Sunday, January 18, 2015


சிறுபறவையாய் உனக்குள்
சிக்குண்டு கட்டுண்டு
சிறுமைப்பட்டேனாயினும் உன்னை
சிறுகனமேனும் பிரிந்தறியேன் என்
உயிரிலும் உளத்திலும்!
நீ பேசா பொழுதிலெல்லாம்
தீயெனப் பரவும் மெளனத்தில்
உன் உதட்டுக்குள் உறங்கும்
எண்ணங்கள் யாவையும் என்
மனம் படித்துக்கொண்டிருப்பது
சரியான மொழியில்தானா என்பது
மட்டும் புரியாத புதிர்!
நான் ஏமாளியல்ல என்று
நான் பைத்தியமல்ல என்று
நம்பிக்கைகள் பொய்ப்பதில்லையென்று
நச்சென நிரூபிக்க எனக்கு நீ
என்ன சொல்ல நினைக்கிறாய்?
எங்கே  இருக்கிறாய்?
என்ன செய்யப் போகிறாய்?
கதைகளிலும் கவிதைகளிலும்
கண்ட கதாபாத்திரமென
கனவாகிவிடாதே கண்ணா!
காத்திருக்கிறேன்........
;நான் காஞ்சனா

Thursday, January 15, 2015

திருப்பாவை பாசுரம் 30
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
     திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
     பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
     இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

எம் பாவை 30

நன்றெனக் கீவாய் நண்பா!
உயிரெனக்கு நீயென்கையில்-என்
விடியலும் பகலும்  மாலையும் இரவும்
உறக்கமும் விழுப்பும் கனவுகளும் நீயேயென்கையில்
உன்னையன்றி நான் யாரைக் கேட்பேன்.
நன்றெனக் கீவாய் நண்பா!
என் இறைவன் நீயென்பதை
என்னுளம் உணர்ந்தபின்- நீ
என்ன சொன்னாலும் அது இல்லையென்றாகுமோ?
எனக்கில்லை எனச்சொல்லவும் உனக்கியலுமோ?
திரையிட்டோ மறைத்து வைப்பாய் உன்
தீங்குழல் நாதத்தை-காற்றென் காதில்
ஓங்கி ஒலித்திடாதோ! உத்தமனே உன்னிசையை!
காலக்கெடுக்கள் கரைந்து கொண்டிருக்கும்போதினும்
என் கண்ணனின் வார்த்தைகள் பொய்யாதல்
எங்ஙனம் சாத்தியம் என காத்திருக்கிறேன் கண்ணா!
தாள் திறவாய் தேவனே! தாமரை மணாளனே!
தாமதம் இனி தாங்காது! தட்டுகிறேன்!
தாள் திறவாய்! தாயெனக் காத்திடுவாய்!
தயாளனே! தயை புரிவாய்!

-காஞ்சனா




Wednesday, January 14, 2015

திருப்பாவை பாசுரம் 29
சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
     பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
     குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
     எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
     மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்


திருப்பாவை பாசுரம் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
     அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
     குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
     இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்


திருப்பாவை பாசுரம் 27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
     பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
     சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
     ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
     கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்



திருப்பாவை பாசுரம் 26
மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
     மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
     பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
     சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
     ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்




Friday, January 9, 2015

திருப்பாவை பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
     அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்


எம் பாவை 25

நாள் 25 நடந்து பறந்து கடந்து போனது!
நான் உன்னிடம் பேச ஏதுமில்லாமல் போனது!
ஏமாற்றங்களை மட்டும் பரிசாக அளிப்பவனிடம்
ஏது பேச? எல்லாவற்றுக்கும் நன்றி கண்ணா!
எண்ணம், செயல் யாவும் நீ என்றால்,
நடப்பதும், நடக்காமல் போவதும் யாவும் நீயென்றால்,
காயங்களும், களிம்புகளும் யாவும் நீயென்றால்
காயங்களும், துயரங்களும், ஏமாற்றங்களும் மட்டுமே
எனக்கென எப்பொழுதும் தருவாயா என்ன?
பக்தியும், பாக்களும், பளிச்சிடும் அலங்காரங்களும்
நீ மட்டும் நித்தமும் பெற்றுக் கொண்டு
பக்தர்களை அனலிடுவாயோ கண்ணா!
ஏதும் அறியாதது போல் இருப்பவனிடம்
ஏது பேச? நான் பேச?
Enough of your Bitter Silence!
நிறைய நிறைய வலிகளுடன் 
நான்.......
-காஞ்சனா

