Tuesday, July 3, 2012


என் சுயம் காயப்படும்
எல்லா தருணங்களிலும்
கண்ணீரோடோ காயங்களோடோ
நான் உன்னைத்தான் தேடியிருக்கிறேன்.
நீ உணர்ந்திருக்கிறாயா?

வருடங்கள் கடந்து
வயது பறந்தோடினாலும்
உன்னுடன் கைபற்றி
ஊர்வலம் போன
உற்சாக சிறுமியாகத்தான் நான்
இன்னும் உணர்கிறேன்.
நீ உணர்ந்திருக்கிறாயா?

ஆண்டுகளொடு  என்
ஊண் வளர்ந்தது;
என் அறிவும்
ஞானச் செறிவும்
கூட வளர்ந்து விட்டதாக
உலகம் உணர்கிறது..
இத்தனைக்குப் பின்னும்
இன்னும் நான்
சிறுமியாக உணரும்
தருணங்களை நீ
மட்டுமே –
நீ மட்டுமே
உணர்ந்திருக்கிறாய்!
என நம்புகிறேன்.
நீ உணர்ந்திருக்கிறாயா?

என் காயங்களுக்கு
களிம்பு தேடி
நான் வெளியில்
அலைந்த நாட்களிலெல்லாம்
நீ
மருந்தோடும்
மயிலிறகோடும்
அதை விடவும்
மென்மையான எனக்கான
உன் பாசத்தோடும்
வார்த்தைகள் சொல்லாத
அன்பின் அமைதியுடன்
காத்துக் கொண்டிருப்பதை
நான் உணர்ந்தே
இருக்கிறேன்- வெளியில்
காட்டிக் கொள்ளாத போதும்.
இது ஊருக்குப்
புரிந்தென்னவாகப் போகிறது!
உனக்கும் எனக்கும்
புரிந்தால் போதும்
என உணர்ந்திருக்கிறேன்.
நீ உணர்ந்திருக்கிறாயா?
உணர்ந்தே இருப்பாய்
என்றுணர்கிறேன்

ஏனெனில்
அப்பொழுதும்
இப்பொழுதும்
எப்பொழுதும்
நான்
தங்கை..
நீ
அண்ணன்.

1 comment:

  1. எனக்கென்று, எனக்குமட்டுமே என்று எழுதப்பட்ட கவிதையாக எடுத்துக்கொள்கின்றேன்.. நீண்டநாட்களுக்குப்பின் என் வலைப்பூவின் பக்கம் வந்தபோதுதான் உன் வரைவுகளை காண்கின்றேன், அருமையாக உள்ளன, உன் கவிதைக்கு உயிர் உண்டு, என்றும் அன்புடன்,
    அண்ணன்.

    ReplyDelete