Friday, December 19, 2014

திருப்பாவை பாசுரம் 4
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
     ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
     பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
     தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
     மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.


எம் பாவை 4

கோலக் கருமணியை ;
கோகுலத்து கோமகனை;
ஆயர்பாடி அழகனை;
ஆழி சூழ் பரந்தாமனை
கொஞ்சித் துயிலெழுப்ப
கோபியரே வாரீரோ!

மதுரா நகர் குழலோசையில்
மயங்கிய குயில்கள் காண;
பத்மநாபன் சங்கொலியில்
பதுங்கிய பகைவர் காண;
பறவைகளும் விலங்கினமும்
பார்போற்றும் பாவலரும்
காத்துக் கிடக்கின்றனர்!

சொல்லிற் கினியனை
சுந்தர ரூபனை
வல்லமை பொருந்திய
வரத ராஜனை
மெல்லத் துயிலெழுப்ப
செல்வச் சிறுமியரே
வருவீர்காள்!

திருமகள் உறை திருமார்பன்
திருவேங்கடவன் கண் திறந்திடவே
கதிரவனும் காத்திருக்கின்றான்;
காலை மலர்ந்திடவே-எம்
கவலைகள் மறைந்திடவே;
அல்லல் நீங்கி
நல்லவை பிறக்கவே;
எல்லா நலன்களும்
எல்லையற்றுப் பெருகவே
எழில் கேசவனை எழுப்ப
வந்தேலோர்  எம்பாவாய்!

-காஞ்சனா

No comments:

Post a Comment