Tuesday, November 13, 2012

தீபாவளி வாழ்த்துக்கள்


மாலை மணி ஆறு. விழாக்கோலம் பூண்ட காஞ்சிபுரத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்குப் புறப்படுகிறேன். வழியெங்கும் கூட்டம். பட்டாசுக் கடைகளிலும், துணிக் கடைகளிலும், பலகாரக் கடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் என எங்கெங்கும் கூட்டம். அலுவலகத்தின் அவசரத்தை ஒரு நாள் தள்ளி வைக்க அவகாசம் கிடைத்ததற்கே, அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு என்னைப் போன்ற ஒரு கூட்டம், மனதில் கையில் பையில் இனிப்புடன் வீட்டை நோக்கி.

இன்றைய விடியலை நினைத்துக் கொள்கிறேன். தவில், மிருதங்கம், மேளம், கஞ்சிரா, தப்பு, மேற்கத்திய ட்ரம்ஸ் என அனைத்து விதமான அடிகள் வாங்கியும் அதிர வைக்கும் இசைக்கருவிகளையும் நினைவுபடுத்தியவாறு, அன்மையிலும் தொலைவிலுமாக கேட்கும் பட்டாசு வெடிச் சத்தங்கள் காதைப் பிளந்தவாறு காலையை விடிய வைத்தே விட்டன . சர வெடிகள் தொடர்ச்சியாய் வெடித்து அமர்க்களப் படுத்திக் கொண்டிருக்க, என் விடுதியின் பின்புறத்தில், ஒற்றை மிளகாய் வெடி சத்தம் வேறு. எட்டிப் பார்க்கையில், வெட்கத்துடன் சிரித்து ஓடினான் பின்வீட்டு சிறுவன். ஓ! இன்று தீபாவளி!

 வெகு இயல்பாக, என் வலது கரத்தை நோக்கின கண்கள். வெளிர்பழுப்பும் கருப்புமாக மாறாத தழும்பு ஒன்று, தீபாவளி வாழ்த்துக்கள் காஞ்சனா என்றது. பள்ளிப் பிராயத்தில், அதிகாலையில் தலையில் எண்ணெய் வைத்ததும் வைக்காததுமாக, கையில் மத்தாப்புடன், யார் முதலில் செல்வது என்று போட்டியிட்டவாறு, பாதி திறந்திருந்த கதவில் (அப்பொழுதுதானே யாராவது ஒருவர் மட்டும் முதலில் வெளியே போக முடியும்!!), நானும் தம்பியும் வெளியேற நடத்திய யுத்தத்தில் கிடைத்த வீரத்தழும்பு! விம்மலும், விசும்பலும், ஏகப்பட்ட எரிச்சலுடனுமாக கடந்த அந்த தீபாவளித் திருநாளுக்காக இன்று மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த தழும்புதான், என்னை இன்னும் என் பால்யத்துடன் பிணைத்து வைத்திருக்கிறது.  அன்று எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை, ஆனால் சிறப்பான தீபாவளிக் கொண்டாட்டமாகத்தான் இன்றும் நினைவில் நிலைத்திருக்கிறது. நீல நிறத்தில், முக்கால் கை வைத்துத் தைத்திருந்த, அந்த தீபாவளியின் புத்தாடை, இன்றும் நினைவில் மகிழ்ச்சியுடன் நிழலாடுவதற்கு, அன்று அந்த மேல் சட்டையின் கைப்பகுதி படும் போதெல்லாம் எரிச்சலையும், வலியையும் உண்டாக்கி ரணகளப்படுத்திய இந்த கம்பி மத்தாப்புக் காயத் தழும்பே காரணம். வடுக்கள் எல்லா சமயங்களிலும் வலியை மட்டுமே நினைவுறுத்துபவையல்ல, வற்றாத பால்ய நதியின் கரம் பிடித்து நம்மோடு அழைத்து வருபவையும் கூட என்பதற்கு, இந்த தழும்பு ஒரு எடுத்துக்காட்டு.

வட இந்தியாவில் பத்து தினங்களுக்குக் குறையாமல் சிறப்பாக கொண்டாடப் பட்டாலும், தென்னிந்தியர்களுக்கு பொங்கல் போன்றதொரு எல்லோரும் கலந்து கொள்ளும் கொண்டாட்டமாக தீபாவளி இருந்ததில்லை. தீமை அழிந்து, நன்மை பெருகும் நாள் என்று சொல்லிக் கொண்டாலும் இங்கு, குறிப்பாக தமிழர்களுக்கு இது குழந்தைகளின் மகிழ்ச்சி சார்ந்த விழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆகவே தீபாவளி என்றவுடன், பால்ய கால நினவுகள் வந்து கோலாட்டம் போடத் தொடங்கி விடுகின்றன.

