Tuesday, October 14, 2014

நான் ஒரு கதை சொல்வேன்


அந்த மயிலின் அகவல் ஆலாபனை
அகண்ட காடெங்கும் நிறைந்து வழிந்தது!

அன்னங்களற்ற குளத்துச் சகதியில்
அவசரமாய் தாகம் தணித்த களிறொன்று
பிளிரலாய் தன் பதிலை பதிவு செய்தது
புலிகள் பசியாற புள்ளினம் தேவையன்றென்று!

காடடங்கிய நேரத்தில் கண்ணியில் சிக்கிய
வானம்பாடியொன்று கூண்டுக் கம்பிகளுக்குள்
கானம் பாட ஆரம்பித்தது!

சிறு பறவை நானென்று
சிரிக்கும் சிறைக் கம்பிகளே!
நான் கடந்த தூரத்தை 
வான் அறியும்- நான்
வாழ்ந்த காடறியும் மற்றும்
என் சிறகறியும்! 

நகரத்து வீதிகளில்
நான் பறந்த காலங்களில்
நாய்களும் பூனைகளும்
நன்மாடப் புறாக்களும்
தாம் யார் என்பது மறந்து
தம் இயல்பென்பது தான் மறந்து
மனிதர் வீட்டு வாசல்களில்
மருகியிருக்கக் கண்டேன்!

மண்ணுயிர் யாவருக்கும்
தன் சுயம் அறிதல் பெரிதாம்;
உண்ணும் உணவில் இல்லை
எண்ணிய விடுதலை பெறுதல் பெரிதாம்;
இது என் வீடெனில், நற்கூடெனில்
இருந்த காடதற்கு என்ன பெயர்?
சிந்திப்பாய் நல்லுயிரே என
மாயக் குழலோன் ஒருவன்
ஓயாமல் இசைக்கக் கேட்டேன்!

கண்டதும் கேட்டதும்
எண்ணமதில் வட்டமிட
என்னை நான் உணர
வந்ததொரு சிந்தனை!

வலைகளுக்குள் சிக்குங்கால்
அலையடிக்கும் வாழ்க்கையில் என் 
சீழ்க்கை ஒலியை மறந்ததுண்டு!
சிறு கூட்டை மறந்ததுண்டு!
வலி உண்டு, வலி கொன்று
வயிற்றுப்பசி கூட மறந்ததுண்டு!
மறந்தும் மறந்தறியேன் இந்தச்
சிறகுகள் பறப்பதற்கென்று!

உணர்ந்த கணம் என்றன்
உயிர்ப்பூக்கள் பூத்தன;
சின்னஞ்சிறு சிறகுகளில்
சில சித்தாந்தங்கள் தோன்றின;
இதுவும் கடந்து போகும்;
எதுவும் நொடியில் மாறும்;
நம்பிக்கை ஒன்றை மட்டும்
நம்பி உன் சிறகை விரி!

உள்ளம் நினைத்ததை
உத்தரவெனக் கொண்டு
சிறகு விரித்த நொடி
சிகரங்கள் காலடியில்!

சொல்லிச் சிரித்தபடி வலையினின்று
மெல்ல விடுபட்ட வானம்பாடி
இது கட்டுக் கதையன்று;
விடுதலை வேர்
விழுதிட்ட கதை!
தன்னம்பிக்கை ஒளிபற்றி
தளராத முயற்சியினால்
வானம்பாடி ஒன்று
வானம் தொட்ட கதை!
எண்ணத்தில் வைத்து முன்னேறு!
என்று சிறகடித்துப் பறந்தது!

கதை கேட்ட எனக்கு
கண நேரத்தில் ஒன்று புரிந்தது!
ஆம்!
சிறகிருக்கும் பறவைகளுக்கு
சிறையென்றும் சாஸ்வதமில்லை!

No comments:

Post a Comment