Tuesday, March 29, 2016



கட்டை விரல் நுனியில் நின்று
காற்றில் சுழன்றாடும் தனியுடலாய்
தாளமற்றதொரு தாளகதியில்
தாவித் தாவி தனக்குள்ளேயே
தவழ்ந்தாடுகிறது மனது!

நாளங்களின் நாட்டியத்தில்
நாணிடப்படாத வில்லொன்று
அம்பெய்யத் தயாராய்
எப்போதும்!

தானே தன்னைக் குடையும்!
தானே தன்னை அறியும்!
நானே என் கேள்வியாய்!
நானே அதன் பதிலுமாய்!

என் குழலின் துளைகளில்
ஏதொரு பிழையுமில்லை!
எனினும்
என் குரலினுக்கென்று
ஏதொரு மொழியுமில்லை!

யாருடனும் யாதொன்றும்
பகிர்வதற்கில்லை
என் பயணத்தில்!
வேறென்ன சொல்ல?

தான், தனது என ஏதுமின்றி
தனித்த தன் பயணப் பாதையில்
தாகங்களற்ற என்

தண்ணீர் அறிவு!

Tuesday, March 8, 2016



முகம் தெரியாத எதிர்கால கணவனுக்காக
முழுநாளும் நோன்பு நோற்கிறாய்.
மூடனோ, முட்டாளோ, முன்கோபியோ,
முகத்தில் அறைபவனோ அமைந்துவிட்டாலும்
முன்வினை என முகாந்திரம் சொல்கிறாய்!
முன்கோபம் குறைவதற்காக மீண்டும்
முன்னூறு விரத முறைகள்- அவன்
முகம் கோணாமல் நடந்து கொள்ள
மூவாயிரம் அறிவுரைகள்!
முடிவேயில்லா பிரார்த்தனைகள்!
இன்னும்
இன்னும்
இன்னும்….
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும்
இத்தனை பத்தாம்பசலித்தனமா!
விழித்தெழடி பெண்ணே!
விடிந்து வெகுநேரமாகிறது!

நாளொரு நிர்பயாவை
நாடு விழுங்கிக்கொண்டிருக்கையில்
நாடக சாத்திரங்கள் எல்லாம்
நமக்கிங்கு எதற்கடி?
நல்லதொரு நாள் கிழமையென
நங்கையர்க்கேதும் இல்லை!
ந்மக்கான நேரம் யாவும்
நன்றே என்றுணர்!
நல்ல நேரம் இது! பெண்ணே!
நமக்காகவும் பேசத் தொடங்கு!

கண்ணகிக்காகவும் திரெளபதிக்காகவும்
பேசுவது போல்
மாதவிகளுக்காகவும் மணிமேகலைகளுக்காகவும்
கூட பேசு- உன்
அக்கா தங்கைகளுக்காக மட்டுமல்ல!
அப்பாவிகளுக்கும் அபலைகளுக்காகவும்
கூட பேசு!
சத்தியம் பேசு!
சமதர்மம் பேசு!
சங்கடம் ஏதுமின்றி
சத்தமாகப் பேசு!
உரக்கப் பேசு!
உற்சாகமாக பேசு!
உயரங்களைத் தொடும்
உத்வேகத்துடன் பேசு!
பெண்ணியம் பேசு!
பெண்ணே!
உன்-னியம் பேசு!!!

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

Happy Women’s Day!!!

காவிய நாயகியாய்
கடலோரம் நின்றது போதும்!
கண்ணகியாய் காந்தாரியாய்
கண்களைக் கட்டியிருந்தது போதும்!
கண்ணகிகளைத் தாண்டியும்
காவியங்கள் உண்டென்பதை
கனமாய் உன் மனதில் பதி!
கண்கள் திற!
கதவுகள் திற!
காற்றை உள் வாங்கு!
சுவாசிக்கப் பழகு!!!


காதணிகளுக்காக அல்ல!
காதுகள் கேட்பதற்காக
என்பதை உணர்!
கவிதைகள் கேள்!
கவிதைகள் செய்!
கல்வி கொள்!
கல்வி கொடு!
என் கல்வி!
என் உரிமை!
என உரிமையாய்
கேட்டு வாங்கு!

காலை புலர்வது
உனக்காகவும் என்பதை அறி!
கனவுகள் விதை!
காவியம் படை!
கடல் கடந்தும்
நல் அறிவு கொள்!
காதலும் கடந்து போகும்!
கண்களைச் சுதாரி!
உனக்காக யோசி!
எனக்காக யோசி!
நமக்காக யோசி!

பேசு!
பாடு!
நீ
பெண் என்பதை
பெருமையுடன் உணர்!
சிறகை விரி!
சிகரம் தொடு!
பெண்மையில் பெருமிதம் கொள்!!!
பெண்மையில் பேரானந்தம் கொள்!
மலர்கள் மகரந்தத்திற்காக
மட்டுமல்ல!!!!!!
மணம் வீசு!
பெண்ணே!
மனம் பேசு!!!

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

Happy Women’s Day!!!