தீபாவளி என்றால் நினைவிற்கு வருபவை, பட்டாசு, அதை வெடிக்க விடாமல் சதா தூறிக் கொண்டே இருக்கும் மழை, புத்தாடை, அம்மா செய்யும் முறுக்கு, எள்ளடை, அதிரசம், அப்புறம் முக்கியமாக எண்ணெய் குளியல். எத்தனை பேருக்கு நூரு வயது கடந்த பிறகும் தெம்பாக இருக்கும் தங்கள் பாட்டனார் கையால், தீபாவளியன்று வழிய வழிய, தட தடவென்று தலையில் தாளம் தட்டியவாறு எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் கொடுப்பினை கிடைத்திருக்கும் எனத் தெரியவில்லை. எங்களுக்கு வாய்த்திருந்தது. எண்ணெய் தேய்த்து முடித்தவுடன், குளியலறைக்குச் சண்டை. வெளியில் அணையாத விறகடிப்பில் வெந்நீர் ஆவி பறக்க கொதித்துக் கொண்டிருக்கும் காட்சி நினைவில் கொண்டு வரும் ஆவலை, இன்றைய பொத்தான் அழுத்தி சூடேற்றி, குழாயிலும் க்ஷவரிலும் பெற முடியவில்லை. நான், அண்ணன், தம்பி என ஒவ்வொருவராக அம்மாவிடம் சீயக்காய் தேய்த்துக் கொண்டு, முதுகு தேய்த்துக் கொண்டு, அம்மா! கண் எரியுதும்மா! என்றவாறு குளித்து முடிப்போம். நாங்கள் குளியலுக்குக் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, பாட்டிகள் சமையலில் தீவிரமாகி விடுவார்கள். எத்தனை கோடி இட்லி சுட்டாய் அம்மா? என்று தம்பி கிண்டல் செய்வதுண்டு. ஆனால், எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே தயாராகு சமையலாக அது இராது. அந்த காலத்திலெல்லாம், இது போன்ற பண்டிகைக்குத் தான் எங்களுக்கு தோசையே கிடைக்கும் என்றவாறு, அடுப்பில் ஆயம்மா தோசை வார்த்தது வார்த்தவாறே இருப்பார். அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் தோசையும், அடுப்பில் கொதிக்கும் கறிக் குழம்பும், சுடச் சுட எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் வடையின் வாசமும் பசியை அநியாயத்துக்குத் தூண்டி விட்டாலும், அக்கம்பக்கத்து சிறுவர்களுடன் பட்டாசு வெடிக்கும் ஆட்டத்தில் தீவிரமாகியிருப்போம். மழையில் தரை நனைந்திருக்கும் என்பதால், வீட்டு வாசல், மதில் சுவர், முட்செடியின் கிளைகள் என எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் விதவிதமாக பட்டாசு வெடிப்போம். அதிலும், மிளகாய் வெடி, மூலவெடி, லக்ஷ்மி வெடி, ஊசி சரவெடி, பூண்டு வெங்காய வெடி ஆகியவை வெடிப்பவர்கள் மகாதீரர்களாக எங்களுக்குள்ளாகவே ஒரு நினைப்பும் மிதப்பும். சிறுவர்களுக்கானவை மத்தாப்புகளும், பூச்சட்டிகளும், சங்கு சக்கரங்களும், பாம்பு மாத்திரைகளும். எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியே பிரதானமாக இருந்த நாட்கள் அவை.

 குளியல் முடித்துவிட்டாலும், சாமி கும்பிட அப்பா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கும் தருணங்களைக் கூட வீணடிக்காமல், பட்டாசு வெடித்து வீர தீர சாகசங்கள் புரிந்த காலமது. ஆமாம்! இன்று போல் நடிகர் நடிகையர் பேட்டிகளுடன் கழிந்து போகும் தொலைக்காட்சித் தொல்லைகளற்ற நிஜமான சிறுவர்களின் கொண்டாட்டத்தை ஏற்றுக் குதூகலித்த தீபாவளிக்கள் அவை.

காலையிலேயே வாழ்த்துச் சொல்ல, பார்த்துப் பேச வரும் பிரமுகர்களைச் சந்தித்து விட்டு, அப்பா வந்து குளித்துவிட்டு, சாமி கும்பிட எங்களுக்கு அழைப்பு வருகையில் தான் பசி எட்டிப் பார்க்கும். எல்லா உணவு வகைகளும் சாமி அறையில் அடுக்கி  வைக்கப் பட்டு, தேங்காய், பழம், ஊது வத்தி மணக்க, தாத்தா கற்பூரம் ஏற்றுவார். நாங்கள் பாடும் கந்தர் சக்ஷ்டி கவசமும், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் பாடலுமாக பூஜை தீபாவளியை இன்னும் அழகாக்க, சாமி கும்பிட்டு விட்டு. வரிசையாக இலை முன் சாப்பிட அமர்வோம். அம்மா பரிமாற அனுபவித்து உண்ட அந்த நாள் ஆயம்மாவின் தீபாவளி விருந்தினை விஞ்ச இன்று வரை எந்த பெரிய உணவகத்தாலும் முடியவில்லை. நாங்கள் உண்டு முடித்து விட்டாலும் ஆயா, ஆயம்மா, அம்மா மூவரும் சமைத்தவாறும், வீடு தேடி வரும் கிராமத்தினருக்கும் அறிந்த தெரிந்தவர்களுக்கும் உணவளித்தவாறே இருப்பர். தாத்தா ஆசிரியராக வேலை பார்த்ததாலும், அப்பா வங்கி அதிகாரி என்பதாலும், நிறைய பார்வையாளர்கள், விருந்தினர்கள் என வந்தவாறிருக்க, ஓய்வில்லாமல், பெண்மணிகள் மூவரும் பரபரத்துக் கொண்டிருப்பர். இடையில் எங்கள் மூலம் அக்கம் பக்கத்து வீடுகளுக்கு இனிப்பு பலகார வினியோகங்கள் வேறு. மற்ற வீட்டு சிறுவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தவறிருப்பார்கள்.