Thursday, January 8, 2015

திருப்பாவை பாசுரம் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
     சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
     கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
     வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
     இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 24

அண்டங் காப்பவனுக்கு என்னைப் பார்க்க நேரமில்லையோ!
ஆகாய வண்ணனுக்கு என் குரல் கேட்கவில்லையோ!
இரண்யனுக்கும் ப்ரசன்னமானவனுக்கு இரக்கம் தோன்றவில்லையோ!
ஈகைப் பேரருளாளனுக்கு என் மீது ஈரம் கசியவில்லையோ!
எனக்குக் கேட்கத் தெரியவில்லையோ! அல்லது
உனக்குத் தர உள்ளம் உடன்படவில்லையோ!
எல்லை இல்லா துன்பத்தில் எம்மைத் தவிக்கவிட்டு
ஏதுமறியாதது போல் ஏளன மெளனம் காப்பாயோ!
ஐயத்திற்கப்பாற்பட்ட பரமனுக்கு என்னை ஆதரிக்க மனமில்லையோ!
ஒன்றிரண்டல்ல நாழிகை, நாள், மாதம், ஆண்டென காலம் என்னை
ஓட ஓட விரட்டுவதை ஓரமாய் நின்று ரசிக்கிறாயோ!
இந்த காயங்களுக்கு என்ன காரணமெனத் தெரியவில்லை ஆனால்
இவற்றிற்கான களிம்பு இருப்பது உன்னிடம் அன்றோ!
என்ன செய்வாயோ தெரியாது! ஆனால் எல்லாவற்றுக்கும் நீயே பொறுப்பு! 
இன்னும் எது வரை போகும் எனத் தெரியவில்லையே! ஏ! கண்ணா!
உன் பதிலுக்காக வரவுக்காக என் விடுதலைக்காக
இன்னும் விசுவாசத்துடன் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்!
காக்க கருடன் ஏறி கண்ணா வருவாய்!

-காஞ்சனா

Wednesday, January 7, 2015

திருப்பாவை பாசுரம் 23
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
     சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
     மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
     கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த
     காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 23

ஸ்ரீரங்கநாதா! ஸ்ரீநிவாசா! ஸ்ரீவேங்கடேசா! 
ஸ்ரீவைகுந்தா! ஸ்ரீமந்நாராயணா! ஸ்ரீமதுசூதனா! 
ஸ்ரீதரா! ஸ்ரீமுரளிதரா! ஸ்ரீதேவராஜா! 
ஸ்ரீமுகுந்தா! ஸ்ரீகோவிந்தா! ஸ்ரீதேவகிமைந்தா!
ஸ்ரீகோபாலா! ஸ்ரீலக்ஷ்மிநாராயணா! ஸ்ரீநரசிம்மா!
ஸ்ரீராமகிருக்ஷ்ணா! ஸ்ரீராதாகிருக்ஷ்ணா! ஸ்ரீபாலகிருக்ஷ்ணா!
ஸ்ரீசாரங்கா! ஸ்ரீஹரிகிருக்ஷ்ணா! ஸ்ரீராமகிருக்ஷ்ணா!
ஸ்ரீசாயிநாதா! ஸ்ரீகோபிநாதா! ஸ்ரீஜகன்னாதா!
ஸ்ரீபரந்தாமா! ஸ்ரீமணவாளா! ஸ்ரீகலிவரதா! 
ஸ்ரீமாதவா! ஸ்ரீகேசவா! ஸ்ரீரமணா! 
ஸ்ரீநவநீதா! ஸ்ரீபரமாத்மா!  ஸ்ரீ நந்தகுமாரா!
பத்மநாபா! பாலாஜி! பார்த்தசாரதி! 
மனோகரா! மணிவண்ணா! மதனகோபாலா!
திருமாலே! திருமலைவாசா! திருப்பதியானே!
அபயம்! அபயம்! அபயம்! என்றே 
சரண்புகுந்தேன்! வரம் தருவாயே!
ஆழ்வார்க்கடியானே! ஆனந்தகண்ணா! ஆபத்பாந்தவனே!
கருணாகரா! கருணைக்கடலே! கண்திறவாயே!
காத்தருள்வாயே! 

