Friday, July 13, 2012

பயணங்கள் முடிவதில்லை V-Thaimai



ஞாயிற்றுக் கிழமை காலை.
அம்மா சமையலில் மும்முரமாக இருக்க, சுவரோரம் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு கோழிகளை சுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கோழிகளுக்கு அருகிலும் அவற்றின் குஞ்சுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பெரிய கோழிக்கு மூன்று குஞ்சுகள், அடுத்த கோழிக்கு நான்கு. வெகு ஆக்ரோக்ஷமாக இரண்டாவது கோழி பெரிய கோழியையும் அதன் குஞ்சுகளையும் விரட்டிக் கொண்டிருந்தது. சற்றே எதிர்த்து, பிறகு தன் எல்லையை மாற்றிக் கொண்டு, இடம் பெயரத் தொடங்கியது, பெரிய கோழி. இரண்டாவது கோழி பரபரப்பாக, கால்களால் ஈர மண்ணை/குப்பையைக் கிளறி விடத் தொடங்கியது. பின் தொடர்ந்த குஞ்சுகள், கிளறிய இடங்களில் வேக வேகமாக கொத்தி தத்தமது இரைகளைத் தின்னத் தொடங்கின. தாய்க் கோழி தரையைக் கிளறுவதும், அலகால் கொத்திக் காண்பிப்பதுமாக முன் செல்ல, சின்னஞ்சிறு குஞ்சுகள், தம் சிறு கால்களால் கிட்டத்தட்ட ஓடியவாறே தாயின் பாதத்தைத் தொடர்ந்து தம் உணவைக் கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. கையில் மொபைல் கேமரா இருக்க, குப்பை மேட்டையும் கோழிகளையும் நான் வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்ததை விநோதமாக பார்த்துச் சென்றனர் ஓரிருவர்.

அப்பொழுதுதான் அந்த குட்டி சந்தின் முடிவில் இரை தேடிக் கொண்டிருந்த பெரிய கோழியையும் அதன் குஞ்சுகளையும் கவனித்தேன். இரண்டாவது கோழியைப் போல் பரபரக்காமல் மெதுவாக நடைபயின்று. தன் குஞ்சுகளை வழிநடத்திக்  கொண்டிருந்தது பெரிய கோழி. காரணம் பளிச்செனப் புரிந்தது. பெரிய கோழியின் குஞ்சுகள் கொஞ்சமே கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்த படியால், அவற்றிற்கு சொல்லிக் கொடுக்கும் சிரமம் தாய்க்கோழிக்கு இருக்கவில்லை. அதன் குஞ்சுகள் மூன்றும் தாமாக குப்பையைத் தம் சிறு கால்களால் கிளறி, தம் இரையைப் பெறப் பழகி விட்டிருந்தன. ஆகையால் அந்த தாய்க் கோழி, உணவிருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக, வழி நடத்திச் செல்லும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இரண்டாவது கோழியின் குஞ்சுகளோ மிகச் சிறியவையாக இருந்தமையால், தாய்க் கோழி, சண்டையிட்டு பாதுகாத்தது, உணவு தேடிக் கொடுத்தது, எப்படி உண்பது என்பதையும் சொல்லிக் கொடுத்தது, வழி நடத்திக் கூட்டிச் சென்றது.

சட்டென விளங்கியது, அங்கிருப்பது கோழியல்ல, தாய் என்று. மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது?

மாலை!
2004ல் கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து பற்றிய பாரதி கிருக்ஷ்ணகுமாரின் ஆவணப் படத்தை நான், அம்மா மற்றும் தம்பி மூவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த சம்பவத்தின் புகைப்படங்கள் காண்பிக்கப் பட்ட போதெல்லாம் பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டேன். ஐயோ! ஐயோ! கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று மனம் கதறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் காரணமானவர்களால் எப்படி நிம்மதியாக உறங்க முடிகிறது என்று மனம் பதறியது. படத்தின் முடிவில் பாரதி கூறினார். இவற்றிற்கான தீர்வாக இன்று நமக்கு தேவைப்படுவது பரிதாபம் அல்ல! தம் குஞ்சுகளைப் பாதுகாக்க தாய்க்கோழி எப்பொழுதும் கொண்டிருக்குமே, அந்த சீற்றம்! அந்த சீற்றம் மட்டுமே தேவையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று. ஒரே நாளின் காலையும் மாலையும். கோழிகளும் குஞ்சுகளும். அம்மாவும் நாங்களும் உடன் பாரதியும்.

