அருள் நித்யானந்தம் ஏன் அமரர் ஆனார்? எனத் தொடங்கி, மாரிமுத்து என்ன ஆனார்? என்ற கேள்வியுடன் விழித்துக் கொண்டிருக்கும் இந்த பொழுதில், மறந்திருந்த மாரிமுத்து
அவர்களை அருள் நித்யானந்தம் நினைக்க வைத்தது விசித்திரம்தான். ஆனால் இதில் நான் கண்டுணர்ந்தது
வேறு ஒரு பாடம்!
படிப்பறிவு என்று நாம்
சொல்லும் ஒன்று உண்மையிலேயே உலக அறிவு தானா? நாம் உண்ணும் உணவிலிருந்து, உடுக்கும்
உடையிலிருந்து, நம்மைச் சுத்தமாக்கி வைக்கும் கழிவு வரை நாம் கவனிக்கிறோமா? என்று யோசித்துப்
பார்க்கிறேன். நகர வாழ்க்கை, வாழ்க்கையை நரக வாழ்க்கையாக்கி விட்டதோ என்று கூடத் தோன்றுகிறது.
உணவு முறையை எடுத்துக்
கொள்வோம். என்றோ தயார் செய்யப்பட்டு, சவ்வுத் தாள்களிலோ, ப்ளாஸ்டிக் அடைப்பான்களிலோ, நீண்ட நாள் கெடாமல் இருக்க கலக்கப்
படும் வேதிப் பொருளுடன்(PRESERVATIVE) கிடைக்கும் INSTANT FOOD எனப்படும் உடனடி உணவு
வகைகள், வாயையும் வயிற்றையும் அடைத்து, வயதையும் அடைக்கும் அவசர கதி அரைவேக்காட்டு
உணவு, அல்லது ஒரு வாரத்திற்குச் சேர்த்து அரைத்து குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைத்த
புளித்த மாவில் செய்து சாப்பிடும் இட்லி மற்றும் தோசை தான், இன்று பெரும்பாலான வீடுகளில்
காலை மற்றும் இரவு உணவாகி விட்டது. காலையில் கெல்லாக்ஸ், மதியம் பர்கர் மற்றும் பிங்கர்
சிப்ஸ், இரவு (நள்ளிரவு) பீட்ஸா, கோக், ப்ரட் பட்டர் ஜாம் என்ற புதிய உணவு முறை ஒன்றும்
இன்று உருவாகியுள்ளது. இவற்றிற்கு பெயர் ஒரு காலத்தில் JUNK FOODS என்று கேள்விப் பட்டதாக
நினைவு. இவை எந்த காலத்தில் செரிமானம் ஆவது?
சுட்டெரிக்கும் நம் சீதோக்ஷ்ண
நிலையில், எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகள் கிட்டத் தட்ட காணாமலேயே போய் விட்டன.
நான் உண்டிருந்த கொழுப்புச் சத்து குறைவான, களி மற்றும் கூழை, உடனடியாகக் கொழுப்பைக்
கூட்டும் பனிக்கூழ் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. பன நுங்கையும், இளநீரையும் பெட்டிக்குள்
அடைக்கப்பட்ட பழச் சாறுகளும் , நீராகாரத்தையும், நீர் மோரையும் குப்பிகளில் அடைத்த
சக்கரை நீரில் வாயு செலுத்தப் பட்ட குளிர் பானங்களும், கேழ்வரகு அடையையும், பொறி உருண்டையையும்,
வற்றல்களையும் சிப்ஸ், எண்ணெயில் பொரித்த, உப்பு காரம் அதிகம் சேர்க்கப் பட்ட நொறுக்குத்
தீனிகளும் கபளிகரம் செய்து விட்டன. விளைவு தேசிய வியாதிகளாகிவிட்ட நீரிழிவு நோயும்,
இரத்த அழுத்தமும், அதன் பொருட்டு குடும்பம் குடும்பமாக நாம் உணவுடன் சேர்த்து உண்ணும்
வண்ணமயமான மாத்திரைகளும். எங்கே செல்கிறோம் எனப் புரியவில்லை.
அவை மட்டுமன்றி, வேறு
என்ன நோய் நம்மைத் தாக்கி இருக்கிறது என்ற சராசரி மனிதனுக்குத் தெரிய வேண்டிய பட்டறிவைத்
தராத படிப்பறிவு எதற்கு எனத் தெரியாமல் தான் கேட்கிறேன். தலைவலி, சளி, காய்ச்சல் எனச்
சர்வ நோய்களுக்கும் பாராசிட்டமால் என்ற சர்வ ரோக நிவாரணி ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.
