Tuesday, January 21, 2014



என்னோடே பேசிக் கொள்ள முடியாத மெளனத்தை
யார் என்னுள் திணித்துவிட்டுப் போனது?
யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத
ஏற்றுக் கொள்ள முடியாத ஓர் உணர்வை
யார் என்னுள் ஊற்றிவிட்டுப் போனது?
எல்லோரோடும் இருந்த போதும்
எவரோடும் ஒட்ட மாட்டாத ஒரு சமயம்
எனக்கும் வருமென்று என்னிடம்
சொல்லாமல் விட்டது எது?
வினாக்கள்! வினாக்கள்! வினாக்கள்
விடாமல் தொடரும் வினாக்கள்!

அவரவர் உலகம் நிகழ்வின் நகர்வில்;
அத்தனையும் ஒன்றன்று என்று
நின்று புரிய வைத்ததற்குப் பெயர்
வாழ்க்கை என்பதா? அனுபவமா?.
பயணத்தின் பாதைகள் ஊரோடு போவதும்
சேறாகி ஊர்வதும், நதியாகி நகர்வதும்
காட்டோடு கடப்பதும், கடலோடு அலையாடுவதும்
பாலையின் ஊடே பச்சை தேடுவதுவும்
சோலையின் ஊடாகவும் வாய்ப்பதுவும்
யாவர்க்கும் பொதுவன்று என்று
கண்முன்னே காண்கிறேன்!
எது வரை செல்லும் இப்பயணம்?
எது வரை செல்லும் இப்பயணம்?

வினாக்கள் நிறைந்ததொரு பாதையில்
பயணிக்கிறது விளங்கிக் கொள்ளயியலாத
விந்தையான விடுகதையாக வாழ்க்கை!!!!
இறைவா! என் இறைவா!

இதுவும் கடந்து போகுமா?

No comments:

Post a Comment