Wednesday, March 7, 2012

பெண்ணியம் பேசு!!

பெண்ணியம் பேசு என்கிறாய்!
என்னைப் பற்றி நானே
என்ன பேசுவது என்கிறேன்!
உன்னைப் பற்றிப் பேச
உன்னையன்றி யார் வருவார்?
தாமதிக்காதே பெண்ணே!
தரப்படாத ஒதுக்கீடுகள்,
நிரந்தரப்படாத கெளரவம்,
நித்தம் காயப்படும்
உன் சுயம்!
இது ஏதுமறியாமல்
இருட்டில் இருக்கும்
அந்த சகோதரிக்காகவாவது
பெண்ணியம் பேசு!
உன்-னியம் பேசு என்கிறாய்!
நான் எதைப் பேசுவது?

என் நடை முதல்
உடை வரை
எல்லாவற்றையும் வரையறுத்துவிட்டு,
என் முதல் வரி முதல்
முகவரி வரை
நீயே எழுதி
வாசிக்கச் சொல்லி விட்டு,
என்னைப் பற்றிப் பேசு என்றால்
என்ன நான் பேசுவது?
என் எல்லாமும் ஆனவன்
என என் எல்லாவற்றையும்
நீயே கைப்பற்றிக் கொண்டால்,
எதைக் கொண்டு நான்
என் வாழ்க்கையை வாழ்வது?
கேள்விகள் எழாமல்
பார்த்துக் கொள்கிறாய்
சாமர்த்தியமாய் எப்பொழுதும் போல்!

பாதையோர டீக்கடை முதல்
பாராளுமன்றம் வரை
பரபரப்பாக விவாதிக்கப் படும்
33% இட ஒதுக்கீடு இன்னும்
இவ்வாறாகத்தான் இருக்கின்றது.
காசோலையில் கையெழுத்திடவும்,
சாலை முக்கெங்கும்
வாழ்த்து விளம்பரங்களில்
கணவர்களுடன் கைகூப்பிச் சிரிக்கவும்,
சால்வை போர்த்திக் கொண்டு
விழா மேடைகளில்
புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் என
இட ஒதுக்கீட்டையும்
பெண்ணின ஒதுக்கீட்டையும்
பேணிப் பராமரிக்கிறார்கள்
பெண் ஊராட்சித் தலைவர்கள்!

இடித்துக் கொண்டு நகரும்
பேருந்து சக பயணி முதல்
இருக்கும் ஒரு
மகளிர் பெட்டியையே
பெண்டிருக்கு ஒன்றென்றும்
முதியவர் மற்றும் ஊனமுற்றவர்க்கு
மற்றொன்று என்றும்
இரு பெட்டிகளாக்கி
இருமாப்புடன் வரும்
புகைவண்டி அலுவலர் வரை
எல்லோரும் தான் தருகிறார்கள்
பெண்ணுக்கான தனி மரியாதை!

பொருமல்களுக்கும்
பொருளாதார நெருக்கடிக்கும்
அலுவலகத்துக்கும்
அடுப்படிக்கும்
கண்களால் காவு வாங்கும்
காமுகக் கணவான்களுக்கும்
கையெழுத்திட மட்டும்
கற்றுக் கொடுக்கப்படும்
கல்வி உரிமைக்கும் என
எதற்கும் தெளிவான தீர்வில்லாமல்
எதற்கு இந்த மகளிர் தின கொண்டாட்டங்கள்!
சுதந்திரம் போல்
இதுவும் அரசியலே! அறிக!
பெண்ணியம் பேசி
உன்னை நீயே
ஏமாற்றிக் கொள்ளாதே!
பெண்ணே யோசி!
கண்ணைத் திற!
உன்னை உணர்!
பெண்ணாய் வாழ்!
மகிழ்வாய் இருக்கும்
ஒவ்வொரு தினமும்
மகளிர் தினமே!

No comments:

Post a Comment