ஒரு நிகழாத பொழுதின்
மெளனம் தாங்கி
கனவுகளாய் விரிகின்றது
என்
காலை பொழுது.
முடிந்த தருணங்கள் மீண்டும்
இசைக்கப்படப் போவதில்லை
என் இசைத் தட்டில்-
எனினும்
இசைத் தட்டின்
ஒவ்வொரு சுற்றிலும்
இசையின் ஸ்வரங்களாய்
இழையோடும் உணர்வுகளில்
இடையிடையே தோன்றும்
முகங்கள் யாரென
கண்டுணர முயல்கிறேன்.
பால்யத்தின் வாசலில்
என்னுடன்
பல்லாங்குழி ஆடிக்கொண்டிருப்பது
யார்?
பரமபதமும், கண்ணாமூச்சியும்
நிலாக் கும்பலும் இன்னபிற
விளையாட்டுக்களுமாய்
என் நினைவுகளில்
விழாக்கோலம் போடுவது
யார்?
இதழின் கடையோரம்
இனிப்புத் தூவி
வந்து வந்து போகும்
முகங்களுக்கு பெயர் வைத்துப்பார்க்கிறேன்.
பெயர்கள் மறந்த போதும்
முகங்கள் மறக்காத சிலர்
நான் யார்?
என்னைக் கண்டுபிடி
எனச் சிரிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி என
பரந்து கொண்டே போகும்
பனிக் கனவு எங்கெங்கும்
பற்று கொடியாய்,
பாரம் பகிரும்
பசுந் தோளாய்,
என் புன்னகையும்
பெருஞ்சிரிப்பும்
கனவுகளும் கண்ணீரும்
மேடை ஏற்றிய
வெற்றிகளும்
பாடம் சொன்ன
தோல்விகளும் என
என் எல்லாவற்றிலும்
உடன் நின்ற
உண்மை மனிதர்கள்.
நினைவுத் திரையில்
நிழலாடும் முகங்கள்
நிறைய பேரிடம்
நான்
சொல்லாத நன்றிகளும்
கேட்காத மன்னிப்பும்
ஏராளம்……
ஏராளம்…….
இன்று வரை
கடந்து வந்த
என் வாழ்வின்
எல்லா தருணங்களிலும்
என்னுடன் பக்கம் நின்ற
என்னை பலப்படுத்திய
பெருமைப்படுத்திய
பக்குவப்படுத்திய
பத்திரமாய் பொக்கிக்ஷமாய்
பாதுகாத்துக் கொண்டுவந்த
என் நண்பர்கள்
எல்லோருக்கும்
என் நன்றிகள்!
நான்
சொல்ல மறந்த
நன்றிகள் இனியும்
சொல்லப் படாமலும்
கேட்காமல் விட்ட
மன்னிப்புகள் இனியும்
கேட்கப் படாமல் போகலாம்.
எனினும்
சொல்லாமலும் கேட்காமலும்
புரிந்து கொண்டு
என்னை நானாகவே
ஏற்றுக் கொண்ட
தோழமைக்கு
என் நன்றிகள்!
நன்றிகளால் நெய்யப் படுவதல்ல
நட்பு- எனினும்
என் நன்மைக்காக
நல்லெண்ணம் நெய்யும்
என் எல்லா
நல்ல நண்பர்களுக்கும்
என் நன்றிகள்.
தொடரட்டும் நம் தோழமை!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நட்புடன்
நான்
காஞ்சனா….
HAPPY
FRIENDSHIP DAY…………………………..
பால்யத்தின் வாசலில் என்னுடன்
ReplyDeleteபல்லாங்குழி ஆடிக்கொண்டிருப்பது யார்?
பரமபதமும், கண்ணாமூச்சியும்
நிலாக் கும்பலும் ....
- இந்தக் காட்சிகள் வாசிக்கும் போது மனதில் பளிச்சிடுகின்றன. அதென்ன நிலாக் கும்பல்....?
தொடரந்து எழுதுங்கள். - சந்திரபால்.