Saturday, September 29, 2012

பால பாடம்



எப்படி பார்த்தாலும் அழகாகவே இருக்கிறது
எந்த கட்டாயத்திற்குள்ளும் சிக்கிக் கொள்ளாத
சிக்கல்களற்ற சிறு குழந்தைகளின் உலகம்;
எந்த தருணத்திலும் எப்படி பார்த்தாலும்
அழகாகவே இருக்கும் அவர்களைப் போலவே!

கடவுளின் தலைமுடியைக் கலைத்துப் போவதில்
காற்றுக்கும் கூட சம்மதம் இருப்பதில்லை என்பதால்
தூக்கத்தில் புரண்டு விழித்தாலும்
கலைவதில்லை அவர்களின் தலைமுடி;

கோட்டுவாய் கோடிட்ட இதழோரங்களில்,
கண்களில், கன்னக் கதுப்புகளில்
விரைந்து வந்து ஒட்டிக் கொண்டு
சிறை பிடிக்கும் சிரிப்புச் சிதறல்களில்
விடிந்து விடுகின்றது சுறுசுறுப்பாய்
பிடிவாதம் விடுத்து எந்த தினமும்!
விழித்தெழுந்ததும் ம்ம்ம்ம்மா……..
எனும் உறக்கப் புள்ளிகளைத் தாண்டி
எட்டியே பார்ப்பதில்லை எந்த சோம்பலும்-
எழுந்து கொள்கின்றது உடன் சூரியனும்;

வடிவற்ற வட்டங்களோ! கட்டங்களோ!
வண்ணத் தெளிப்புக்களோ!
வரைய வரைய வளர்ந்து
விரிந்து கொண்டே போகிறது
எல்லையற்ற எண்ணங்கள் தாங்கும்
எளிமையான அவர்களின் உலகம்,
கலங்கப்படாத அவர்களின் கற்பனையிலும்,
கை விரல்கள் கிறுக்கிய காகிதங்களிலும்;
கிறுக்கல்கள் என்பதும்
காகிதங்கள் என்பதும்
நமக்குத் தானே!
மெதுவாகத்தான் புரிகிறது!!

சிறு சிறு பிணக்குகள்;
ஒரு மிட்டாயில் சரியாகிவிடும்
சண்டை சச்சரவு கணக்குகள்;
கண நேரத்தில் கனிந்து விடும்
கைப்புச் சுவை காய்கள்;
வாழ்க்கை இத்தனை எளியதா?
வளர்ந்து கொண்டே போகிறது
வியப்பின் கடற்பரப்பு!

மகிழ்ச்சியின் சூட்சுமம் மன்னிப்பு!
மழலையில் நாம் கற்று மறந்த
பால பாடம் அரங்கேறுகையில்,
பெருமூச்சு மட்டுமே எழுகிறது,
வன்மம் தொடாத வாழ்வு
ஏன் எல்லா வயதிற்கும் வாய்க்கவில்லை?
என்ற ஏக்கத்தின் கேள்வியுடன்!!!!!

No comments:

Post a Comment