Wednesday, April 11, 2012

யாருக்கும் வெட்கம் இல்லை!


எங்கே ஓடிக் கொண்டிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இலக்கில்லாததொரு ஓட்டம். நான் சொல்வது எண்களாலான வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் , வருடாந்திர இலக்கல்ல! இந்த விடியலுக்கான, இன்றைய தினத்திற்கான, இன்றைய உயிர்த்திருப்புக்கான உலகத்திற்கான நம் இலக்கு. எந்த இலக்கு அடையப்பட்டதோ இல்லையோ, ஒவ்வொரு ஆலய வாசலிலும், ஒவ்வொரு தொடர்வண்டி கடக்கும் ரயில்வே கேட்டிலும், ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தாண்டி விற்பனை பிய்த்துக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு அரசு நிறுவனத்தில். கல்வித்துறையா? கலால்வரித் துறையா? கட்டுமானத் துறையா? என்றால் அனைத்துக்கும் ஒரே பதில் “இல்லை” என்பதுதான்.

அந்த ஒரு நிறுவனம்,…………………………… மக்களுக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு, தம் குடிமக்களுக்காக நடத்தும் “மதுக் கடை”. இந்த வெட்கங்கெட்ட ஈனச்செயலுக்கு பட்டுக் குஞ்சம் வைப்பது போல் அருகில் அரசு அனுமதி பெற்ற பார் வேறு. இது பாருக்குள்ளே நல்ல நாடா? BARக்குள்ளே நல்ல நாடா? அனுமதிக்கப்பட்ட பாரில் அகில உலக அரசியல் பேசும் அனுபவசாலிகளுக்கே வெளிச்சம். அப்பா அம்மாவிடம் பெற்ற புத்தகம் வாங்கும் காசை அசிங்கமான ஒரு கடை வாசலில், அசிங்கமான ஒரு கூட்டத்தின் நடுவில், அசிங்கமான வெட்கங்கெட்ட முகத்துடன் கை நீட்டி வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் பறக்கும் மாணவர்களைப் பார்க்கையில் அடிவயிற்றில் நாளைய பாரதத்தைப் பற்றிய பயம் உருள்கிறது. எட்டு அல்லது ஒன்பதாவது படிக்கும் ஒரு பள்ளி மாணவன் தொடர்வண்டி நிலையத்தில் போதையில் தள்ளாடி நிற்கையில் பகீர் என்கிறது.

ஒரு அயர்ந்த நாளின் முடிவில் இரவு 9.45 மணிக்கு பேருந்து நிலையத்தில் இறங்குகையில், என்னைக் கடந்து ஓடிய ஒரு கூட்டம் பார்த்து சற்று அதிர்ந்து நின்றேன். அவர்கள் சென்றடைந்த இடம், பாதி க்ஷட்டர் இறங்கிய நிலையில் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் TASMAC மதுக்கடை. சார்! சார்! என உள்ளே நீளும் கைகள். இவர்களுக்கு இன்று நாளை என்றெல்லாம் ஏதேனும் இருக்குமா! உள்ளுக்குள் அதிர்ச்சி அலைகள். சற்று கடந்தால் கழிவறைச் சுவர் அருகே கழிவோடு கழிவாக மற்றும் ஒரு குடிமகன்.
நான் யாரை நோக்கிக் கை காட்ட முடியும். குடிமகனை நோக்கியா? குடிக்க ஊற்றிக் கொடுக்கும் அரசை நோக்கியா?
ஒரு வீதி முடிவதற்குள் இரு மருங்கிலும் குறைந்தது மூவிரண்டு ஆறு கடைகளையாவது குறிக்கோளற்ற குடிகாரர்களுக்காகவே அரசு திறந்து வைத்திருக்கிறது. விற்பனை செய்து கொண்டிருப்பவர்கள் MSc, MPhil, MA, MBA படித்த பட்டதாரிகள். அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறதா? வேறு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறதா? எனத் தெரியவில்லை. சற்று பலவீனமானவர்களுக்கு இந்த வேலை கிடைத்திருக்கும் குடும்பங்களைப் பார்க்கிறேன். வேலைக்கும் பயனில்லாமல் வீட்டுக்கும் பயனில்லாமல் சீரழிந்து நிற்கிறது ஓர் இளைஞர் சமுதாயம். யாரைச் சொல்லி நோவது?

இன்றைய சமுதாயம் நேற்றைய உலகத்தால் தவறென உணரப்பட்ட சிலவற்றை எல்லோரும் கொண்டாட வேண்டிய கலாசாரமாகவே மாற்றி விட்டிருக்கிறது. அவற்றில் போதையும் மதுப் பழக்கமும் கொண்டாட்டத்தின் அங்கமாகவே மாறிவிட்டன. புரையோடிக் கொண்டிருக்கும் என் சமூகம் சீரழிவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அறிவுரைகள் அர்த்தமற்றவைகளாக கருதப்படுவதும் இன்று கலாசாரமாகி விட்டது. எங்கே செல்லும் இந்தப் பாதை?
மனம் நிறைஆதங்கத்துடன்….

No comments:

Post a Comment