நான்
அசோகவனத்தில் தவமிருந்தேன்.
அரசனாகவே என்னை
அக்னிக்கு வார்த்தாய்!
அபயம் எனக் கைகூப்பினேன்
அண்ணன் பார்த்துக் கொள்வான் என
தரையில் கிடந்த பகடையுடன்
தலை கவிழ்ந்து நின்றாய்!
அலையடிக்கும் நதியோரம் என்னை
அலைக்கழிய விட்டு விட்டு
அரசக் கட்டில் ஏறியவுடன்
அணிவித்த ஆசை மோதிரத்தையும்
அவசரமாய் மறந்து போனாய்!
அன்பு மகனை என்
அருகினில் தூங்கவிட்டு
அரண்மனையைத் துறந்து
அரசமரத்தடி சேர்ந்தாய்!
அடுப்படியில் நான்
வெந்து கிடந்தேன்
அரை உப்பிற்காய்
அறைந்து விட்டுச் சென்றாய்!
அலுவலகத்தில் நான்
அயராது உழைத்தேன்.
என் ஊதியத்தைக் கூட
எனக்கு எண்ணித்தான்
செலவுக்குக் கொடுத்தாய்!
அடுப்படியிலும் அலுவலகத்திலுமாய் நான்
இடுப்பொடிந்த வேளையிலும் உன்
சந்தேகச் சாக்கடைக்குள் என்னைச்
சதா மூழ்கடித்தாய்!
அமிலத்தால் என்னை
அபிக்ஷேகம் செய்தாய்!
அகால இரவில்
அலங்கோலப் படுத்தினாய்!
அவமானங்களால் எனக்கு
அர்ச்சனை செய்தாய்!
ஆனால் என்
தன்மானத்தைத் தட்டி
எழுப்பி விட்டாய்!
யுகங்கள் கடந்தாலும்
யூகங்களால் என்னை
நீ எரித்தாலும்
யுகங்கள் தாண்டி
கனன்று கொண்டே
இருக்கின்றது எனக்குள்
ஒரு தீப்பொறி!
அசோகவனமோ!
அயோத்தியோ!
அஸ்தினாபுரியோ!
அணையாமல்தான் இருக்கின்றது
இன்னும் அந்த நெருப்பு!
நான் பெண்!
உயிர்களை உருவாக்குபவள்!
நான் சக்தி!
உலகத்தை உய்விப்பவள்!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா!
அருமை மேடம். தொடர்ந்து எழுதுங்கள்!!!
ReplyDeleteலோகேஷ் அரவிந்தன்