தாய்மையின் பரிமாணத்தை பாரதியின் பார்வையில் தரிசித்த அந்த கணத்தில் அம்மாவை அதிகம் நேசித்தேன்.

இரவு!
நீயா? நானா? நிகழ்ச்சியில் கருக்கலைப்பு சரியா? தவறா? என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. அது எங்கள் உரிமை (அல்லது) ஒரு குறைபாடுடன் பிறக்கக்கூடும் என கண்டறியப்படும் ஒரு குழந்தை பிறந்து துன்புறுவதை விட, கருக்கலைப்பு சரியே என்று ஒரு சாராரும், கரு உருவாகி ஆறு வாரங்களில் அது  உணர்ச்சிகள் பெற ஆரம்பித்துவிடுகிறது எனும் போது, உணர்ச்சியுள்ள, வலியறியும் இன்னொரு உயிரை அழிப்பது எப்படி உங்கள் உரிமையாகும் என்று ஒரு சாராரும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

சரியே என்று வாதிட்டுக் கொண்டிருந்த அணியில், ஒரு இளம்பெண்ணின் கையில் மைக் வந்தது. சார். நான் ஒரு HR MANAGER. எனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. அதற்கு பிறகு ஒரு வருடத்திற்கு எதுவும் கரு உருவாகவில்லை. என் வீட்டிலும் எல்லாரும் எனக்கு குழந்தை உருவாகவில்லை என்றே நம்பினர். நான் வழக்கமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு நாள் வழக்கம் போல் படிகளில் ஏறி என் அலுவலகம் சென்றேன். சென்றமர்ந்த சில நிமிடங்களில் தாங்க முடியாத வயிறு வலி. புரியாத வலி. என்னவென்று நான் உணரும் முன்னமே, என் சக அலுவலக நண்பர்கள் சூழ்ந்திருக்க, இரத்தமும் சதையுமாக என் சுடிதார் பேண்ட் வழியே என் கால் வரையில் வழிந்து, எனக்குள் இருந்த அந்த இன்னொரு உயிர் வெளியேறியது. என் அறியாமை என் குழந்தையை காவு வாங்கிவிட்டது. இன்று வரை நான் அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ளவில்லை. அன்று கலைந்து போன குழந்தையை நான் என் இரண்டாவது குழந்தையாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் எனக்கு இரண்டு குழந்தைகள். என்ன? இரண்டாவது குழந்தையை என் அறியாமையால் நானே இழந்தேன் என்று கண்களில் நீர் வழிய வழிய முடித்தார். 
வேலை வேலை என்று அலைபாய்ந்து தன் குழந்தையை அழித்து விட்ட ஆத்திரமும், இயலாமையும், குற்ற உணர்ச்சியும் அலைக்கழிக்க அழுதவாறு அமர்ந்திருந்த அந்த பெண்ணிடம், கோபிநாத் கேட்டார். மேடம். ஆனால் நீங்கள் HRல் இருக்கிறீர்கள். உங்களிடம் நேர்முகத் தேர்விற்கு வரும் ஒரு திருமணமான இளம்பெண்ணிடம் நீங்கள், அடுத்த இரண்டாண்டுகளுக்கு அல்லது PROJECT முடிகிறவரையில் நீங்கள் கருவுறக் கூடாது. அப்படி கருவுற்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்பீர்கள் தானே? என்றார். ஆமாம் சார்! என்றார் HR. அப்பொழுது அந்த பெண் வேறு வழியின்றி தன் வேலைக்காக, நான் அந்த கருவை அழித்து விடுவேன் என்பார் இல்லையா? கேட்கும் உங்களுக்கு குழந்தை இழந்த வலி தெரியும். பதில் சொல்லும் பெண்ணுக்கு அது எதுவும் தெரியாது. அந்த கேள்வியை நீங்கள் கேட்டே ஆக வேண்டும். இல்லையா? அப்பொழுது உங்களுக்கு எப்படி இருக்கும்? இது கோபிநாத். இளம்பெண் யோசிக்கவே இல்லை. சட்டெனக் கூறினார். கக்ஷ்டமாகத் தான் இருக்கும் சார். ஆனால் WE ARE FORCED TO ASK THAT QUESTION. AND THAT GIRL IS FORCED TO ANSWER THAT SHE WILL ABORT THE BABY என்று.