-காஞ்சனா

Tuesday, January 6, 2015

திருப்பாவை பாசுரம் 22
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
     பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
     கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
     திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
     எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 22

கடவுளென்றோ உன்னைக் காணாமல் தவித்தோம்!
கண்ணா! விடைகளுக்கப்பாற்பட்ட விடியல் நீயென்றன்றோ
உன் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தோம்!
ஒரு பிறவியில் அன்னையாய், ஒன்றில் தங்கையாய்
மற்றொன்றில் தோழியாய் வேறொன்றில் பக்தையாய்
ஓயாமல் உன்னுடன் பிறவிகள் வளர்த்தும் ஒரு
ஓரத்தில் கூட எனக்கான புன்னகை சிந்த 
நேரமில்லையோ உனக்கு! கண்ணா! இதை நான்
பாராமுகம் என்பேன்; பயங்கரவாதம் என்பேன்;
பிடிவாதம் என்பேன்; எப்படிச் சொன்னால்
நீ மெளனம் கலைப்பாய் என மட்டும் சொல்!
அமைதி கொள்கிறேன்!
அன்னங்களுக்கும் புறாக்களுக்கும் பைங்கிளிகளுக்கும்
அகவும் மயில்களுக்கும் கருங்குயில்களுக்கும் கூட
உன்னிடம் நேரம் இருக்கையில், எனக்கான நேரத்திற்கு
இத்தனை சோதனையா! வேதனையா! தாமதமா! 
இம்சைகள் போதும் கண்ணா! இன்னல் தீர்க்கும் நேரம் இது!
வேறெவ்வாறும் நான் சொல்ல இயலாமல்
வெறும்  ஊமையாகி நிற்கின்றேன்! கண் மலர்வாய் கண்ணா!
வேண்டிய மாற்றம் தந்தே எம்மைக் காத்தருள்வாய் கண்ணா! 
-காஞ்சனா

Monday, January 5, 2015

திருப்பாவை பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
     மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
     ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
     மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
     போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 21

காலை விடியுதிங்கே! கதிர்மதியம் விரியுதிங்கே!
சாலை வழியிலெல்லாம் உன் சங்கநாதம் கேட்குதிங்கே!
ஞாலம் உனைத் தொழுதே நற்கதி எய்துதிங்கே!
நாளைப் போதெதற்கு இன்றேயெனக் கருள்வாயே என்றுன்
தாள் பணிந்தேன்! தாமோதரா! தளிர் விழிகள் திறந்தெழுவாய்!
பாலை துளிர்த்திடவே பாலமுதம் சொரிந்திடவே
மானமுகில் பொழிந்திடவே மாலவனே கண்திறவாய்!
யாவும் நீயே என்றே யாம் உன் சரணானோம்! 
ராகமலர் கொண்டு பாக்கள் பல புனைந்தோம்;
லாவகமாய் துயரம் நீக்கி நன்மாற்றமே நல்கிடுவாய்!
வானக் கொடை போலே என் அகம் காத்திடவே
வந்தருளும் நேரமிது! வரதனே! கண் மலர்வாய்!
என்றென் எண்ணமெல்லாம் இப்போதே எடுத்துரைத்து
கண்ணனை எழுப்பிடவே கிளம்பேலோர் எம் பாவாய்!
-காஞ்சனா

Sunday, January 4, 2015

திருப்பாவை பாசுரம் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
     கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
     வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
     நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
     இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்



