கனவு போல் தோன்றுகிறது.
ஆனால் கிள்ளிப் பார்க்கத் தேவையின்றி, நிஜம் என, என் கையில் இருக்கும் அறுந்த தங்கச்
சங்கிலி சொல்கிறது. மழை பெய்த குளிர் படர்ந்த நாள் முடிந்து மணி எட்டைக் கடந்து விட்ட
குளிர் இரவு என்ற போதும், பணிச் சுமை மனதை அழுத்த, சற்று நடக்கலாம் போல் தோன்றியது.
பேருந்தில் இருந்து இறங்கி, மழைநீர் குட்டைகளைத் தாண்டித் தாண்டி சாலையின் ஓரமாக நடந்து
கொண்டிருந்தேன். திடீரென பின்னால் நிழலாடியது போல் ஒரு உணர்வு. INTUITION என்ற உள்ளுணர்வு,
நமக்கு எச்சரிக்கை விடுக்குமே! அப்படி ஒரு உள்ளுணர்வு எழ, டக்கென திரும்புவதற்குள்,
என் கழுத்தில் ஏதோ ஒரு அழுத்தம். என்ன நிகழ்கிறது என்று நான் உணர்வதற்குள், புரிந்து
கொள்ள மூளை முயல்வதற்குள், வெகு அருகில் ஒரு ஆசாமி தன் வெற்றுக் கைகளை தடவிப் பார்த்தவாறு
வெறித்தவாறு பக்கவாட்டில் நின்றிருந்தான். அனிச்சையாக என் கை கழுத்திற்குச் சென்றிருந்தது.
கழுத்திலேயே, அறுந்து தொங்கியது சங்கிலி. உடனடியாக சுதாரித்துக் கொண்டு, என் வலது கையில்
சங்கிலியைப் பத்திரப் படுத்திக் கொண்டு, இடது கையில் இருந்த உணவுப் பையை உயர்த்திப்
பிடித்தவாறு உரக்க சத்தமிட்டேன். வார்த்தைகள் தெளிவாக வரவில்லை எனினும், ஆங்காரமாக
சத்தமாக, யார்கிட்ட? பிச்சுபுடுவேன் பிச்சு! என்று நான் கத்தியது, அவனை பின்னடைய வைத்தது.
தன் வெற்றுக் கைகளைப் பார்த்தவாறு, அருகிலிருந்த மதில் சுவர் எகிறி குதித்து, இருட்டிற்குள்
ஓடி மறைந்தான். அதற்குப் பின், அவன் பின் தொடர்கின்றானா, அடுத்து எதிர்பட்ட சில ஆட்களில்
தென்படுகின்றானா எனப் பார்த்தவாறு, விரைந்து தங்குமிடம் அடைந்தேன். இதைக் கண்டவாறு,
கடந்து சென்ற ஒரு மனிதர், நிதானமாக வண்டியை நிறுத்திப் பார்த்து விட்டு, கிளம்பிப்
போய் விட்டார். சமூக அக்கறை!!!!! இன்று நான் கற்றுக் கொண்டவை சில முக்கிய விக்ஷயங்கள்.
அதில் முக்கியமானது, அந்த நேரத் துணிவு, உடைமையைக் காப்பாற்றிய போதும், சில விக்ஷயங்களை
நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
உடைமையைக் காக்க முயன்று,
நம் உயிரைப் பணயம் வைத்திருந்தால்? சிந்திக்க வேண்டிய விக்ஷயம். சங்கிலியையே அறுக்க
முடிகின்ற ஆயுதங்கள் கள்வர்கள் கைகளில் இருக்கின்றன. ஆகையால் உயிர் தற்காப்பு அவசியம்.
கூடுமானவரையில் நேரத்தில்
வீடு திரும்புவது நல்லது. அல்லது தெரிந்தவர்களின் துணை நாடுவது நல்லது.
வெளிச்சமான இடங்களில்
நடப்பது சாலச் சிறந்தது.
ஆபத்துக் காலங்களில்,
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உரக்கச் சத்தமிடுங்கள்.
மின்வெட்டு சகஜமான தமிழ்நாட்டில்,
இனி முடிந்த வரையில், தங்கம் அணிந்து வெளியில் தனியே செல்வதைத் தவிருங்கள்.
எல்லாவற்றிற்கும் மேல்,
அஞ்சாதீர்கள். ஆனால் அஜாக்கிரதையாக, செல் பேசியவாறோ, கதை பேசிக் கொண்டோ நடக்காதீர்கள்.
உயிரையும் உடைமையையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நம் வாழ்க்கை
நம் கையில், பிறர் கையிலும்.
No comments:
Post a Comment