Monday, November 5, 2012




ஒரு மழை இரவு முடிந்த அதிகாலைப் பயணம் எப்பொழுதும், அதிகப்படியான அழகுடன் விரிந்து கொண்டே செல்கிறது, கரடுமுரடான கட்டாந்தரையாக இருந்தாலும், கான்க்ரீட் சாலையாக இருந்தாலும், சுத்தமாக, ஈரமாக, பசுமையாக, வெம்மையற்ற அதீத தன்மையுடன், வெயிலற்ற அற்புதமான வெளிச்சத்துடன், அம்மாவின் அன்பைப் போலவே!!!!!! எத்தனை மேடு பள்ளங்கள், எதிர்பாராத வளைவுகள், திருப்பங்கள், மிதிவண்டிகளில் சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் பள்ளிச் சிறுமிகள், வே,லைக்கு விரையும் பெண்கள், வாசல் பெருக்கும் பெண்கள்,, தண்ணீர் குடங்கள் சுமந்து செல்லும் பெண்கள், பருப்பு களைந்து கொண்டிருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு தலை பின்னிக் கொண்டிருக்கும் பெண்கள், காய்கறிகளை தலைச் சும்மாடாக தூக்கிக் கொண்டு, கூவிக் கூவி விற்றுச் செல்லும் பெண்கள், கையில் வாளிகளுடன் தயிர் மா என்று வாசல்களில் நிற்கும் பெண்கள், அலைபேசியை ஆராந்து கொண்டிருக்கும் பெண்கள், அம்சமாக அலங்கரித்துக் கொண்டு அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ, கணவனோ, யாரோ ஒருவரின், இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையை அழகுபடுத்தும் பெண்கள், கோலம் போடும் பெண்கள், பூப்பறிக்கும் பெண்கள், பெண்கள், பெண்கள், பெண்கள்!!!! பெண்கள் உயிரூட்டிக் கொண்டிருக்கும் இந்த உலகம் தான் எத்தனை அழகானது!!!


சில அதிகாலைப் பயணங்கள், ஜெய்பூரின் விடியலையும், சென்னை விமான நிலையத்தின் காலைப் பொழுதையும், கொல்கத்தா தொடர்வண்டி நிலையத்தின் முற்பகலையும், சிம்லாவின் நன்பகல் பொழுதையும், தாஜ்மகாலின் பிற்பகல் பொழுதையும், பூனாவின் மாலைப் பொழுதையும், கோவையின் இரவுப் பொழுதையும் நினைவுறுத்துவதுவதின் காரணம் ஏன் என இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை. புரியாதபொழுதிலும், இந்த பொழுதுகளை பிடித்து அனுபவிக்கிறேன், அவசர அலுவலகத்தின் முதல் கிழமையை நோக்கிய என் பயணத்தில்…..


அலுவலகத்தை நோக்கிய ஒரு அதிகாலைப் பயணம். இந்த சாலையை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பள்ளிக்கு தினமும் என்னை அழைத்துச் சென்ற சாலை. எம் மூதாதையரின் ஊர் நோக்கி பண்டிகைக் காலங்களில் என்னை அழைத்துச் சென்ற சாலை. எனக்கு நினைவு தெரிந்த காலம் தொட்டு, செப்பனிடப்படாமல், குண்டும் குழியுமாக இருந்தாலும், இந்த சாலையை எனக்குப் பிடிக்கும். வழியெங்கும் இருமருங்கும் மலர் தூவி வரவேற்க காத்திருக்கும் மகிழ்ச்சி மிகு மாந்தர் போல், கம்பீரமாக நிற்கும் புளியமரங்களுக்கிடையில், கரும் தார் சாலையில் பயணிப்பது, உங்களுக்கே பெருமகிழ்ச்சியையும் பெருமதிப்பையும், பெருமிதத்தையும் கொடுக்கும். குளிரும் குழல்விளக்கின் ஒளியுமாக விழிக்க ஆரம்பித்திருக்கும் சிறு கிராமங்களின் தேனீர் கடைகள், குளிர் காயும் பெரும் சிறார்கள். எல்லாம் இருக்கின்றன/ர், இருக்க வேண்டியவை மட்டும் சாலையோரம் சாய்ந்து கிடக்கின்றன. சாலை அகலப்படுத்துதல் என்ற பெயரில் அண்மைக் காலங்களில் ஆரம்பித்திருந்த அக்கிரமம், நேற்று வெற்றிகரமாக, நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. வழியெங்கும் புயல்களில் கூட சாயாமல். கம்பீரமாக நின்ற மரங்கள், சாய்ந்து கிடக்கும்.சோகம், மனதைப் பிசைகிறது. இதைத் தவிர்க்க முடியாதா? சாலை விரிவாக்கம், மரங்களை அகற்றாமல் சாத்தியப் படாதா?

எவரோ விதைத்த விதைகள்; எவரோ நட்டு வைத்த மரக்கன்றுகள்; எவரோ நீர் வார்த்து, வேலியிட்டு காத்து வளர்த்த மரங்கள். நன்றிக் கடனாய், எத்தனை பறவைகளுக்குப் புகலிடம் கொடுத்து, எத்தனை மாக்களுக்கும், மக்களுக்கும் நிழல் கொடுத்து, மழை கொணர்ந்த மரங்கள். எத்தனை பேருந்து நிறுத்தங்களாக, கோயில்களாக இருந்த மரங்கள். ஒரு நாள், ஒரே நாளில் வெட்டி வேரோடு சாய்க்கப் பட்டு, வெற்றிடம் விட்டுச் செல்வது மனதில் பாரம் ஏற்றிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. புதிய விதைகள் மரங்களாக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ? கசிகின்றன கண்கள். காத்திருந்து காத்திருந்து என ஜெயச்சந்திரன் உருகிக் கொண்டிருந்த பாடலின் முடிவில், பேருந்தின் இசைப் பெட்டியில், ஒலிக்க ஆரம்பிக்கின்றது, ஆத்துக்குப் பக்கம், ஆத்துக்குப் பக்கம், ஆத்தில் சுரக்கிற ஊத்துக்குப் பக்கம், யாரோ வச்ச தென்ன; இது நம்பி இருக்குது மண்ண. இது தானாக வளர்ந்த மரம் பாரம்மா! இதன் தாய் யாரு? தந்தை யாரு? கூறம்மா!! உண்மை சுடுகிறது. எல்லாருக்கும் விடியட்டும்  நற்காலை..

No comments:

Post a Comment