Thursday, June 28, 2012

Take Care!!!


செல்போன் பற்றி எழுதி ஒரு வாரம் ஆகவில்லை. அதற்குள் செல்போனினால் ஏற்பட்ட இரண்டு விபரீத விபத்துகள் பற்றி எழுத வேண்டியதாகிவிட்டது. ஒன்று நேற்றிலிருந்து சென்னையை பதற வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா மேம்பால பேருந்து விபத்து. இது எல்லோரும் அறிந்தது. மற்றது நான் மற்றும் என் அலுவலகத்தினர் அறிந்த ஒரு வாடிக்கையாளர் மனைவிக்கு ஏற்பட்டது.

முதலாவதில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் மற்றும் உதவிக்கு வந்தவர்கள் கூற்றுப் படி, பேருந்து ஓட்டுனர் கையில் இரண்டு செல்போன்கள் வைத்திருந்தார். பேச்சு சுவாரசியத்தில், சாலையைக் கவனியாமல், ஓட்டியதில், நிகழ்ந்ததே இந்த விபத்து என்பது செய்தி. எவர் மீது குற்றம் என்றாலும், பாதிப்பு பேருந்தில் இருந்தவர்கள் அனைவருக்குமே. வேலைக்கு செல்பவர்கள், இரவுப் பணி முடிந்து வீட்டுகுத் திரும்புபவர்கள், மருத்துவமனைக்குச் செல்பவர்கள், பள்ளி/கல்லூரிகளுக்குச் செல்கிறவர்கள், பொருள் வாங்க/விற்கச் செல்பவர்கள் என அத்தனை பேரும் பாதிக்கப்பட்டு, தாங்கள் சம்பந்தப்படாமலே, தங்கள் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதை மெளன சாட்சிகளாக கவனித்தவாறு கட்டில்களில் கிடக்கிறார்கள். இது முதல் தரம் அல்ல. ஆண்டிற்கு சில நூறு விபத்துக்கள் இவ்வாறே நடக்கின்றன. செல்போன் பேசியவாறு தொடர்வண்டிப் பாதைகளைக் கடப்பவர்கள், நெடுஞ்சாலைகளைக் கடப்பவர்கள், காதை கழுத்தோடு ஒட்டிக் கொண்டு, தலை சாய்த்து செல்போன் பேசியவாறே, பக்கத்தில் பயணிப்பவர்களை பதறச் செய்பவர்கள், ட்ராபிக் சிக்னல்களி, எந்தப் பக்கம் வாகனங்கள் வந்தாலும் கவலை இல்லாமல், தான் உண்டு, தன் செல்போன் உண்டென்று மற்றவர்களை சிதறடித்து, கலங்கடித்து, சாலையக் கடப்பவர்கள் என விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன, மக்கள் இவை யாவற்றையும் பரபரப்புச் செய்திகளாக பார்த்து விட்டு மறந்தும் போகிறார்கள். யாரைச் சொல்லி நோவது?

இரண்டாவது, திரு. மகேக்ஷ் அவர்களின் மனைவிக்கு நேர்ந்த விபத்து பற்றியது. திங்களன்று மகேக்ஷ் என் அலுவலகத்திற்கு வந்த போது முகம் வாடியிருந்தது. நகைக் கடன் வேண்டி அவர் என்னை அணுகியபோது, என்னாச்சு மகேக்ஷ்! வீட்டில் எவ்வாறு இருக்கிறார்கள் என்றேன். அவர் மனைவியை பற்றித்தான் அவ்வாறு விசாரித்தேன். அதை ஏன் கேட்கறீங்க மேடம். இங்கே வந்து போன அன்றக்கு மறுநாள் மாடியிலிருந்து தவறி விழுந்து, கால், கை எலும்புடைந்து MIOT HOSPITALல் சேர்த்திருகிறோம். அவங்க செலவுக்காகத்தான் நகையை வைக்க வந்தேன் என்றார்.

மகேக்ஷ் தன் திருமணத்திற்குப் பின் முதல் முதலாக தன் மனைவியை, வெளியில் அழைத்து வந்தது  இரண்டு வாரத்துக்கு முன்புதான். வேலை வேலையென்று சுமார் ஆறு மாதங்கள் கழித்து, மகேக்ஷ் தன் மனைவியை முதல் முதலாக அழைத்து வந்த வெளியிடம் சாட்சாத், என் அலுவலகம் தான். பழம், பூ, காரம், இனிப்பு வகைகள் என அனைத்தும் கொணர்ந்திருந்தனர் இருவரும். மீட்க வேண்டிய நகைகளுக்கான பணத்தைக் கட்டி விட்டு, காத்திருந்த நேரத்தில், அழகான அவர் மனைவியை என் அறைக்குள் அமர வைத்து, தேனீர் தந்து உபசரித்தோம். நகைகளை மீட்டுக் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருவரும் சென்றனர். பிறகென்ன ஆயிற்று? அதிர்ச்சியுடன் மகேக்ஷிடம் வினவினேன். மேடம் இங்க வந்து சென்றதுதான் நாங்க வெளியேன்னு வந்தது. மறுநாள்,  மாடியில செல்போன்ல  தடுப்புச் சுவரோரம் நடந்து கொண்டே பேசிக்கிட்டிருந்தவங்க, கையோ காலோ தடுக்கி விழுந்துட்டாங்க. இன்றைக்கு வரைக்கும் நடக்க முடியவில்லை என்றார் பரிதவிப்புடன். நகைகளைப் பார்த்தேன், அன்று மீட்டுச் சென்ற நகைகள். செல்போன் சுவாரசியம், எதில் முடிந்திருக்கிறது என்று என்னால் வேதனையோடு சிந்திக்கத்தான் முடிந்தது. இதுவும் முதலாவதல்ல. எத்தனை மகேக்ஷ்கள், அவர்கள் மனைவிகள்.

செல்போன் பேசுபவர்கள் கவனிக்க!

No comments:

Post a Comment