நெடுநாட்கள் கழித்து,
அலுவலகத்திற்கு இன்று காலையில் தொடர்வண்டியில் பயணம். எதிர் இருக்கையில் , தொழுநோயால்
இரு கைகளும் கால்களும் விரல் இழந்து முடமான ஒரு மூதாட்டி வந்தமர்ந்தார். இவருக்கு அண்மையில்
சேமிப்புக் கணக்கு துவக்கிக் கொடுத்து, உடல் ஊனமுற்றவர்களுக்கான உதவித் தொகையையும்
வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்று நினைவு படுத்தியது மூளை. முதல் முறை சேமிப்புக்
கணக்கு தொடங்கும் பொருட்டு, அந்த ஊரின் வணிகத் தொடர்பாளர் என்னுடன் கலந்தாலோசிக்கும்
போது, நிலைமையின் தீவிரம் புரியாமல், ஏன் அவர்களால் கையெழுத்திட முடியாது என்றால்,
கைரேகை கூடவா வைக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததே உண்மை. அரசு வழங்கும் உதவித் தொகை
வேறு ஒருவருக்கு சென்று விடக் கூடாது என்ற தவிப்பு எனக்கு இருந்ததே இதன் காரணம். எங்கே
அந்த அம்மாவைக் கூப்பிடுங்கள்! நான் பார்க்க வேண்டும் என்றேன்.
எப்பொழுதும் போல் என்
பார்வை வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகளின் முதல் இரு வரிசைகளில் தேடியது. நான் தேடிய
பெண்மணி இருக்கைகளைத் தாண்டி, வாசல் கதவுகளைத் தாண்டி, வெளியில் முக்காடிட்டு நின்றிருந்தார்.
அவங்க உள்ளே வரமாட்டாங்க மேடம் என்ற அவரின் உறவினரையும், வணிகத் தொடர்பாளரையும் நோக்கி
“பரவாயில்லை! அவரை வரச் சொல்லுங்கள்” என்றேன். மிகவும் கூச்சத்துடன் உள்ளே நுழைந்தவரிடம்,
இருந்த சிக்கல் என்னவென்று நெற்றியில் அடித்தது போல் புரிந்தது.
எந்த புத்தகத்தைப் புரட்டினாலும்,
எவரைக் கேட்டாலும், கைரேகை, கால் ரேகை என்றனர். நல்ல நேரத்தில், ஒரு மூத்த மேலாளர்,
மேடம்! நான் கொல்கத்தாவில் பணிபுரிந்த போது, அன்னை தெரசாவின் மிக்ஷினரிஸ் ஆஃப் சாரிட்டி
உடன் உள்ளவர்களுக்கு கணக்கு துவக்கிக் கொடுத்துள்ளேன். அவர்களுக்கும் வாழவும், தங்கள்
வாழ்க்கைக்காக சேமிக்கவும், செலவழிக்கவும் உரிமை உள்ளது தானே. மைனர்களுக்கு ஒரு பாதுகாவலர்
போட்டு, கணக்கைப் பராமரிக்க அனுமதிப்பது போல், அவரின் நம்பிக்கைக்குரிய உறவினர் ஒருவருக்கு
அந்த உரிமையை வழங்கலாம். ஆனால் பணம் அவருக்குச் சென்று சேர்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்
என்றார். மிகச் சிறந்த வழிகாட்டுதல் அது.
மேலதிகாரிகளுடன் உடனடியாக
கலந்தாலோசித்து விட்டு, அவ்வாறே செய்ய முடிவெடுத்து, செயலில் இறங்கினேன். அந்த பெண்மணியிடம்,
அவர் சார்பாக கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்யவிருக்கும் உறவினர் பற்றி விசாரித்துக்
கொண்டு, எக்காரணம் கொண்டும் இந்த அம்மா இல்லாத நேரத்தில், எவருக்கும் அவரின் பணத்தைக்
கொடுக்கக் கூடாது என்று வணிகத் தொடர்பாளரிடமும் வலியுறுத்தி அனுப்பி வைத்தேன். இன்று
கைகளாலோ, கால்களாலோ ரேகையோ கையெழுத்தோ இடமுடியாத இவர், தன் சார்பாக ஒருவரை முன்னிறுத்தி,
உடனிருந்து தனக்கான உதவித் தொகையைப் பெற்றுக் கொள்கிறார். தனக்கான உணவுக்கும், மருத்துவ
செலவுகளுக்கும் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை நிச்சயம் இவருக்குக் குறைந்திருக்கும்.
இரண்டு பைகளுடன் இவர்
சிரமப்பட்டு தொடர்வண்டியில் ஏறியதே இவருக்கு இன்றைய சாதனையாகத்தான் இருக்கக் கூடும்.
நாம் சாதாரணமாக, காகிதத்தைத் தூக்கி எறிந்து, நிமிடத்தில் விழுங்கி விடும் மாத்திரைகளை
இவர் எவ்வளவு சிரமத்துடன், முழங்கை, வாய், தாடை எனப் பயன்படுத்தி, பிரித்தெடுத்து,
வாயில் போட்டு, மீண்டும் தண்ணீருக்காக பிரயத்தனப்பட்டு விழுங்க வேண்டியிருக்கிறது என்பது
யோசிக்க வேண்டிய விக்ஷயமாக இருக்கிறது. இவ்வாறிருக்கையில் இவர் எப்படி தன் ரவிக்கையை,
புடவையை அணிந்து கொள்கிறார் என்பது வலியும் வேதனையும் மிகுந்த கேள்வியாகி விடுகிறது.
இவை யாவும் இவரின் அன்றாட வேலைகள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும்
வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட அவர் முகத்தில் இருக்கும் உறுதி, நம்பிக்கை. வாழ்க
மானுடம்.!
No comments:
Post a Comment