அவ்வப்போது விற்பனை நிறுவனத்தார் மாற்றும் பெயரை மட்டும் சொல்லி விட்டு ஒரே மாத்திரையிலேயே
எல்லா நிவாரணங்களையும் பெறுவதென்றால் எப்படி?
சரி! மஞ்சள் காமாலையைப்
பற்றிப் பார்ப்போம். சாதாரணமாக, மஞ்சளாக சிறுநீர்
கழிக்கையில், ஒரு சாமானிய மனிதன் என்ன செய்கிறான்? முதல் நாள் சூடாக இருக்கலாம் என
நினைக்கலாம். அடுத்த நாள், மருத்துவரிடம் போகிறானோ இல்லையோ, குறைந்த பட்சம், சோறு கொண்ட
தானறிந்த சோதனையையாவது செய்து பார்க்க வேண்டாமா? கட்டுப்பெட்டிகள், பழமைவாதிகள், பட்டிக்காட்டான்கள்
என்று நகைப்புடன் கடந்து போகும் எளிய வாழ்க்கை வாழும் கிராமத்தினருக்கு இந்த அடிப்படை
பட்டறிவு இருக்கிறது. அங்கேயும் நீரிழிவு நோய் வந்து விட்டது. எனினும் தங்கள் தினசரி
வாழ்க்கையில் தங்கள் உடல் எவ்வாறு இருக்கும் என்பதையும் மாற்றங்கள் நிகழ்வதையும் உடனடியாக
கிரகித்துக் கொள்ளும் நிகழ் கால பட்டறிவும் கவனமும் அவர்களிடம் நிறைய உள்ளது.
ஆனால் நிறைய படித்து
விட்டு, நல்ல வேலைகளில், மாத சம்பளம் பெறுபவர்களுக்கு, தங்கள் உடல் மீது அக்கறை குறைந்து
விட்டதை உணர்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு சிறு மாத்திரையை விழுங்கி விட்டு வேலைக்குப்
போய்விடும் மனோபாவம், கவலையளிக்கிறது. மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் வந்தவருக்கு
ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். ஆனால், சூட்டினாலோ, வேலைப் பளுவினாலோ
இருக்கலாம் எனக் கடந்து போயிருப்பார். அல்லது ஒரு நாள், இரு நாள் பார்த்து விட்டு,
அடுத்து வந்த நாட்களில், அதையே சகஜ நிலையாக நினைக்கும் ஆபத்தான மன நிலைக்குச் சென்றிருக்கலாம்.
அல்லது பெரிதாக ஒன்றும் இருக்காது. இதற்கெல்லாம் எதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்,
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தி இருக்கலாம். அல்லது குடும்ப விழாக்கள்,
பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற முக்கிய செலவுகள் இருக்க, இப்பொழுதென்ன மருத்துவத்திற்கு
அவசரம்? கொஞ்சம் தள்ளிப் போடலாம் என்று நினைத்திருக்கலாம். அல்லது இலக்கு நிர்ணயக்கப்
பட்ட இன்றைய தொழில் துறையில், உடலைக் கூர்ந்து நோக்க நேரமின்றி, அவகாசமின்றி, விடுமுறையின்றி,
கவனிக்கப் படாமலேயே கடந்து போயிருக்கலாம்.
ஆனால், இந்த இருக்கலாம்கள் எல்லாம், எந்த
நிலையிலும் நோயின் தன்மையைக் குறைக்கப் போவதில்லை. மாறாக தீவிரப் படுத்தி, சிக்கல்
மேல் சிக்கல் சேர்த்து, மருத்துவ விஞ்ஞானத்தைத் தோற்கடிக்க நாமே செய்து கொள்ளும் ஏற்பாடுகள்
என்று, எப்பொழுது நாம் உனர்ந்து கொள்ளப் போகிறோம்.?
ஆரம்ப காலத்தில் கவனிக்காமல்
விட்டு விட்டு, இறுதிக் கட்டத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்த பின், மருத்துவர்களைக் குறை கூறுவதற்கு நமக்கு என்ன உரிமை
இருக்கிறது?
வேலை வேண்டும்தான். வாழ்க்கைக்குப்
பணம் சம்பாதிப்பதும், கடின உழைப்பும் முக்கியம்தான். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? கருவியைத்
தொலைத்துவிட்டு காரியம் நிகழ்த்துவதானால் எப்படி? உடல் முக்கியம். உங்கள் குடும்பத்திற்கு
உங்கள் உயிர் முக்கியம். கவனிப்பீர்களா நண்பர்களே!?!
சேர்ந்து பயணிப்போம்.
பயணங்கள் முடிவதில்லை!
No comments:
Post a Comment