Thursday, July 31, 2014

இரு உண்மைகள்- பயணங்கள் முடிவதில்லை



தர்மம் என்பது தேவர்களுக்கு மட்டுமே உகந்தது போலும்! பாண்டுவின் மக்களும் திருதிராக்ஷ்ட்ரனின் மக்களும் போட்டுக் கொள்ளாத பகையாளிச் சண்டையை; காந்தாரியின் மக்களும் குந்தியின் மாத்ரியின் மக்களும் மோதிக் கொள்ளாத பங்காளிச் சண்டையை மனிதர் ஈன்ற கெளரவர் கூட்டமும், தேவர்கள் பரிசளித்த பாண்டவர் கூட்டமும் நிகழ்த்தினர் குருக்ஷேத்திரத்தில். அதர்மத்திற்கு எதிரானதாய், தர்மத்தை நிலைநாட்ட நிகழ்த்தப் பட்ட போராக மாறிப் போனது மகாபாரதப் போர், எழுதியவர்களின் பார்வையில்.

தம்பியின் மனைவியை தன் மகளாக பாவிக்க வேண்டியவன் அதைச் செய்யாமல் பரிசுப் பொருளென பகிர்ந்து கொண்ட போதும், அண்ணனின் மனைவியை அம்மாவாக மதிக்க வேண்டியவர்கள் அதைச் செய்யாமல் மனைவியாக்கிக் கொண்ட போதும், இந்த அதர்மச் செயலைக் கண்டிக்காமல் ஐந்து ஆண்மக்களுக்கு, தீயில் பிறந்தெழுந்த திரெளபதியை பகிர்ந்தளித்த குந்தியின் செயற்கரிய தர்மத்தை தர்மம் என்றே சொன்னது மாகபாரத இதிகாசம்.

நண்பனுக்காக, தன் மக்களுக்காக, தானம் என்று கேட்டு வந்த எவருக்காகவும் எதையும் அளிக்கத் துணியும் மகாமேன்மையான குணம் ஒரு சூத புத்திரனுக்கு எவ்வாறு சாத்தியப்படும்? எவரையும் வெல்லும் அகிலம் போற்றும் வீரம் ஒரு சூத புத்திரனுக்குச் சாத்தியமா என்ன? தேரோட்டியின் மகன் சூத புத்திரன் கர்ணன் குந்தியாலும் தேவேந்திரனாலும் ஏன் மாயக் கண்ணனாலும் சூரிய புத்திரனென புதுக் கதையின் மூலம் தேவர் மகன் ஆனான்.

காட்டில் பிறந்த மாவீரன் பீக்ஷ்மன், கங்கையின் மைந்தனென பெயர் தாங்கி, அரியணை துறந்து நாட்டின் காவலனாக மட்டுமே கடைசி வரையில் வாழ்ந்து பிதாமகன் என்ற வெற்றுப் பெருமையில் கரைந்து போனான்.

ஆயர் குலத்தில் வளர்ந்த கண்ணன் அரச குலத்தவன் என்று அடையாளம் காணப்பட்டு ஆண்டவனென அந்தஸ்தில் உயர்ந்தான். ஆண்டவன் ஆயர் குலத்தில் பிறக்க முடியுமா என்ன?

பின்னாளில் என் தேசத்தில் சூத புத்திரர்களுக்கு " ஹரிஜன்" என்ற நாமகரணம் சூட்டப் பட்டது. ஆண்டவனின் குழந்தைகளாம்; ஆண்டவன் சூத்திரன் என்று அங்கீகரிக்கிறீர்களோ? அபச்சாரம் ஆகிவிடாதோ!

இந்தக் கேள்விகளை நான் எழுப்பினால் நிச்சயம் என்னை அடிக்க வருவீர்கள். சற்றும் பொருந்தாத பொய்க் கற்பனைகளை, அநியாயங்களை  தர்மம் என நீங்கள் உபதேசம் செய்ய மகாபாரதம் என்ற இதிகாசம் உங்களுக்குத் தேவைப் படலாம்.  ஆனால் பெண்மையை, கன்னிமையை, பிறப்பையே இழிவாகக் கூறும் ஒரு புளுகு மூட்டையைக் கதையாகக் கட்டிக் கொடுத்தால் இவற்றை என் கலாசாரம் என, என் பெருமையென  எவ்வாறு என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கு உங்களால் நிச்சயமாக நேர்மையாக விடையளிக்க முடியாது.

இறுதியாக, " இதுவும் கடந்து போகும்" என்பதோ, " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்ம்மே வெல்லும்" என்பதோ மாயக் கண்ணன் கதாபாத்திரம் மூலம் வியாசர் சொல்ல வந்த கருத்தாக இருக்கலாம். எனக்குப் புரிந்தது இரண்டு உண்மைகள் தாம்.

1. அதிகம் பெறாதீர்; அவதிப் படாதீர்!

2. அதிகம் தராதீர்; அவதிப் படாதீர்!

பயணங்கள் முடிவதில்லை....



No comments:

Post a Comment