விருந்து முடிந்து, தாத்தாக்களிடமும், அப்பாவிடமும் காசு பெற்றுக் கொண்டு, மீண்டும் பட்டாசு வெடிக்கலாம் என்றால், மழை பிடித்துக் கொள்ளும். என் சிறு வயது தீபாவளிகள் ஒண்ரு கூட மழை இல்லாமல் கழிந்ததாக எனக்கு நினைவே இல்லை. அற்புதமான நாட்கள் அவை. வெராந்தாவில், காத்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு, சோதிடம் பார்த்து முடித்து விட்டு தாத்தாவும் வந்து சேர்ந்து கொள்ள, மாலையில் அனைவரும் எங்கள் பூர்வீக கிராமத்திற்கு பேருந்து ஏறுவோம். பெரியப்பாக்கள், அத்தைகள், அவர்கள் குழந்தைகள் என பட்டாசு வெடித்து, புத்தாடைகள், பலகாரம் பரிமாறிக் கொண்டு மழையையும் தீபாவளியையும் கொண்டாடி முடித்து, பெரியப்பா கையில் கொடுக்கும் ஒரு ரூபாயுடன் அழுகையுடன் தூங்கியவாறு பயணித்து வீடு சேர்கையில் கையில் ஒரு ரூபாய் இருக்காது. பேருந்தில் தொலைந்த அந்த ஒற்றை ரூபாயைப் போலவே தீபாவளியின் பரவசம் இப்பொழுது தொலைந்து விட்டது. மழை இல்லை, மழலையின் மகிழ்ச்சியில்லை, சிறுவர்கள் தொலைக்காட்சியின் திரை போலவே பெரியவர்களாகி விட்டார்கள். ஆனாலும் நான் நம்பிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் போலவே, எங்களைப் போலவே, எல்லாக் காலங்களிலும் எல்லோருக்கும் கிடைக்கும் நல்ல தீபாவளி பால்யத்தின் பசுமை நினைவுகளுடன் என. கிடைக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

மத்தாப்புக்களும், சங்கு சக்கரங்களுமாக என் ஜன்னலுக்கு வெளியே கடக்கின்றன, மின்வெட்டில் இருள் போர்த்திய ஊர்கள். தீபாவளியை வரவேற்க ஈர வாசல்களில் கோலமிட்டுக் கொண்டிருக்கின்றனர் பெண்கள். தீபாவளி களை கட்டத் தொடங்கிவிட்டது. எல்லோருக்கும் விடியும் என்ற நம்பிக்கையின் வேர் கிளைத்துப் பெருகி தன்னை நீட்சித்துக் கொண்டே போகின்றது. மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். எல்லோருக்கும் நிச்சயம் விடியும். கரிசல் காடுகளில் வானம் பார்த்துக் கிடப்பவனுக்கும், கடலின் மேல் நீர் பாவி வலை போட்டுக் காத்துக் கொண்டிருப்பவனுக்கும், பாலையில் நீர் தேடிக் கொண்டிருப்பவனுக்கும், நாடற்ற உறவுகளற்ற ஏதிலிகளாக ஏங்கி வலிகளுடன் விழிப்பவர்களுக்கும், எளியவர்களுக்கும், வறியவர்களுக்கும், எல்லோருக்கும் வாழ்வில் வெளிச்சம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. எல்லோருக்கும் வரும் ஒரு அற்புதம் செய்யும் தீபாவளி. மீண்டும் பிரார்த்துக் கொண்டவாறு வீட்டுக்குள் நுழைகிறேன். அண்ணன் வாங்கி வைத்த பட்டாசுப் பெட்டிகள் வரவேற்கின்றன. நாளை பிறக்கும் நல்லதொரு தீபாவளி. கொண்டாட நேரம் அனைவருக்கும் வரும் என்ற நம்பிக்கையுடன் பையையும் கவலைகளையும் கழட்டி வைத்துவிட்டு, இப்பொழுது உறங்கப் போகிறேன்.

பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடுங்கள். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment