Friday, January 17, 2014

ஊனக் கால்கள் ஓய்ந்த போதும்
முடிந்த வரையில் போராடுவதென்று
மூச்சுப் பிடித்து ஓடுகிறேன்;
என் முதுகுக்குப் பின்னிருந்து
கற்களை வீசுகிறாய்!
இன்னும் எத்தனை தூரம்
என்னை உன்னால் விரட்ட முடியும்
என் விதியே!

மோதிப் பார்ப்போம் என்று
முளைத்தெழப் பார்க்கிறேன்;
பாறாங்கற்களால் என்
பாதையை மூடுகிறாய்!
உளிகளால் உடைத்தெடுக்க முடியாது
வலியைச் சுமந்து கொண்டே
வாழ்க்கையைக் கடக்கிறேன்
பாறைகளின் இடுக்கிலும்
முட்களை விதைக்கிறாய்.
இன்னும் எவ்வளவு வலியை
என்னில் உன்னால் வேர் பரப்ப முடியும்!

இன்னும் எத்தனை கண்ணீர்?
இன்னும் எத்தனை வேதனை?
ஒரு கேள்வி!
என் விதியே!
ஒன்றே ஒன்று மட்டும்!
நான் அழுவதைப் பார்க்க
எனக்கே பிடிப்பதில்லையே!
உனக்கு மட்டும் ஏன்
இத்தனை கண்ணீர் வேட்கை?????

No comments:

Post a Comment