முகத்தில் அதிர்ச்சியுடன், அயற்சியுடன், சமூகத்தின் அவலம் தாக்கிய அருவருப்புடன் கோபிநாத் அவையின் நடுவில் நின்று ஆவேசத்துடன் கூறினார். இதுதான் இன்றைய நிலை. WE ARE FORCED TO ASK THAT QUESTION. வேலைக்குப் போகும் தாயான ஒரு பெண் கருவைக் கலைப்பாயா என்று கேட்க, பின்னொரு நாள் கருவுறப் போகும், அதன் விளைவோ, உணர்வோ அறியாத ஒரு பெண் கலைத்து விடுவேன் என்று கூறும் அவலம் தாய்நாடு, தாய்மொழி, தாயே தெய்வம் எனத் தாயைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் நம் நாட்டில்தான் இன்று நடக்கிறது. THAT’S THE FATE OF OUR NATION. கோபிநாத்தின் ஆவேசத்தில் இருந்த நியாயம் நெற்றியில் அடித்தாற்போல் தாக்கியது. வெட்கம்! இதற்காக இந்த சமூகம் வெட்கப் படவில்லை என்று அதிர்ச்சியாக இருந்தது. என்னை அறியாமலேயே, என் காலோடு வழிந்து குருதிப்புனலாய் கலைந்து போன அதுவே என் இரண்டாவது குழந்தை. ஆக மொத்தம் எனக்கு இரண்டு குழந்தைகள். இன்று வரை நான் அப்படித்தான் நினைத்து வாழ்கிறேன் என்ற பெண்ணின் கண்ணீர் தாய்மையின் வலியை அமைதியைக் கிழித்துக் கொண்டு சபையேற்றியது.

அப்போ எனக்கு நான்கு குழந்தைகள்! இப்பொழுது கேட்டது தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வந்த குரலல்ல. சொன்னது அம்மா! ஒரு சிறு அதிர்வுடன் அம்மாவைப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை என்னால் விளக்க முடியவில்லை என்று சொல்வதை விட, புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். எப்பொழுதோ அம்மா சொல்லியே கேள்விப்பட்டிருக்கிறேன் எனினும் அது புரியாத வயது. இப்பொழுது தெரிந்து கொள்ளும் ஆர்வமா! அம்மாவிற்கான ஆறுதலா புரியவில்லை.  அம்மாவைக் கேட்டேன். பாப்பா பிறந்து இறந்து விட்டதா? இறந்தே பிறந்ததா அம்மா? அம்மா கூறினார். பத்து மாதம். முழு குழந்தை. மலேரியா காய்ச்சலுக்கு என்று கொடுத்த மருந்தின் விளைவு, பத்து மாதக் குழந்தை இறந்தே பிறந்தது. முகமெல்லாம் கருப்பாக மாறிவிட்டிருந்தது என்றார். பையனா? பெண்ணா? அம்மா என்றேன். பையன் என்றார் அம்மா. யாருக்கு அப்புறம் அம்மா என்றேன். உனக்கு அப்புறம் தான். தம்பிக்கு முன்னால் என்றார். எனக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. அம்மாவின் வயிற்றில் எங்கள் மூவரைப் போலவே குடியிருந்த அந்த தம்பிக்காக வருத்தப் படுவதா? அவனையும் சேர்த்து எனக்கு நான்கு குழந்தைகள் எனக் கூறும் அம்மாவிற்காக வருத்தப்படுவதா தெரியவில்லை. அல்லது இதை எப்பொழுதும் எங்களிடம் காட்டிக் கொள்ளாமல், நாங்கள் மூவர் மட்டுமே என்று சீராட்டி வளர்த்த எங்கள் தாய் தந்தைக்காக பெருமைப்படுவதா தெரியவில்லை. காலையில் நான் கண்ட கோழியும் குஞ்சுகளும் நினைவிற்கு வந்தன.

