Thursday, August 30, 2012



காஞ்சியின் கடைக்கோடிச் சுவர் வரை
காந்தம் போல் ஒட்டிக் கொண்டுள்ளது
காற்றில் கரைந்த ஒரு பெண்ணின்
ஓராண்டு நினைவேந்தல் சுவரொட்டி!

எதிர்பார்த்தது போலவே
எந்த அரசியல் கட்சியும்
மறந்து விடாமல்
எல்லா சுவர்களிலும்!

மூன்று தமிழர்களின் உயிர் காத்த
வீரத் தமிழச்சிக்கு வீர வணக்கங்களாம்!
வீர வணக்கங்கள் இருக்கட்டும்!
இவர்களில் யார் வீரர்கள் என
வெற்றுச் சிரிப்புதான் மிஞ்சுகிறது
செங்கொடியின் சிறிய நிழற்படத்தின் அருகில்
வெட்கமின்றி பெருஞ்சிரிப்புடன் நிற்கும்
பெருச்சாலிகளின் புகைப்படம் பார்க்கையில்!

உன் தீக்குளியலை
உடனடியாகக் கண்டித்தவர்களில்
நானும் ஒருத்தி
செங்கொடி!

முத்துக்குமாரோ!
செங்கொடியோ!
ஆண்டுக்கொரு முறை
அக்னிப் பிரவேசம் செய்துதான்
தம் இருப்பை
சமூகத்தின் பால்
தம் பொறுப்பை
நிரூபிக்க வேண்டுமா என்ற
ஆயாசத்துடன் எழுந்த
கேள்வி கனக்க
அதிர்ச்சியையும்
உயிர் தியாகம்
என்ற பெயரில்
நடந்த உன் தீக்குளிப்பின் மீது
என் எதிர்ப்பையும்
உடனடியாக பதிவு செய்தேன்!

ஆனால்
ஆண்டொன்று கடந்த பின் தான்
நீ என்ன செய்து விட்டுச் சென்றாய் என்ற
நிதர்சனம் புரிகிறது செங்கொடி!

ஆட்சியும் காட்சிகளும்
மாறி விட்டன
மாறாத நிலையில் தொங்கியவாறு
அம்மூவரின் கழுத்துக் கயிறு!

குற்றச்சாட்டு எதுவாகட்டுமே!
குற்றவாளிகள் யாராகவேனும் இருக்கட்டுமே?
காலம் கடந்து வழங்கப்படும்
நீதியும் அநீதியே என்பது
நீதிமான்களுக்குத் தெரியாதா என்ன?

வாலிபத்தையும் வாழ்நாளையும்
வானுயர்ந்த சிறைச்சுவர்களுக்குத்
தின்னக் கொடுத்தவர்களுக்கு,
தம் நீட்டிக்கப்பட்ட
ஆயுள் நாளில்
பூட்டப்பட்ட சிறைக் கதவின் பின்னிருந்து
புத்தகம் எழுதவும்
ஆயிரம் மதிப்பெண்களுடன்
அரசு பொதுத் தேர்வில்
தேர்ச்சி பெறவும் முடிந்தும்,
முறையிட்டுக் காத்திருந்து கை விட்ட
குடியரசுத் தலைவரின் ஆணையையும் தாண்டி
குடிமக்களால் தாம் காப்பாற்றப்பட்டு விடுவோம்
என்ற கனவுகளுடன் காத்திருக்கும்
மூன்று தண்டனைக் கைதிகளுக்காகக்
கேட்கவில்லை நான்!

மூச்சு விடும் நாட்களையே
முழுதாய் நம்ப முடியாமல்
மூச்சு முட்ட வாழ்ந்து கொண்டிருக்கும்
மூன்று மனிதர்களுக்காக
சக மனிதருள் ஒருவராய்
சகித்துக் கொண்டு கேட்கிறேன்!
வாழ்வது யாவருக்கும்
பிறப்புரிமை இல்லையா?
அந்த மூவருக்கும்
அவர்களுக்காக உயிர் நீத்த
அந்த ஒருத்திக்கும் கூட!

அன்றும் இன்றும்
அரசியல் தலைவர்கள்
அறவே மாறவே இல்லை!
அவர்கள் அறிக்கைகளும்!
சொத்துக் குவிப்புகளும்;
நீதி மன்ற வழக்குகளும்;
அவைக்குறிப்பில் இடம்பெற முடியாத
அசிங்கமான பேச்சுக்களும்;
கட்சித் தாவல்களும்- தொடரும்
காட்சி மாற்றங்களும்;
மாறும் கூட்டணிகளும்
மாறாத ஏமாற்று வாக்குறுதிகளும்
என எதுவுமே
மாறவே இல்லை!

பொய் வாக்கையும்
மொய் பணத்தையும்
வாங்கிக் கொண்டு
வாக்குகளை விற்று விட்டு
வந்தவனின் வீட்டில்
வறுமையும் மாறவே இல்லை!

அரசியலுக்கும்-
அது சார்ந்த
காய் நகர்த்தல்களுக்கும்
அரசியல் வியாதி பிடித்த
அதி மேதாவி பேச்சுப்புலிகள் மட்டுமே
தகுதி வாய்ந்தவர்கள்!
அடித்தட்டு செங்கொடியோ
அடிமட்ட தொண்டனோ அல்ல!

பணயம் வைக்க
உன் உயிர்
பகடைக் காயா என்ன?
ஏன் யோசிக்கவில்லை செங்கொடி?
என நான் கேட்கப் போவதில்லை!
ஏனெனில் நீ
முற்றுப் புள்ளியில்
தொடங்கிய ஒரு
தொடர் புள்ளி.

உணர்ச்சி வசப்பட்டு
உயிர் தியாகம் செய்ய
நினைக்கும் மூடர்களுக்கு,
உயிர் முக்கியம் மக்களே!
உங்கள் உரிமைகளுக்குப் போராட
நீங்கள் உயிரோடு இருப்பது
முக்கியம் என
உச்சி மண்டையில் அடித்து
உண்மை புரிய வைத்த
ஊமை ஜனங்களின் பிரதிநிதி.

உனக்காக இப்பொழுது
நான் பேசுகிறேன்!
உடன் பிறப்புக்களே!
உற்றார் உறவினர்களை
உதறி விட்டு
ஊற்றிக் கொடுக்கும்
உற்சாகத் தலைவர் பின்
அணிவகுக்கும் தொண்டர் பெருமக்களே!
விழித்துக் கொள்ளுங்கள்!
உங்கள் குடும்பத்தை விடுங்கள்!
உங்களுக்காகப் பேசவேனும்
உங்கள் உயிர் முக்கியம்!

முத்துக்குமாரையும்
செங்கொடியையும்
விளம்பரப் பொருட்களாகி
வெகு நாட்களாகி விட்டன!!!
விழித்துக் கொள்ளுங்கள்!
நாளை நமதே!!!

No comments:

Post a Comment