எம் பாவை 20

ஏதோ ஒன்றில் தேடுகையில் எதிர்படும் உன் இருப்பு;
எதில் தேடினாலும் எல்லாவற்றிலும் உன் சிரிப்பு;
கேட்காத புதுவடிவில் இசைக்கிறது உன் வேங்குழல்;
பார்க்காத உருவொன்றில் பளிங்கு போன்ற உன் முகம்;
பாரதம் சொல்லாத பார்த்தசாரதியின் முகம்தனை
பாவையர் யாமறிவோம்! பார்கடல் அரசே! உன்
கொண்டல் கொண்டையில் சூடி மகிழ்ந்திடவே
 தொடுத்துக் கொணர்ந்தோம் யாம் மலர்ச்சரங்களை
விழித்தன வண்டினங்கள் மலர்களின் மனத்தில்!
 விழித்தன சேவல்கள் அம்மலர்களின் ஒளியில்!
வாச மலர்கள் உன் வாசலில் காத்திருப்பதைக்
கண்டும் காணாமல் நீ மட்டும் உறங்குதியோ!
உறங்குவதாய் நடித்தனையோ!
அன்பைப் பகிர ஆண்டாளுக்கு மட்டுமே உரிமை
உண்டெனில் என்னை நித்தம் ஆண்டானே!
நானும் உன் ஆண்டாளே! 
உன் காக்கும் கரம் கொண்டு என்னைக் காத்திடவே
உடன் வருவாய் கண்ணா என்று நான் புலம்புவதை 
புள்ளினங்கள் கூவும்முன் பூவினங்கள் பூக்கும் முன் 
அண்ணலின் காதில் உரையேலோர் எம் பாவாய்!

-காஞ்சனா



Saturday, January 3, 2015

திருப்பாவை பாசுரம் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
     மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 19

நாளொரு நடனம் புரிந்திடும் ரமணா!
நானொரு விளையாட்டுப் பொருளோ உன் கையில்!
கார்முகில் வண்ணம் யாவும் மேனியில் அணிந்தாய்!
காலை விடிந்திடவே எமக்குக் கதிரென வந்திடுவாய்!
மாலையும் மணம் வீசும் மற்றவையும் குளிர்
பாதம் பணிந்து நின் வேங்குழலோசையில் லயித்திருக்க
நான் மட்டும் தனித்திருப்பேனோ! தரிசனம் தந்திடுவாய்!
காக்கும் தொழில் ஒன்றே நின் தொழில் அன்றோ!
நாராயணா! நற்றெய்வமே! எனைக் காத்திடுவாய்!
சித்தம் வைத்திட்டேன்; என் செல்லெல்லாம் நிறைத்திட்டேன்!
பித்தம் களைந்திட்டே உன் பிள்ளைக்கருள் புரிவாய்!
வருவாய் கண்ணா! மறை அருள்வாய் கண்ணா!
திரை நீக்கி சிறை போக்கி வந்தெனைக் காத்திடுவாய் கண்ணா!
-காஞ்சனா




Friday, January 2, 2015

திருப்பாவை பாசுரம் 18
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
     நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
     வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
     பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
     வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 18

அன்னங்கள் நிறைந்திருக்கும் அல்லிக்குளம்;
ஆம்பல்கள் மலர்ந்திருக்கும் அரண்மனைக்குளம்;
இசை மயக்கியிழுக்கும் சுற்றம் நிறை குளம்;
ஈக்கள் மொய்க்கும் தேன்பூக்கள் நிறை குளம்;
உன் தோட்டத்துக்குளம்!

உன் உச்சிக் கூந்தலுக்கு பூவளர்க்கும் குளம்;
ஊதுவாய் என்றே உன் மெளனக் குழலின் இசையை
எதிர்பார்த்து உயிர் காத்து எட்டுத்திசைகளிலும்
ஏகாந்தத்தில் விழி பூத்திருக்கும் எழில் குளம்;
என்றும் உனக்கான என் குளம்!

ஐந்தறிவிற்கும் தாகம் தணிக்கும் குளக்கரையில்
ஒற்றைக் குயிலாய் நான் உன்னை அழைப்பது
ஓதுதற்கரியானே! இன்னுமா கேட்கவில்லை!
மெளனம் கலைப்பாய் கண்ணா! 
அஃதொரு அன்றிலென அவனியோர் இகழும்முன்
எனக்கொரு வார்த்தை சொல்! 
உனக்காய் காத்திருக்கிறது எம் இல்
என உரக்க உரைப்பேலோர் எம்பாவாய்!
-காஞ்சனா

Thursday, January 1, 2015

திருப்பாவை பாசுரம் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
     எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
     எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
     உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
     உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

