புதிய ஜந்து உருவாகி மனித குலத்தை வேரறுத்துவிடும் வாய்ப்போ உள்ளதா?
  • காதல் தவறா? எனில் காதலைக் கொண்டாடும் சமுதாயம் தானே நம்முடையது. காதலையும், உடன்போக்கையும்,  களவுத் திருமணத்தையும் கொண்டாடிய இலக்கியங்கள் தாமே நம்முடையவை?
  • ஆண், பெண் தவிர அரவாணிகள் என்ற மூன்றாவது இனத்தையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மரியாதையாக திருநங்கைகள் எனப் பெயரும் சூட்டி அழகு பார்த்து, ஓட்டுரிமையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கிய சமுதாயம் அல்லவா இது? தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனவும், சமூகத்தில் சீர்கேட்டை ஏற்படுத்துபவர்கள் என்றால், மேற்சொன்ன மூன்று பாலினங்கள் தவிர இவர்கள் வேறேதேனும் இனத்தைச் சேர்ந்தவர்களா?
  • எல்லாவற்றுக்கும் கொடி பிடிக்கும் ஊடகங்கள், இத்தகைய சூழ்நிலையில், அட்டகத்தி போன்ற திரைப்படங்களை யதார்த்தம் என்று எவ்வாறு சொல்கின்றன? தலைவர் சொன்னதைத்தானே தாங்கள் படம் போட்டுக் காட்டி இருக்கிறீர்கள்? அப்பட்டமான ஒரு சமூகத்தின் மீதான பழியாகத்தான் அந்த படம் எடுக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். என்ன? எந்த ஊர் என்று சொல்ல பயந்து கொண்டு, சென்னைக்குப் பக்கத்தில் ஒரு கிராமம் என்று சொல்லி நழுவிவிட்டார் இயக்குனர். எத்தனை கிலோமீட்டர் தூரத்தில் எனச் சொல்லவில்லை!
  • அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். மானிடரிலேயே சேர்த்துக் கொள்ளப் படத் தகுதியற்றவர்கள் போல் ஒரு வகுப்பினரை ஓரங்கட்ட முயற்சிப்பது, பிரிவினை வாதத்தை தூண்டும் செயல் இல்லையா? இதைத்தடுக்க சட்டத்தில் இடம் கிடையாதா?
  • இல்லையெனில் அப்புறம், இந்த நாடெதற்கு? இதற்கு ஒரு அரசியலமைப்புச் சட்டம் எதற்கு? இந்த அரசியல் கட்சிகளும் காட்சிகளும் தான் எதற்கு?
  • பிரித்தாளும் கொள்கையைத் தான் தாங்கள் பின்பற்றுகிறீர்கள், எல்லா அரசியல் தலைவர்களையும் போல். உங்களுக்கான தொண்டன் அந்த வகுப்பிலும் இருந்தான் என்பதை எப்படி நீங்கள் மறந்து போனீர்கள்?
  • சரி! தலித்களைத் தவிர்த்த மற்ற இனத்தவர்களின் கூட்டணி அமைக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றால், என்ன செய்ய முயல்கிறீர்கள்? தீட்டுப் படாமல் இருக்க, தனி மாநிலமோ, நாடோ வாங்கிக் கொள்ளப் போகிறீர்களா? அல்லது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒதுக்கி, ஊருக்கு ஊர் காலனிகளை உருவாக்கியது போல். தனி நாடு கொடுத்தனுப்பி விட்டு, பிற்பட்ட வகுப்புகளில் உயர்ந்த வகுப்பாகிவிடப் போகிறீர்களா? இந்த பிரித்தாளும் எண்ணம் ஏற்படவா இத்தனை படிப்பும், பட்டறிவும்? யோசித்துப் பாருங்கள்! மனிதர்களை மனிதர்களாக முதலில் பாருங்கள். அந்தத் தெளிவைத் தராத கல்வி கேலிக்குரியதே!

No comments:

Post a Comment