நான் பேசாமல் இருக்கிறேன்
ஆனால் மெளனம் பழகவில்லை!
நாக்கு, உதடுகள், எச்சில், காற்று
நான்கோடும் ஒட்டாமல் நழுவும் பேச்சு
மனசு முழுவதும் மண்டிக் கிடக்கும்
இந்த அடர்ந்த இரவில்
நான் பேசாமல் இருக்கிறேன்
ஆனால் மெளனம் பழகவில்லை!
நான் உறங்காமல் இருக்கிறேன்
ஆனால் விழிக்கப் பழகவில்லை!
கண்கள், இமைகள், தலையணை, போர்வை
எவையுடனும் ஒட்டாமல் உதிரும் உறக்கம்
கனவுகள் தெளித்தவாறு என்னுடன்
கட்டிலில் விழி விரித்துக் கிடக்கும்
இந்த அர்த்த ராத்திரியில்
நான் உறங்காமல் இருக்கிறேன்
ஆனால் விழிக்கப் பழகவில்லை!
பேசாமலும் உறங்காமலும் நான்
பேதலித்துப் போகும் வாய்ப்பு மட்டும்
பிரகாசமாய்த் தெரிகிறது - தூரத்து
பெளர்ணமியுடன் கண்சிமிட்டும் நட்சத்திரங்களில்!
No comments:
Post a Comment