Thursday, October 15, 2015


வாய்ப்பேச்சு மறுக்கப்பட்டவர்களின்
வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களின்,
வாழ்க்கை மறுக்கப்பட்டவர்களின்,
வாழ்க்கையை உங்களால்
எங்ஙனம் புரிந்து கொள்ள இயலும்!

கற்களால் அடித்துக் கொல்லப்படுபவர்கள்
கள்வர்களாக்கப் படுவதும்,
மானபங்கப்படுத்தப் படுபவர்கள்
மலினப்பட்டுப் போவதும்
இந்த தேசத்தில் மட்டுமல்ல;
எந்த தேசத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது!

அன்னிய மண்ணில்
அகதிகளாக இருப்பதற்கும்,
தன் மண்ணிலேயே
தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கும்
என்ன பெரிய வேற்றுமை
இருந்து விட முடியும்?
உங்கள் பழுப்பேறிய
பதிவேடுகளில் வேண்டுமானால்
வெவ்வேறாய் பதியப்பட்டிருக்கலாம்!
தூர்வாரப்படாத உங்கள்
துருப்பிடித்த மனங்களுக்கு
பெரிதாய் என்ன
புரிந்து விடப் போகிறது!
அடக்குமுறையின் வேதனையை
அனுபவித்தவர்களுக்குத்தான் அதன்
அக்னிப்பிரவேச அனுபவம் புரியும்!

நிர்வாணப் படுத்தப்பட்டவர்களும்
நிர்கதியாக நின்றவர்களும்
நித்தம் நிறம் மாறும்
ஊடகங்களீன் கண்களில்
ஒருநாள் ஊறுகாயாகிவிட்டு
மறுநாள் நாடகமாக்கப்படுவது
எத்தனை கொடுமை?
இந்த தேசம்
நன்றாக இருக்கட்டும்!

மானம் காப்பது
மனிதனின் கலாசாரம்!
மனைவியை தீக்குளிக்க வைப்பது
மன்னனின் கலாசாரம்!
வாழும் வாய்ப்பை
வழுநெறியின் பெயரால்
தன் மனையிடமிருந்தே
தட்டிப் பறித்தவனின்
நாட்டுப் பிரஜைகள் தானே!
கணவனால் கூட ஆடைகள்
களையப்பட்டு நடுத்தெருவில்
அம்மணமாய் நிற்க வைக்கப்பட்டிருக்கலாம்!
சாத்தியம் தான்!
அட! சாத்தியம் தானே!

உங்கள் மனசாட்சியை ஒரு முறை
ஒரே ஒரு முறை
கேட்டுப் பாருங்கள்!
அந்த அவமானத்தின் வலியை
அங்குலம் கூட உங்களால்
அனுபவிக்க முடியுமா என்று?

தன்மானமுள்ள எந்த மனிதனுக்கும்
தன் ஆடை களைந்து
போராடும் நிலைக்கு
தள்ளப்படும் தருணங்கள்
அமிலக் குளியல்!
அதை நீங்கள்
கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
அசிங்கப் படுத்தாதீர்கள்!
அவர்கள் ஏற்கனவே
அசிங்கப்பட்டுதான் நிற்கிறார்கள்!

பால் வேற்றுமை தொடங்கி
இன வேற்றுமை வரை
தாழ்த்தப்பட்டவர்களின் வலியை,
வாழ்க்கையின் விளிம்புநிலைக்கு
தள்ளப்பட்டவர்களின் அவமானங்களை
சிற்றூர்களிலும் பெருநகரங்களிலும்
மாவட்டம், மாநிலம் என விரிந்து
நாடுகள் தோறும் இந்த
மண்ணின் மீது அடக்குமுறையால்
தாழ்த்தப்பட்டுக் கொண்டே
இருப்பவர்களின் வேதனையை,
எக்காலமும் உங்களால்
எதிர்கொள்ளவே முடியாது!

பெண்ணின் சாபம் மட்டுமல்ல!
இந்த
மண்ணின் மீது தாழ்த்தப்பட்ட
எந்த மனிதனின் சாபத்திலும்
விழுந்து விடாதீர்கள்!
அது யுகங்கள் கடந்து
அவமானத்தின், புறக்கணிப்பின்
அனலில் தகித்துக் கொண்டிருக்கிறது!
அகிலம் தாங்காது!
வேண்டுமானால்,
உங்கள் கலாசாரத்தை
உறைக்குள் உறங்க
அனுப்பி விட்டு
அர்த்தமற்ற சம்பிரதாயங்களை
பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்!
உலகம் நித்திய சமாதானத்துடன்
சமதர்மத்துடன், சகிப்புத்தன்மையுடன் இருப்பதாய்
உங்களை நீங்களே
நம்பவைத்துக் கொள்ளுங்கள்!

ஏனெனில்
உண்மை வேறு!
இங்கு
உண்மை வேறு!

நெஞ்சு பொறுக்குதில்லை!