ஆனால் அம்மாவின் பேச்சு என்னை முதல் முறையாக வேறு திசையில் யோசிக்க வைத்தது. பிறந்தது முதல் நான் என் வீட்டின் இளவரசி. ஒரே மகள். என் சகோதரர்களுக்கு ஒரே சகோதரி என்ற அந்தஸ்துடன் வளைய வந்தாலும், உண்மையில் என் அண்ணனுக்குத்தான் நான் சகோதரியாக உணர்ந்திருக்கிறேன். என் தம்பிக்கு தமக்கை என்பதையும் தாண்டி தாயாகவே பெரும்பாலும் உணர்ந்திருக்கிறேன். இன்னும் உணர்கிறேன் என்பது இப்பொழுதான் புரிகிறது. என் அண்ணனுக்கு நான் சகோதரியாக, சண்டைக் கோழியாக, திருத்தும் தோழியாக என பல அவதாரம் எடுத்திருந்தாலும், பால்யம் தொட்டு பெரும்பாலும் என் அண்ணன் என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய நாட்கள் தான் அதிகம். அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப் பட்டவள். 
ஆனால் சிறு வயதில் நிறைய சண்டை போட்டாலும், விவரம் அறிந்த பின், குறிப்பாக நான் கல்லூரிக்குச் சென்ற பின், என் தம்பிக்கு நான் ஒரு தாயுமானவள் என்றே உணர்ந்திருக்கிறேன் என்பது இப்பொழுது புரிகிறது. என் வருகையிலும் போகையிலும் ஒரு தாய்க் கோழியாக என் தம்பி என்னைப் பின் தொடர்கிறான். நல்ல இசை பகிர்கிறான். நல்ல இலக்கியம் கொணர்ந்து சேர்க்கிறான். அக்கா கொஞ்சம் சாப்பாடு போடேன், அம்மாவுக்கு காபி போட்டுக் கொடேன் என்று என் ஞாயிறுகளை அலுவலகத்திலிருந்து விடுவித்து, குடும்பத்துடன் இணைக்கிறான். என் தாயிடம் காண்பிக்கும் கோபத்தை, எடுத்துக் கொள்ளும் உரிமையை என்னிடமும் எடுத்துக் கொண்டு என்னையும் தாயாக உணர வைக்கிறான். இவன் என் தம்பி மட்டுமல்ல. என் மகனும் கூட. நான் பார்க்காத அந்த முதல் தம்பிக்காக செலவிட முடியாத அன்பை, பாசத்தை, சகோதரத்துவத்தை, தாய்மையை என் தம்பிக்காக நான் உணர்கிறேன். எல்லா அக்காக்களும் ஒரு வகையில் தாயாகவும் உணர்வார்களோ? உணரப்படுவார்களோ? சிந்தித்தவாறே படுக்கப் போனேன். அம்மா, அப்பா, தம்பி அனைவரும் தூங்கி விட்டிருந்தனர்.

காலையில் கண்ட கோழி மனதிற்குள் மீண்டும் நடை போட்டது. தாய்மையின் தரிசனம் கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!
சேர்ந்து பயணிப்போம். பயணங்கள் முடிவதில்லை! 

No comments:

Post a Comment