Thursday, January 23, 2014

சென்னை இத்தனை கசந்ததில்லை!
கசந்தது சென்னை இல்லை....!
இந்த ரணமான கணங்கள்
எனக்குத் தேவையில்லை!
இறைவா! இறைவா!
என் இறைவா!
இருக்கிறாயா எனக் கேட்பது
சரியற்றதாக இருக்கலாம்!
ஆனால்....
இறைவா! என் இறைவா!
எங்குதான் இருக்கிறாய் நீ!
சால மிகுத்துப் பெயின்
நான் என்ன தான் செய்வேன்????
நின்னைச் சரணடைந்தேன்!

Tuesday, January 21, 2014



என்னோடே பேசிக் கொள்ள முடியாத மெளனத்தை
யார் என்னுள் திணித்துவிட்டுப் போனது?
யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத
ஏற்றுக் கொள்ள முடியாத ஓர் உணர்வை
யார் என்னுள் ஊற்றிவிட்டுப் போனது?
எல்லோரோடும் இருந்த போதும்
எவரோடும் ஒட்ட மாட்டாத ஒரு சமயம்
எனக்கும் வருமென்று என்னிடம்
சொல்லாமல் விட்டது எது?
வினாக்கள்! வினாக்கள்! வினாக்கள்
விடாமல் தொடரும் வினாக்கள்!

அவரவர் உலகம் நிகழ்வின் நகர்வில்;
அத்தனையும் ஒன்றன்று என்று
நின்று புரிய வைத்ததற்குப் பெயர்
வாழ்க்கை என்பதா? அனுபவமா?.
பயணத்தின் பாதைகள் ஊரோடு போவதும்
சேறாகி ஊர்வதும், நதியாகி நகர்வதும்
காட்டோடு கடப்பதும், கடலோடு அலையாடுவதும்
பாலையின் ஊடே பச்சை தேடுவதுவும்
சோலையின் ஊடாகவும் வாய்ப்பதுவும்
யாவர்க்கும் பொதுவன்று என்று
கண்முன்னே காண்கிறேன்!
எது வரை செல்லும் இப்பயணம்?
எது வரை செல்லும் இப்பயணம்?

வினாக்கள் நிறைந்ததொரு பாதையில்
பயணிக்கிறது விளங்கிக் கொள்ளயியலாத
விந்தையான விடுகதையாக வாழ்க்கை!!!!
இறைவா! என் இறைவா!

இதுவும் கடந்து போகுமா?

Friday, January 17, 2014

ஊனக் கால்கள் ஓய்ந்த போதும்
முடிந்த வரையில் போராடுவதென்று
மூச்சுப் பிடித்து ஓடுகிறேன்;
என் முதுகுக்குப் பின்னிருந்து
கற்களை வீசுகிறாய்!
இன்னும் எத்தனை தூரம்
என்னை உன்னால் விரட்ட முடியும்
என் விதியே!

மோதிப் பார்ப்போம் என்று
முளைத்தெழப் பார்க்கிறேன்;
பாறாங்கற்களால் என்
பாதையை மூடுகிறாய்!
உளிகளால் உடைத்தெடுக்க முடியாது
வலியைச் சுமந்து கொண்டே
வாழ்க்கையைக் கடக்கிறேன்
பாறைகளின் இடுக்கிலும்
முட்களை விதைக்கிறாய்.
இன்னும் எவ்வளவு வலியை
என்னில் உன்னால் வேர் பரப்ப முடியும்!

இன்னும் எத்தனை கண்ணீர்?
இன்னும் எத்தனை வேதனை?
ஒரு கேள்வி!
என் விதியே!
ஒன்றே ஒன்று மட்டும்!
நான் அழுவதைப் பார்க்க
எனக்கே பிடிப்பதில்லையே!
உனக்கு மட்டும் ஏன்
இத்தனை கண்ணீர் வேட்கை?????

Wednesday, January 1, 2014

2013 முடிய இன்னும் சில நிமிடங்கள் மிச்சம் இருந்த ஒரு நொடியில் நட்ட நடு சாலையில் பழுது பட்ட பேருந்து ஒன்றில் அமர்ந்தவாறு இதை எழுத ஆரம்பித்தேன். கடந்து போன சிறு நகரம் ஒன்றின் புத்தாண்டு இரவின் பாட்டுக் கச்சேரியிலிருந்து “ பூங்காற்று திரும்புமா” பாடல் கசிந்து கொண்டிருடந்தது. பஸ் ப்ரேக் ட்ரெளன் ஆனாலும், கைபேசியில் இந்த நேரத்தில் உற்சாகமாக கதையளக்க எப்படித்தான் சிலருக்கு வாய்க்கிறதோ? சாலைகளில் புத்தாண்டு வாழ்த்துக்கல் எழுதும் இளைஞர்கள், வண்ண விளக்குகள் ஒளிரும் தேவாலயங்கள், வர்ண ஜாலங்களாய் கோலங்கள் நிறைந்த வாசல்கள் என வழியெங்கும் உற்சாகம். வினோதமான உணர்வுகளின் கலவையில் வாழ்க்கையை நிறைய நிறைய கற்றுக் கொடுத்த 2013 முடியும் வேளையை நான் ஆவலுடனே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஆ! பேருந்து சரி செய்யப்பட்டு விட்டது. நான் வீடு சென்றடைய இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. வழியில் திருவண்ணாமலையில் அண்ணாமலையைப் பார்த்தவாறு இந்த புத்தாண்டை தொடங்குவேன் என நினைத்தேன். இதோ வழியில், ஒரு பயணத்தின் தொடர்ச்சியாக புத்தாண்டை தொடங்குகிறேன். நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!
வா! புத்தாண்டே! எங்கள் வாழ்க்கையை புதுப்பிக்க, புத்துணர்வூட்ட, பூப்பூக்க வைக்க வா புத்தாண்டே!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
பயணங்கள் முடிவதில்லை!!!! LOVE YOU ALL! WISHING YOU ALL A HAPPY AND PROSPEROUS NEW YEAR!

LOVE KANCHANA…,