Friday, November 7, 2014


வாழ்க்கை தன்னை
வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது!
இல்லையெனச் சொல்லவில்லை;
வருத்தம் தான்!
இருந்தாலும் என்ன?
வந்தது இல்லை என்றாகுமா?
சிந்தனை சதா கொத்தியெடுக்க
சில்லுசில்லாய் உடைந்து கிடக்கும்
என்னை, என் பிம்பத்தை
ஒன்று சேர்க்க முயல்கிறேன்!
சிதறிக் கிடக்கும்
எல்லா சில்களிலும்
எல்லா திசைகளிலும்
தெளிவாய் தெள்ளத் தெளிவாய்
வாழ்க்கை தன்னை
வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது!

அப்பாக்கள் உடன் இருக்கும்
தைரியத்தில்தான் அகிலத்தின்
அத்தனை மகள்களும்
அச்சமின்றி உறங்கப் 
போகிறார்கள் போலும்!

தந்தையும், தாயும்
அண்ணன் தம்பியுமாக
என் குடும்பம்
என்னைத் தன்
தோள்களில் தாங்குவதாலேயே
நான் பிழைத்திருக்கிறேன்
என்பதை நான்
உணர்ந்தே இருக்கிறேன்!

நான் உடைந்து போனேன்!
என் எல்லா சில்களிலும்
வெளிச்சச் சிதறல்களின்
வானவில் வில்லைகள்!

நான் உறைந்து போனேன்!
என் எல்லா அடுக்குகளிலும்
வெண்பனியின் அடியில் ஓடும்
தண்ணீரின் காலடிகள்!

சருகான போதும்
என் நாளைக்காக
நானே எருவானேன்!

பற்றியெரிந்த போதும்
சுற்றியும் ஒளி வளர்த்தேன்
மெழுகுவர்த்தியாய்!

தீக்கங்குகளின் அடிச்சாம்பலிலிருந்து
பீனிக்சாய் பிழைத்தெழ
ப்ரயத்தனப் படுகிறேன்!
அது சாத்தியப்படும்;
நிச்சயம் நடக்கும் என்று
எதுவோ சொல்கிறது!

தூரத்து தேவாலய மணியின்
நடுநிசி மணியோசை
சத்தமாய் ஒலிக்கிறது!
அசரீரியாகத் தொடர்கிறது
" பயப்படாதே! நான் உன்னுடன் இருக்கிறேன்!"
பைபிள் வசனம்!
எங்கோ துளிர்க்கிறது
நாளைக்கான நம்பிக்கை!