எம் பாவை 17

அன்பின் பேரொளியே! அரசர்க்கெல்லாம் அரசே!
ஆனந்தக் கண்ணா! ஆலிலை மன்னா!
இன்குழலுக் குரியோனே! இச்சகம் காப்பவனே!
ஈன்ற தந்தையே! ஈரன்னை மைந்தனே!
உயிரே! உணர்வே! உடையே! உலகே!
ஊனே! ஊற்றே! உன்னைச் சரணடைந்தேன்!
எல்லையில்லாதவனே! என்னைக் காத்தருள்வாய்!
ஏழைப் பங்காளனே! ஏழுமலையானே!
ஐம்பூதத்துக்கு அதிபதியே!
ஒப்பிலாதவனே! ஒளியின் ஒளியே!
ஓர் வார்த்தை சொல்லிடுவாய்!
நல்வார்த்தை சொல்லிடுவாய்!
என நித்தம் பணிந்திட்டேன்!
ஏனோ நீ இன்னும் இரங்கவில்லை!
நீ என்னிடம் பேசவில்லையெனில் 
நான் உன்னைத் தவிர வேறு 
யாரிடமும் பேசுவதாய் இல்லை!
என்ன பிடிவாதம் இது?
எழுந்தருள்வாய் கண்ணா! 
என்னைக் காக்கும் நேரமிது!
கொஞ்சம் இரங்கி வா!
என்றே அவனிடத்தில் என்னிலையை
எடுத்துரைப்பீர் எம்பாவாய்!
-காஞ்சனா

"உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்" என்ற நற்செய்தியுடன், சாய் பாபா ஆரத்தியுடன், வைகுந்த வாசல் திறப்புடன், கந்தர் சக்ஷ்டி கவசம், திருப்பாவை, திருவெம்பாவையுடன்.  தூறல், சாரல் அல்லது பன்னீர் தூவல் என்று இனங்காண முடியாத நல்லாசீர்வாதத்துடன் இந்த நன்னாள் புத்தாண்டு விடிந்துள்ளது. இறைவா! இனி வரும் ஒவ்வொரு நொடியையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். அமைதியும், ஆனந்தமும், ஆரோக்கியமும், நிம்மதியும்  அன்புடன் நீயெனக்கருள்வாய்!சரணம்! சரணம்!

புத்தாண்டு வாழ்த்துக்களுடன், இப்போதைய மனநிலைக்கு மனதிற்கு நம்பிக்கையும், தைரியமும், நிம்மதியும், திருப்தியும் கொடுக்கும் வியாழக்கிழமை பாபா பூஜை முடித்து, வைகுந்த ஏகாதசிக்காக பெருமாளையும் சேவித்து வந்தாயிற்று. அம்மா, அப்பாவுடன் கோவிலிலிருந்து திரும்புகையில் குதிரைகள், யானைகள் சகிதம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால பார்த்தசாரதி நகர்வலம் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராமல் பெய்த சாரல் மழையில் நனைந்தவாறு பெருமாளை தரிசனம் செய்து கொண்டிருக்கையில் நாதஸ்வரத்தில் வாசித்த இசை கவனத்தை ஈர்த்தது. என்ன பாடல் இது? தனன்ன நான தனன்ன நானனா....தனன்ன நான தனன்ன நானனா....ஒருவர் கனவு ஒருவர் விழியிலே,,,,கண்ணா வருவாயா! மீரா கேட்கிறாள்! வாஹ்! What a timing ya? இதற்காகவே மனம் சொல்கிறது. கண்ணன் யாவையும் பார்த்துக் கொண்டுதான், கேட்டுக் கொண்டுதான், கவனித்துக் கொண்டுதான் என்னுடனே இருக்கிறான். Whatever Happens, Undoubtedly Its going to be a Really Very Happy New Year! Thanks The Lord!



யாவருக்கும் விடியட்டும் புத்தாண்டு;
யாவருக்கும் விரியட்டும் புத்தொளி;
யாவருக்கும் அமையட்டும் புது வாழ்வு;
யாவருக்கும் பிறக்கட்டும் புது நம்பிக்கை;
யாவருக்கும் நிறைவேறட்டும் நல்லாசைகள்;
யாவருக்கும் கிடைக்கட்டும் நல்லாசிகள்;
எங்கும் நிலவட்டும் மகிழ்ச்சி;
எங்கும் விளையட்டும் அமைதி;
எங்கும் செழிக்கட்டும் நிம்மதி;
எங்கும் எதிலும் என்றும்
வளமே பயக்கட்டும்
நலமே பயக்கட்டும் 2015!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!
-காஞ்சனா