உறக்கத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு
இதோ விழித்திருக்கிறது
இன்னும் ஒரு இரவு.
சன்னலுக்கு அப்பால்
சத்தமடங்கிய ஊர்,
இருள் போர்வைக்குள்
இதமான தூக்கத்தில்.
யார் கனவில்
யார் யாரோ!!
குழல் விளக்கின் துணையுடன்
குளிர் விரட்டிக் கொண்டே
இணைக்க முயல்கிறேன்
இரைச்சலில்லா மனமெங்கும்
இறைந்து கிடக்கும்
வார்த்தை மலர்களை!
சரம் வேண்டுமா?
மாலை வேண்டுமா?
தீர்மானிக்க முடியவில்லை..
இரண்டில் எது
மிக அழகென்று?
செடியில் இருந்தபோதும்
கொடியில் இருந்தபோதும்
மரத்தில் இருந்தபோதும்கூட
மனதில் ஐயம் எழவில்லை.
அழகாக இருந்தது
மலர் மலராகவே!
கோர்க்க முயல்வதால்தான்
தோற்றுக் கொண்டிருக்கிறேன் போலும்-
மலர்களைப் போல்
சில வார்த்தைகளையும்
சிற்சில வாக்கியங்களையும்!
சரி தான்!
இருந்து விட்டுப் போகட்டுமே!
இருந்து விட்டுத்தான் போகட்டுமே
அவை வார்த்தைகளாகவே!
அலங்காரத் தோரணம் கட்ட
அவதி எதற்கு?
அலுத்துக் கொள்கிறது மனம்!
அயர்ந்து உறங்கும்
அருகாமைப் படுக்கைத் தோழியை
அதிக பட்ச பொறாமையுடன்
அழைத்துப் பார்க்கிறேன்-
அசைவொன்றும் இல்லை!
இரவின் மடியில்
இறுதியாக விளங்கிற்று-
உரத்த சிந்தனையை விட
இந்த நேரம்
உறக்கத்திற்கே மிகச் சிறந்தது என்று.
இம்முறை தோன்றியது
கவிதையல்ல கொட்டாவி………!
No comments:
Post a Comment