Monday, December 26, 2011

MERRY CHRISTMAS


இன்று கிருஸ்துமஸ். தேவ மைந்தனின் பிறந்த நாள். பாவிகளையும் இரட்சிக்க வந்த பரமன் மண் மீது ஜனித்த நாள். தன்னை சிலுவையில் அறையக் காத்திருக்கும் உலகத்தைக் காக்க அன்பைச் சுமந்து வந்த நல் மேய்ப்பன் மனித வடிவெடுத்த நன்னாள்.
கிருஸ்துமஸ் தினம் என் பள்ளிக் காலத்தின் நினைவுப் புதையலில் நிச்சயம் தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்து வைத்துள்ளது. SUPPOSE CHRISTMAS, TABLEAU, XMAS TREE, STARS, SANTA CLAUS, SURPRISE GIFTS, CHOCOLATES, மந்திரக்கோல்   இவற்றுடன் குழந்தை இயேசு பிறந்த நற்செய்தியை ஒரு குழந்தை தேவதை வருடம்தோறும் சொன்னதுண்டு. சொன்ன குழந்தை நான் (நான் நான் நானேதான்). தேவதையின் வெண்ணிற ஆடை எப்பொழுதோ யாரிடமோ போய் விட்டது. சொன்ன தேவதை நிழற்படத்திலும் நிஜத்திலும் இன்னும் இருக்கிறாள் அப்படியே அந்த கிருஸ்துமஸ் நினைவுகளைப் பொக்கிக்ஷமாகச் சுமந்து கொண்டு. 
பிறப்பால் இந்துவாக இருப்பினும் சிறு வயது முதலே எல்லா மதங்களையும், எல்லா தெய்வங்களையும் எல்லா கோயில்களையும் ஒன்றாக மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறார் என் தந்தை. பிதா, சுதன், பரிசுத்த ஆவியெனக் கூறும் கிருத்துவ சகோதரர்களும், மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் கூறும் இந்து சகோதரர்களும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை எனக் கூறும் அவ்வைத் தமிழும் குறிப்பிடும் என் அப்பாவுடன் கிட்டத்தட்ட எல்லா மத ஆலயங்களையும் சிறு வயது முதலே சுற்றும் வாய்ப்பு எனக்கும் என் சகோதரர்களுக்கும் கிடைத்தது. கீதையும், பைபிளும், குரானும் எப்பொழுதும் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரிப்பதாலோ என்னவோ, பதினான்கு ஆண்டுகளாக நான் படித்த பள்ளியை நடத்தியது ஒரு கிருத்துவ நிறுவனம் என்றாலும் இயேசுவும் முருகனும் கண்ணனும் எனக்கு ஒன்றாகத்தான் தெரிந்தார்கள்.
டிசம்பர் கிருஸ்துவுக்கென்றால், மார்கழி கிருக்ஷ்ணனுக்கு. அதிகாலையின் பஜனைப் பாடல்களும், நள்ளிரவின் கிருஸ்துமஸ் கேரல்ஸ் எனும் நாம சங்கீர்த்தனங்களும் கேளாமல் விடிந்ததுண்டோ எந்த டிசம்பர்/மார்கழி நாட்களும்? அதனால் தானோ என்னவோ என் பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் மதமாற்றம் என்ற மாயையை வெகு சுலபமாகக் கடக்க முடிந்தது. இந்தத் தெளிவை உருவாக்கியதில் பெரும் பங்கு என் பள்ளிக் கால MOTHERS AND SISTERS ஐயே சேரும். SR.ஜோதி.! தலைமை ஆசிரியராகவும், நல் ஆசானாகவும், நல்ல சகோதரியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும், இருள் விலக்கிய ஒளி விளக்காகவும், ஒழுக்கத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் தானே நல் எடுத்துக்காட்டாகவும் இருந்து எங்களை நாங்களாக்கிய SR.JOTHI. MY SINCERE RESPECTS  FOR YOU SISTER. ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் இன்னும் நான் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

பகிர்ந்து கொள்வதையும், சக மனிதரை மதிப்பதையும் நேசிப்பதையும், இரை தேடுவதோடு இறையையும் தேடு என்ற மாபெரும் தத்துவத்தையும் IN THE NAME OF THE FATHER, AND OF THE SON, AND OF THE HOLY SPIRIT, நான் படித்த CHRISTIAN SCHOOLS அன்று சொல்லிக் கொடுத்தன. அதை நான் இன்றும் பின்பற்றுகிறேன்.

இன்றும் நான் நம்பும் இன்னுமொரு SENTIMENT. அன்றைய தினத்திற்கான தேவ வாக்கியமாக, அசரீரியாக வழியில் தென்படும் சர்ச் சுவர் வசனங்கள். என் எல்லா சோதனைக் காலங்களிலும், குழப்பமான சூழ்நிலைகளிலும் சொல்லி வைத்தது போல் ஏதோ ஓரிடத்தில் தோன்றும் “பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற வாக்கியம்.

இதையெல்லாம் தந்த இயேசுபிரானின் பிறந்த நாளை குதூகலமாகக் கொண்டாடிய காலங்கள் உண்டு. ஆனால் மகிழ்ச்சியான இந்த நாளில் நீ ஏன் விபரீதமான முடிவை எடுத்தாய் அறிவொளி? எத்தனையோ அழகான கிருஸ்துமஸ்கள் வந்தாலும், என் பால்ய கால நண்பனே, உன் மறைவுக்கான அதிர்ச்சியுடன் அழுகையுடன் விடிந்த அந்த கிருஸ்துமஸ் தினத்தை மறக்க முடியாமல் தான் கழிகிறது ஒவ்வொரு டிசம்பர் 25ம். ஒரு சிறந்த நிர்வாகியாகவும் கவிஞராகவும் இருந்த உன் தந்தை இப்பொழுதும் வீட்டிற்கு வருகிறார் என் தந்தையின் நண்பராக மட்டுமல்ல, என் நண்பனின் தந்தையாகவும். தற்கொலை எதற்கும் முடிவல்ல என்று ஆழமாக எனக்கு உணர்த்தியது நீ தான். அதை நான் எப்பொழுதும் எல்லாரிடத்திலும் சொல்லி வருகிறேன். முடிந்த வாழ்க்கையை திருத்தி எழுத முடியாது. நம்மை நாம் திருத்திக் கொள்ளலாம், நாம் மற்றவர்களையும் திருத்தலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை அந்த கிருஸ்துமஸ்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தது. ஆண்டுகள் ஓடிவிட்டன. சோகங்களும் மெதுமெதுவாக.

எனக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்கள் ஒளிர நான் நடந்து போகும் வழி எங்கும் அன்பின் வெளிச்சம் விரிகிறது அனைவரின் வாழ்விலும் குழந்தை இயேசுவின் பிறப்பு புதிய வெளிச்சத்தையும், புன்னகையையும் நிச்சயம் விதைக்கும் என்ற உன்னத செய்தியோடு. எழுத்தாளர் திரு. பவா செல்லதுரை அவர்களின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதையின் இறுதியில் வருவதுபோல் தாயும் சேயும் நலமும் பூரண நலம் என்ற மகிழ்ச்சியின் செய்தியோடு.
MERRY CHRISTMAS.

1 comment: