Friday, December 27, 2019



குளமான கண்களுடன் தான் இன்றும்
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறேன்.
துளிக் கண்ணீரும் கூடாதென
எப்போதும் தாங்கி நின்றீர்களே என்னை?
கடலெனக் கண்ணீரில் கரைகிறேன்.
இப்போது,
எங்கே இருக்கிறீர்கள் அப்பா?
என்னை அழ வைத்துவிட்டு
எங்கே போனீர்கள்?

ஓய்ந்த நாளின் முடிவில்
சாய்ந்து கொள்ள உங்கள்
தோள்கள் இல்லை.
அரற்றும் இந்த மனதிற்கு
ஆறுதல் சொல்ல உங்கள்
குரல் இல்லை.
" அம்மா" என்றழைக்க மாட்டீர்களா
எனத் தெருவெங்கும் தேடுகிறேன்.
என் அழுகுரல் உங்களுக்குக்
கேட்கவே இல்லையா அப்பா?

இப்போதுதான் கிளம்புகிறேன் அப்பா
என்ற அழைப்புக்கு,
"பார்த்து வாம்மா" எனும் பாசக்குரல்
கேட்காதா என,
பேருந்து நிலையத்தில் எனக்காகக்
காத்து நிற்பீர்களா என,
குளிருக்குப் போர்த்தியிருக்கும்
யாரோ ஒருவரின் சால்வைக்குள்
இருப்பீர்களா என
தனியே இந்த இரவுகளின் சாலைகளில்
தவித்துத் தேடியவாறு
கடந்து கொண்டிருக்கிறேன் அப்பா!
துயரத்தை எங்களுக்குத்
துணையாக வைத்துவிட்டு
எங்களை விட்டு விட்டு
எப்படிப் போனீர்கள்
என்பது புரியவே இல்லை!

எங்களை நிம்மதியாக உறங்கச் செய்து விட்டு
எங்களுக்கான கனவுகளுடன்  நீங்கள் விழித்திருந்த இரவுகளை மட்டுமே
அறிந்திருக்கிறேன்.
எங்களை நித்தம் அழ வைத்து விட்டு
எவ்வாறு உறங்கிப் போனீர்கள் அப்பா!
ஒரு நொடியேனும் உங்கள்
அறிவு உறங்கியதில்லை,
அன்பு உறங்கியதில்லை,
நேர்மை உறங்கியதில்லை,
உலகிற்கான உழைப்பு உறங்கியதே இல்லை.
எனில்,
எங்களைத் தாங்கிய
உங்கள் நெஞ்சம்
உறங்கிப் போனதெப்படி அப்பா?

அப்பா...
அப்பா...
அப்பா...
உங்கள் உறஙகா இதயம
உறஙகிப் போனது எப்படி?

No comments:

Post a Comment